தொழிலாளியிலிருந்து முதலாளி!

தொழில் நுணுக்கத் தொடர்: 15

அடர்ந்த காடு அது. த்ரில்லிங்குக்காக ஒரு நிறுவன முதலாளி, தனக்கு அடுத்துள்ள இரு உப அதிகாரிகளுடன் காட்டில் பயணிக்கிறார். அப்போது, அற்புத விளக்கு போல ஒன்று பாதையில் தட்டுப்பட, “என்னன்னு பாரு!” என்கிறார் முதலாளி.

ஓர் உப அதிகாரி அதைக் கையில் எடுத்து, ஆர்வக்கோளாறுடன் தேய்த்துப் பார்க்கிறார். படக்கென காற்றில் விரிகிறது பூதம். மூவரும் மிரண்டு பார்க்க… உத்தரவு கேட்கிறது வந்த பூதம். உப அதிகாரிக்கு குஷி.

பல்வேறு யோசனைகள் செய்துவிட்டு, “உலகின் சொர்க்கம் என்று சுவிட்சர்லாந்தைக் கூறுகின்றனர், அங்கேயே வாழ்நாள் முழுக்க தங்க ஆசைப்படுகிறேன்…” என்றார். அடுத்த வினாடி அவர் சுவிட்சர்லாந்துக்கு பார்சல்.

இரண்டாவது உப அதிகாரியும் ஆர்வத்தோடு விளக்கைத் தேய்க்கிறார். “எனக்கு உலக கோடீஸ்வரனாக அமெரிக்காவில் வாழ ஆசை என்கிறார்…” அவரும் மாயம்.

தனி ஆளாக நிற்கிற முதலாளியும் விளக்கைத் தேய்க்கிறார். பூதம் வெளியாகி, “உங்களை எங்கே கொண்டு செல்லவேண்டும் பிரபு…?” என்று பவ்யமாகக் கேட்கிறது.

“எங்கேயும் கொண்டு போக வேண்டாம். இப்போது மாயமானார்களே இரு முட்டாள்கள்… அவர்கள் இருவரும் உடனடியாக இங்கே வந்து பழையபடி என்னிடம் வேலையைத் தொடர வேண்டும்…”

இரு உப அதிகாரிகளும் அங்கே வந்து சேர்ந்து, திருதிருவென விழித்தனர். கதை இங்கே முடிகிறது.

கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது என்பதுதான் ஒருவரிடம் அடிமைப்பணி ஆற்றுவதில் உள்ள சிக்கல். எதையும் சுயமாகத் திட்டமிட முடியாது. சொல்வதைக் கேட்கும் ரோபோவாக இருப்பதைவிட, சுதந்திரமாக இருக்க விரும்புவோருக்குத் தொழில்கள் எப்போதுமே கைகொடுக்கும்.

இதுபோல் வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்க நினைத்த சிலரது கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

என் கணவர் டிராவல்ஸ் தொழில் நடத்துகிறார். நான் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக நல்ல சம்பளத்தில் பணியாற்றுகிறேன். என் கணவர் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பொறுப்புகளைக் கவனிக்கச் சொல்கிறார். இது சரியாக வருமா?
– சகுந்தலா தேவி, கொடைக்கானல்.

பொதுவாக ஆண்களுக்கு, தாம் நடத்துகிற தொழில் மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கிறபோது, மனைவியைப் போன்று நம்பகத்தன்மை மிகுந்த ஒருவர் உடன் இருந்தால் தேவலை என்ற எண்ணம் தோன்றும். இதுபோன்ற தருணங்களில் வெளி இடங்களில் பணியாற்றி, கை நிறையச் சம்பாதிக்கும் பெண்கள் அவ்வாறு முடிவெடுப்பது சற்று சிரமமே.

இதில் சில நன்மைகள் உண்டு. உங்களை முழுக்க நம்பி உங்கள் கணவர் அக்கவுண்ட்ஸ் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவரால் தொழிலில் முழுமையாகக் கவனம் செலுத்தி கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.

இதனால் உங்கள் கணவரது தொழிலில் கிடைக்கிற மொத்த லாபமும் உங்கள் குடும்பத்துக்கே வந்துசேரும். அத்துடன், தொழில் நுணுக்கம் முழுவதையும் நீங்கள் கற்றுக் கொண்டு, பிற்காலத்தில் தொழிலின் முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்த வாய்ப்பு கிட்டலாம்.

உங்கள் கணவரோடு நீங்கள் பணிபுரிவதால் அலுவலகத்தில் நீங்கள் பணிபுரிய வேண்டிய நேரத்தை உங்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்திக் கொள்ளலாம். விடுமுறை எடுக்கலாம். உற்றார் உறவினர் வரும்போது வீட்டிலிருந்தே கூட பணியாற்றலாம்.

அதேசமயம், தொழிலில் ஏதேனும் நஷ்டம் ஏற்படுமானால் இரண்டு பேரின் வருமானமும் கேள்விக்குறியாகிவிடும். உங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர் உங்களுக்கும், உங்கள் கணவருக்குமாக மொத்தம் 2 முதலாளிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய அசௌகரியம் ஏற்படும். உங்களுக்குள்ளும், சில பணியாளர்களை நிர்வகிப்பதில் கருத்து வேறுபாடுகள் எழலாம்.

நீங்கள் உங்கள் கணவரோடு 24 மணி நேரமும் ஒன்றாகவே இருப்பதால், சின்னச் சின்ன குடும்ப சண்டைகள் கூட தொழிலில் எதிரொலித்து தொழில் பாதிக்கப்படலாம். எந்நேரமும் கணவருடனேயே இருப்பதால், உங்கள் பிரைவசி போய்விடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் கணவரது அனுசரித்துப் போகும் குணம், அத்தொழிலின் எதிர்காலம், அத்தொழிலுக்கு நீங்கள் செலவழிக்க வேண்டிய நேரம், உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றையும் ஒப்புநோக்கி பிறகு முடிவெடுங்கள்.

எனக்கு வயது 35 ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, என் பெற்றோருடன் வசித்து வருகிறேன். வசதிக்குக் குறைவில்லை என்றாலும் கூட, என்னுடைய சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன். ஆனால் நான் வாழ்க்கையில் தோல்வியுற்ற காரணத்தால் என் தந்தையைத் தவிர என்னைச் சுற்றியுள்ள அனைவரும் என்னை டிஸ்கரேஜ் செய்கிறார்கள். நான் இன்னொரு தோழியோடு இணைந்து இன்டீரியர் டிசைனிங் தொழிலில் ஈடுபட விரும்புகிறேன். என்னால் முடியுமா?
– ஆர்.சந்தியா, தூத்துக்குடி

நீங்கள் கார் ஓட்டி இருக்கிறீர்களா? காரின் முன்புறக் கண்ணாடி பெரிதாகவும், பின்புறம் பார்க்கக்கூடிய ரியர்வியூ மிரர் சிறிதாகவும் இருப்பதன் நோக்கம் என்ன தெரியுமா? முன்புறத்தில் 90 சதவிகிதக் கவனமும், பின்புறத்தில் 10 சதவிகிதக் கவனமும் நமக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நீங்கள் உங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மேலும் விவாகரத்து என்பது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தது. இதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிற இல்லத்தரசிகளை விட நீங்கள் உங்கள் குடும்பத்துக்காக ஒதுக்க வேண்டிய நேரம் சற்றுக் குறைவே.

தொழிலுக்கென கூடுதல் நேரத்தை ஒதுக்கி, நீங்கள் வெற்றி பெற முடியும். உங்களை எப்படி வெளிப்படுத்துகிறீர்களோ அப்படித்தான் உங்களை உலகம் பார்க்கும். நீங்கள் உற்சாகத்தோடும், சுறுசுறுப்புடனும் உங்களை வெளிப்படுத்திக் கொண்டால், உலகம் உங்களை தன்னம்பிக்கை உள்ளவராகத்தான் பார்க்கும். எனவே நீங்கள் உற்சாகத்தோடு தொடர்ந்து இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய உள் அலங்கார வடிவமைப்புத் தொழில் என்பது சேவை தொழிலாகும். இதில் முதலீட்டுக்கு அதிகப் பணம் தேவையில்லை. இதனால், பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்பதால், தைரியமாக ஈடுபடலாம்.

தூத்துக்குடி போன்ற சிறிய ஊரில் இந்தத் தொழிலுக்கான வரவேற்பு, எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு ஒரு சிறிய சந்தை ஆய்வை மேற்கொள்ளுங்கள்.

அதாவது தூத்துக்குடியில் எத்தனை உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பிசியாக சேவை புரிகிறார்கள்? என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டால் இத்தொழிலில் இறங்குவது சரிதானா என்ற தெளிவு கிடைக்கும்.

ஒரு பங்குதாரரோடு இணைந்து தொழில் புரிவது என்பது கிட்டத்தட்ட மாமியார்-மருமகள் கதைதான். தொழிலில் ஏற்படும் லாப நஷ்டத்திலும், ஆலோசனையிலும் அனுசரித்துப் போக வேண்டும். ஒருவேளை நீங்கள் சுதந்திரத் தன்மையோடு இயங்க விரும்பினால், தனியே தொழில் தொடங்குவது நல்லது.

நான் டி ஃபார்ம் முடித்து, மருந்துக்கடையில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். தற்போது புதிதாக ஒரு மருந்துக்கடை தொடங்க ஆசைப்படுகிறேன். இதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. என்னிடமும் 50,000 ரூபாய் மட்டுமே உள்ளது. மீதித் தொகையை கடனாகப் பெறலாமா?
– ஸ்ரீ காயத்ரி தேவி, மேட்டூர்.

ஒரு தொழிலில் நீங்கள் ஒரு ரூபாய் முதலீடு செய்தால், அதிகபட்சமாக இரண்டு ரூபாய் வரை கடன் வாங்கலாம். இது தான் வணிக நியதி. நீங்கள் ஒரு ரூபாய் முதலீடு செய்துவிட்டு ஐந்து ரூபாய் வரை கடன் வாங்கலாமா எனக் கேட்கிறீர்கள், இவ்வளவு அதிகத் தொகையைக் கடனாக வாங்கினால், நீங்கள் லாபமாக ஈட்டுகிற பணமெல்லாம் வட்டித் தொகைக்கே செலவழிந்து விடும்.

கடையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பே இருக்காது. மாறாக, கடைக்கான முதலீட்டை மூன்று லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சமாகக் குறைத்து சிறிய கடையாகத் தொடங்கி, படிப்படியாக முன்னேறப் பாருங்கள்.

சில்லறை தொழிலில் உள்ள சிரமம் என்னவென்றால், நீங்கள் கஷ்டப்பட்டு உங்கள் கடையை வளர்த்தெடுக்கிறபோது அருகில் இன்னொரு மருந்துக்கடை தொடங்கப்பட்டால், உங்கள் விற்பனை பாதியாகக் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.

அதுபோன்ற நேரத்தில் வர்த்தகத்தை வளர்த்தெடுக்கவும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே கடனைக் குறைவாக வாங்குவதே நல்லது.

நான் ஒரு ரெடிமேட் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறேன். வயதான மாமியார், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் உடன் இருப்பதால் அவர்களை கவனித்துக் கொள்ள அவ்வபோது விடுமுறை எடுக்க வேண்டி இருக்கிறது. பல நாட்கள் என்னால் குறித்த நேரத்திற்குச் செல்ல முடிவதில்லை. மாறாக, எனக்கு கிடைக்கிற நேரத்தில் வேலை செய்து நிம்மதியாக இருக்கும் வகையில் நானே சுயமாக ஒரு தொழில் தொடங்கலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆலோசனை என்ன?
– ஏ.பிரியா தமிழ்ச்செல்வி, திருப்பூர்

“என்னால் ஒழுங்காக வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் தொழில் தொடங்குகிறேன்” என்ற காரணம் புதுமையாக உள்ளது. கேள்வி நியாயமாக இருந்தாலும், நடைமுறை யதார்த்தம் வேறு என்பதை உணர வேண்டும். ஒரு தொழிலில் ஈடுபட வேண்டுமானால் அதற்கு மிக அதிகமான உழைப்பு தேவை.

கிடைக்கிற நேரத்தில் தொழில் புரியலாம் என்று நீங்கள் எண்ணுவது தவறானது. ஒரு தொழிலில், தொழில் முனைவர் எவ்வளவு நேரம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அந்தத் தொழில்தான் நிர்ணயிக்கிறது. இதுவே வணிக விதி.

ஆரம்பத்தில் உங்களுக்குக் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் நீங்கள் தொழிலைத் தொடங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல உங்களது வாடிக்கையாளர்கள் அழைக்கின்ற போதெல்லாம் நீங்கள் சென்றாக வேண்டும். தொழில் வளர வளர சப்ளையர்கள், ஊழியர்கள், ஆடிட்டர், வங்கியாளர், பொருள் கொள்முதல் விற்பனை என பல்வேறு விதமான வேலைகள் உங்கள் தலைமேல் குவிந்துவிடும்.

தொழில் என்று வந்துவிட்டால், பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்களது முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே நான் செலவழிப்பேன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், தொழில் உங்களுக்குச் சரிப்பட்டு வராது. வேண்டுமானால், நேரத்தை அடிப்படையாகக் கொண்ட சில தொழில்களான ப்ளே ஸ்கூல், டியூஷன் சென்டர் போன்றவற்றை நடத்தலாம்.

(தொடரும்…)

– ராம்குமார் சிங்காரம்

http://ramkumarsingaram.com

23.01.2021   02 : 52 P.M

Comments (0)
Add Comment