தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த காலத்திலிருந்து பார்த்தால் துவக்கத்தில் சில ஆரோக்கியமான எதிர்வினைகள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.
சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பு பாரதி தமிழ்ப் பத்திரிகை உலகில் இயங்கிய விதம் இன்றுள்ள வறட்சியோடு ஒப்பிட்டால் வியப்பூட்டும் விஷயம்.
அப்போதைய சமகால அரசியலை அதன் கட்டுப்பாடுகள், நெருக்கடிகளை மீறி, சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்களில் பாரதி தொடர்ந்து இயங்கிய விதத்தைக் கவனித்தால் தன்னுடைய இருத்தலுக்கான சிக்கலை மீறி தன்னுடைய அரசியல், சமூக விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதைச் சுலபமாக உணர முடியும்.
இப்போதும் பாரதியின் சமூகம் சார்ந்த எழுத்துக்கள் மீது பல விமர்சனங்கள் விழுந்திருந்தாலும் சமகால அரசியலை விமர்சித்த விதமும், அதிலிருக்கும் வெக்கையும் புறக்கணிக்க முடியாத ஒன்று.
அப்போது வத்தலக்குண்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பாரதி’ என்கிற சிறு பத்திரிகை ஆசிரியரை அடிக்கடி அவருடைய எதிர் விமர்சனத்திற்கு கைது செய்கிறது அப்போதைய அரசு. விடுதலையானதும் அவர் அதே அரசியல் விமர்சனத்தைத் தயக்கமின்றித் தொடர்ந்திருப்பதையும் கவனிக்க முடிகிறது.
இதேபோல வ.வே.சு.ஐயரின் சாதியம் சார்ந்த சில அணுகுமுறைகள் மீதுள்ள விமர்சனங்களைக் கடந்து, ஆங்கிலேய அரசை அவர் எதிர்த்த விதத்தைப் பார்க்கும்போது அது ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.
டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் போன்றவர்கள் தினமணியில் செயல்பட்ட விதமும், அவர்களிடமிருந்த அரசியல் வேட்கையும் முதிர்ச்சி நிறைந்தவை. கல்கியின் படைப்புகளில் குறை காண்பவர்கள் அவருடைய அரசியல் விமர்சனங்களில் குறை காண முடியாது.
அப்போதும் வணிக நோக்கம் இருந்தாலும் அதை மீறிய அரசியல் பார்வை அவர்களை இணைக்கிற பொதுச் சரடாக இருந்தது. அந்தச் சரடு படிப்படியாக இற்றுப்போய் வணிக நோக்கங்கள் முதன்மைபட்டுப் போட்டிகளும் பலப்பட்ட காலத்தில் அரசியல் விமர்சனங்கள் எந்த அளவுக்கு இங்கு செய்யப்பட்டிருக்கின்றன?
அறுபதுகளின் துவக்கத்திலிருந்து காங்கிரஸ் எதிர்ப்பைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தியதை திராவிட இயக்கம் அப்போது நடத்தி வந்த இதழ்கள் வழியே புரிந்துகொள்ள முடியும். ஆளும் கட்சியை எதிர்ப்பது என்ற அம்சம் தான் எதிர்க்கட்சிகளின் அரசியலானது. அதே பார்வை தான் பத்திரிகைகளின் பார்வையுமானது.
மத்தியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில்தான் இந்திய அளவில் பல பத்திரிகைகள் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுத்தன.
இந்திரா காந்தி திரும்பவும் ஆட்சிக்கு வந்த பிறகு அதே உணர்வு பரவலாகவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை ‘துக்ளக்’ பத்திரிகையின் மூலம் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தனரான சோ, சில நெருக்கடியான அரசியல் சூழலை எதிர்த்து வந்திருந்தாலும், தொடர்ந்து காட்சி ஊடகங்களில் தமிழகம் சார்பில் அரசியல் விமர்சனங்களைச் சொல்பவராக இடம்பெற்றாலும் அவருடைய சில சார்புகள் அவருடைய கருத்துக்களை வலுவிழக்க வைத்தன.
சின்னகுத்தூசி, சோலை போன்றவர்கள் எதிர்க்கட்சியாக அவர்கள் சார்ந்த கட்சிகள் செயல்பட்டபோது காட்டிய தீவிரத்தை அவர்கள் சார்ந்த கட்சிகள் ஆளும் கட்சியானபோது காட்ட முடியவில்லை.
ஞானியைப் போன்று ஒரு சிலர் தொடர்ந்து பத்திரிகைகளில் தனக்கென்று கிடைத்த குறிப்பிட்ட பக்கங்களில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தாலும் அந்தந்தப் பத்திரிகைகளில் தொடர்ந்து அவர்கள் எழுத முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.
இதற்கு இன்னொரு விதத்தில் பத்திரிகை மற்றும் ஊடக உரிமையாளர்களுக்கு வணிக நோக்கம் இருந்ததே தவிர மக்கள் நலன் சார்ந்து, அவர்களுக்கான பார்வையோடு இயங்க வேண்டும் என்கிற நோக்கம் துளியும் இல்லை.
பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.பி.சாவந்த் சொன்னபடி “இந்திய ஊடகச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் அல்ல. பத்திரிகை உரிமையாளர்களுக்கான சுதந்திரம்”.
இதுதான் இந்தியா முழுக்க உள்ள நடைமுறை உண்மை. இதைத் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு ஊடகங்களில் நிலவும் வணிக ரீதியான போட்டி மயமான பொதுத் தன்மையை மீறி பெரும்பான்மை மக்களுக்கான அரசியல் பார்வையுடன் சில விஷயங்களையாவது வெளிப்படுத்த விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் மேலே சொன்ன பி.பி.சாவந்த்தின் கருத்தை ஏதோ ஒரு விதத்தில் வழிமொழிந்திருப்பார்கள்.
என்னுடைய அனுபவத்திலும் பலமுறை இதை உணர முடிந்திருக்கிறது. இலங்கைப் பிரச்சனை தீவிரப்பட்ட ஒரு தருணத்தில் இடைநிலை இதழ் ஒன்றின் ஆசிரியராக நான் பணியாற்றிய போது, அரசு இயந்திரமான காவல்துறை தரப்பிலிருந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பான எழுத்துக்களை முன் வைப்பதற்கு எதிர்ப்பு வெளிப்பட்டதும், நிர்வாகம் இலங்கைப் பிரச்சனை குறித்து எதுவும் எழுதக் கூடாது என்கிற உத்தரவைப் பிறப்பித்தது ஒரு உதாரணம்.
தமிழில் எத்தனையோ தொலைக்காட்சி ஊடகங்கள் இருந்தாலும், இலங்கையில் இன ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்பட்டிருந்த நேரத்தில் எந்தத் தொலைக்காட்சிகளும் அந்தக் கொடுமைகளை முன்வைக்கவில்லை.
சேனல்-4 போன்ற ஆங்கில ஊடகமும், டைம்ஸ் நவ் போன்ற வடக்கத்திய தொலைக்காட்சி ஊடகமும் வெளிப்படுத்திய அளவுக்குக்கூட இங்குள்ள தொலைக்காட்சி ஊடகங்கள் ஏன் ஒளிபரப்பவில்லை என்கிற எளிய கேள்வியை இதைப் படிப்பவர்கள், எழுப்பினாலே போதும். தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் சுதந்திர எல்லையைப் புரிந்து கொள்ள முடியும்.
நிறைவாக இப்போதைய பிரஸ் கவுன்சில் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் பேசியிருப்பது எவ்வளவு பொருத்தம்?
“இந்திய ஊடகங்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகின்றன.
உண்மையான பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து தீர்வு காணாத் தூண்டாமல், பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறது. சினிமா நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான விஷயங்களைப் பெரிதுபடுத்தி நாட்டுக்குத் தேவையானவை அதுதான் என்பது போல் பிரமையை உண்டாக்குகின்றன. இந்த மாதிரியான மயக்கமூட்டும் சூழலில் எங்கிருந்து ஆரோக்கியமான அரசியல் வெளிவரும்.
நன்றி: உயிர்மை, டிசம்பர்-2011 இதழில் வெளிவந்த கட்டுரையிருந்து.
24.01.2021 2 : 30 P.M