யானையின் தோல் ஏறத்தாழ ஓர் அங்குலம் அல்லது 2.5 சென்டி மீட்டர் வரை தடிமனானது. ஆனாலும்கூட, தன்மேல் ஓர் ஈ உட்கார்ந்தாலும் யானையால் அதை உணர்ந்து கொள்ள முடியும்.
தடித்த தோலும் பேருருவமும் கொண்ட யானை தேனீக்களைக் கண்டால் பயப்படும். தேன் கூட்டின் மணத்தை உணர்ந்தாலோ, தேனீக்களின் ரீங்காரத்தைக் கேட்டாலோ காதுகளை விசிறி காலால் புழுதியைக் கிளப்பி, யானை ஒலி எழுப்பும்.
இவ்வளவு பேருருவம் படைத்த யானை தேனீயைக் கண்டு கலவரம் அடைவது ஏன்?
யானையின் கண்கள், தும்பிக்கை, வாய் போன்ற உணர்வு ரீதியான பகுதிகளில் தேனீக்கள் கொட்டி விடலாம் என்ற பயம் யானைக்கு உண்டு. இதனால்தான் தேனீக்களின் ரீங்காரம் யானையை மிரளச் செய்கிறது.
காட்டில் கொசுக்கள், சிலவகை பூச்சிகளுக்கும் யானை பயப்படுவதுண்டு.
அதுபோல எலி, எறும்புகளைக் கண்டாலும் யானை விலகிச் சென்று விடும். எறும்பு காதில் புகுந்து விடும் என்றோ, எலி தும்பிக்கைக்குள் நுழைந்து விடுமோ என்று யானை பயந்து விலகுவதில்லை.
எலியின் விரைவான ஓட்டம் யானைக்குப் பிடிப்பதில்லை. தன்னைச் சுற்றி திடீரென நடக்கும் எந்த ஒரு விரைவான அசைவையும் யானை விரும்பாது.
அதுபோல எறும்புகளால் தன் நுண்ணுறுப்பான தும்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் எறும்பு மொய்க்கும் இடங்களைக் கண்டால் யானை தூர விலகிக் கொள்ளும்.
(இவ்வளவு நுண்ணிய உணர்வுகள் கொண்ட ஒரு விலங்கு யானை. அந்த யானை மீது எரியுற டயரைத் தூக்கி வீசுறீங்களே. வெளங்குவீங்களாடா நீங்க?)
– மோகன ரூபன்
23.01.2021 4 : 30 P.M