அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும்போது தான் அதன் வகைகளை அடையாளம் காண முடியும்.
எனவே மரபணு ரீதியிலான சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் உருமாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதுதான் வைரசின் இயல்பு. பிரிட்டனிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, பிரேசிலில் கண்டறியப்பட்ட ‘பி.1’ கொரோனா ஆகியவை வேகமாக பரவும் தன்மை உடையவை.
இவற்றில் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.
இந்த பாதிப்பை திறம்பட எதிர்கொள்ள சிகிச்சை முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொற்று பரவல் தொடர்பான விவரங்களை கண்டறிய தொடர் பரிசோதனை செய்ய அதிக முதலீடு தேவை.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற உடனே புதிய நிர்வாகம் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்தது.
அதிகமானோருக்கு விரைவாக தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காகவே இந்த இலக்கை அவர் வெளியிட்டார். இத்தனை பேருக்குத்தான் தடுப்பூசி போட வேண்டும் என்று வரையரை எதுவும் செய்யப்படவில்லை.
பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
25.01.2021 12 : 30 P.M