ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு.
ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத் தெரிவித்த நிலையிலும், ஜனவரி 27-ம் தேதி வேதா இல்லம் திறக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 28 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
இதே வேதா நிலையத்தின் பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாமா?
***
சென்னை தேனாம்பேட்டையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இடம், இந்த அளவுக்குப் பிரபலமாகப் போகிறது என்று 1967 ஆம் ஆண்டுக்கு முன்னால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
1967. ஜூலை மாதம் 15 ஆம் தேதி.
ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் அம்மா சந்தியா என்கிற வேதவள்ளி 24 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலத்தை வாங்கினார். அப்போது அதன் விலை 1.32 லட்சம் ரூபாய்.
மைசூரிலிருந்து சென்னைக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா – இரு குழந்தைகளுடன் வந்து தன்னுடைய தங்கை வித்யாவதியின் வீட்டில் தங்கியிருந்தார் சந்தியா. அவருடன் சேர்ந்து நாடகங்களிலும், சினிமாவிலும் நடித்தார்.
பிறகு அடையாறு காந்தி நகரில் வாடகை வீட்டுக்குக் குடிபோனார். அடுத்து தி.நகரில் உள்ள சிவஞானம் தெருவில் உள்ள வீட்டுக்கு மாறினார்.
சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அப்போது சந்தியாவுக்கு இருந்த கனவு.
அதற்குள் வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன் என்று அடுத்தடுத்து வெற்றி. பல மொழிப்படங்கள். அப்போது அதிகபட்சமான சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெயர். பிஸியான நட்சத்திரமாக இருந்த ஜெயலலிதா, அம்மாவைத் தான் பெருமளவில் சார்ந்திருந்தார்.
வீடு கட்டுகிற திட்டத்தை எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா சொன்னதும் வாங்கிய நிலப்பத்திரத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று சரி பார்த்தார் எம்.ஜி.ஆர்.
வீட்டுக்கான வரைபடம் ஜெயலலிதாவின் விருப்பப்படியே தயாரானது. ஏறத்தாழ 21 ஆயிரத்து 662 சதுரப் பரப்பில் கட்டடத்தைக் கட்டுவதற்கான வேலைகள் துவங்கியது.
சந்தியாவின் மேற்பார்வையில் வீட்டு வேலைகள் பாதி நிலையைக் கடந்தபோது சந்தியாவுக்கு உடல்நலம் சட்டென்று பாதிக்கப்பட்டது. 1971 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாளே மறைந்தார்.
மனமுடைந்து போனார் ஜெயலலிதா. அந்த இழப்பை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. நண்பர்களும், உறவினர்களும் தேற்றினார்கள்.
அப்போது குமரிக்கோட்டம், ஆதிபராசக்தி, சவாலே சமாளி போன்ற படங்களில் நடித்துக் கொண்டே வீட்டைக் கட்டிமுடித்தார். உயர்ந்த கிரானைட் கற்களாலான சுவர்கள். மார்பிள் தரை. பளிச்சென்ற தேக்கு மரக்கதவுகள். தன்னுடைய கனவுக்கு வடிவம் கொடுத்ததைப் போல கட்டி முடித்ததும் பூரிப்பானார். வீட்டு முகப்பில் அவருடைய தாயார் வேதவள்ளி என்ற சந்தியாவின் நினைவு ஒட்டியிருந்தது.
‘வேதா நிலையம்’
1972 மே மாதம் 15 ஆம் தேதி கிரகப் பிரவேசம். நாதஸ்வரம் முழங்கியது. சிட்டிபாபுவின் வீணைக்கச்சேரி நடந்தது. சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
சிறு குழந்தையைப் போன்ற மனநிலையில் வந்தவர்களை வீடு முழுக்க அழைத்துக் கொண்டுபோய் ஆர்வத்துடன் சுற்றிக் காண்பித்தார் ஜெயலலிதா.
நீண்ட வரவேற்பறை. இரண்டு மாடிகள். தரைத்தளத்தில் வராண்டா. நான்கு அறைகள். இரண்டு அலுவலக அறைகள். சமையலறை. டைனிங் ஹால். மாடியில் ஜெயலலிதாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு பெரிய அறைகள்.
ஒரு அறையில் அவருக்கு வழங்கப்பட்ட ஷீல்டுகள், பரிசுகள் நிரம்பியிருந்தன. ஆங்கில, தமிழ் நூல்களைக் கொண்ட பெரிய நூலக அறை. ஒப்பனைக்கென்று ஒரு அறை.
உடையலங்காரத்திற்கென தனி அறை. நகைகளை வைப்பதற்கென்று தனியாக ஒரு அறை. அதிலுள்ள நகைகளை வந்தவர்களிடம் காண்பித்தபடி சொன்னார் ஜெயலலிதா, “இவை மைசூர் மகாராஜா என் முன்னோர்களுக்குத் தந்த நகைகள்’’.
பத்திரிகையாளர்கள் அந்த நிகழ்வை நட்புணர்வுடன் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் அந்த விழாவுக்கு எம்.ஜி.ஆரும், சோ-வும் வரவில்லை.
ஜெயலலிதாவின் சித்தி, சித்தப்பா, இன்னொரு சித்தியின் மகள், பனிரெண்டு வேலைக்காரர்கள் என்றிருந்த அன்றைய வேதா இல்லத்தில் பிரியமாக ஜெயலலிதா வளர்த்த ஏழு நாய்களும் இருந்தன. (அவற்றை குழந்தைகள்’ என்று அழைப்பது அவருடைய வழக்கம்)
தன்னை ‘இன்ட்ரோவெர்ட்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிற ஜெயலலிதா மக்கள், சூழ்ந்த நிலையில் இருந்தாலும் தனிமை விரும்பி. நிறைய நூல்களை வாசித்திருக்கிறார். எழுதியிருக்கிறார். கட்டுரைகளும், தொடர்கதைகளும் எழுதிய நிலையில் – ‘அசைட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேரவும் விரும்பி விண்ணப்பித்திருக்கிறார்.
தொடர்ந்து சலிப்புணர்வுடன் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டும் இதே வீட்டில் இருந்திருக்கிறார். ஒரு சராசரிப் பெண்ணாக மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்கிற ஏக்கம் அவரிடம் தொனித்ததையே அவர் அளித்த பேட்டிகள் புலப்படுத்துகின்றன.
“எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை கிடையாது. நான் என் பாட்டிற்கு யார் வம்புக்கும் போகாமல் இருந்து வந்தேன். இப்போது நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். விரைவில் ஒரு கட்சியில் சேர்ந்துவிடலாம் என்று நினைக்கிறேன்’’ (குமுதம் – 20.05.1982 இதழ்)
அ.தி.மு.க.வில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக ஆன பிறகு சுறுசுறுப்பானது வேதா இல்லம். சசிகலாவும் அவருடைய உறவினர்களும் அடுத்தடுத்து உள்ளே நுழைந்தார்கள்.
அரசியலில் நுழைந்தபிறகு பல சோதனைகளைச் சந்தித்ததும் இந்த வீட்டில் தான்.
1996 ல் இங்கு நடந்த வருமான வரிச் சோதனை 144 மணி நேரம் நீடித்தது. ஏழு நாட்கள் நடந்து முடிந்த சோதனையின் போது, 23 கிலோ தங்க நகைகள், 26 ஒட்டியாணங்கள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள், 10 ஆயிரத்து 500 சேலைகள், 19 கார்கள், சொத்துப் பத்திரங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன.
இவையெல்லாம் ஜெயலலிதா சிறைக்குச் சென்றிருந்த நிலையில் நடத்தப்பட்ட சோதனைகள்.
1997 ஜூன் மாதம் 4 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யப்பட்ட சொத்துகளின் பட்டியலில் வேதா இல்லமும் அடக்கம். முன்பு 43.96 கோடி ரூபாயாக இருந்த இந்த இல்லத்தின் தற்போதைய மதிப்பு நூறு கோடிக்கு மேல்.
தன்னுடைய தாய்க்கு இணையாக ஜெயலலிதா நேசித்தது இந்த வீட்டை. நடிகையான அவர் முதல்வராக பிரமோஷன் ஆனதும் இங்கு தான்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட எத்தனையோ அரசியல் தலைவர்கள் வருகை தந்திருக்கிற இதே வீட்டிலிருந்து தான் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுபடியும் அவர் வசித்த இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்து முடிந்திருக்கிறது.
அரசோ நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவிக்க, அவருடைய குடும்ப வாரிசுகள் எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்ல, ஜெயலலிதா மறைந்த பிறகும் சர்ச்சையில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது வேதா இல்லம்.
அது- சிறு வயதில் பாப் கட்டிங் செய்யப்பட்ட தலையுடன் – குழந்தைத் தனமான முகத்துடன் – எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம்.
யாருடைய பால்யமும் எந்தக் களங்கமும் படியாத இயல்போடு அழகாகத் தானிருக்கும்.
ஜெயலலிதாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
23.01.2021 12 : 30 P.M