இக்காட்டானச் சூழலில், பயத்தை விட புத்திசாலித்தனம் முக்கியம் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
இதுவும் அப்படி ஒரு சம்பவம்தான். கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனேஜர், ராபர்ட் வாட்னர் (Robert Waldner). 17 வயது ஆகிறது. ஸ்கூலில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிற ராபர்ட்டுக்கு பனிமலையில் வாகனம் ஓட்டி விளையாட ஆசை.
இந்தக் குளிர்காலத்தில் மலையில் குவிந்திருக்கும் உறைபனியில் அதற்கான ஸ்னோமொபைலிங் (snowmobiling) வாகனத்தில், சுற்றுலா மாதிரி சென்று வருவது அங்கு வழக்கமானது. விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் ஓகே சொன்னார்.
கடந்த சனிக்கிழமை, அப்பா, தம்பியுடன் ஆளுக்கு ஒரு வாகனத்தில் பனி மலைக்குள் பயணம் சென்றனர். ஓர் இடத்தில், ராபர்ட்டின் தம்பி வாகனம் பழுதாகிவிட, அப்பா உதவச் சென்றார். அதற்குள் ராபர்ட் வேகமாக எங்கோ சென்றுவிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, தான் எங்கோ தப்பி வந்துவிட்டோம் என்பதை உணர்ந்த ராபர்ட், பின்னால் திரும்ப முயன்றார். அந்த இடம் செங்குத்தாக இருந்ததால், செல்வது எளிதாக அமையவில்லை. அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தார். அதற்குள் அவன் அப்பா, பல பகுதிகளில் தேடோ தேடு என தேடித் தவித்துவிட்டார்.
2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கிடைக்கவில்லை என்றதும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தேடத் தொடங்கினர்.
இதற்குள் ராபர்ட், பனிமலையில் செல்லும் வாகனத்தை, எளிதில் தெரியும்படியான ஓர் இடத்தில் வைத்துவிட்டு, அதற்கருகில் ஏழு அடி ஆழத்தில் குகை போல தோண்டினார். அதில் ஜன்னல் ஒன்றையும் உருவாக்கி உள்ளே இருந்து கொண்டார்.
அவர் சுவாசத்தில் இருந்து வந்த காற்று லேசான கதகதப்பை உருவாக்கி இருக்கிறது. தான் கொண்டு வந்ததில் ஒரே ஒரு சாண்ட்விச் மட்டுமே இருந்தது. அதை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை அருந்தியபடி பொழுதைக் கழித்தார். நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை.
விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மிகச் சுலபமாக அவரை கண்டுபிடித்தனர். முதலில் ராபர்ட் வந்த வாகனத்தைக் கண்டுபிடித்த அவர்கள், அருகில் தேடினர். குகைபோல் இருந்த இடத்தில் சென்று பார்த்தால், ராபர்ட் அமர்ந்திருந்தார். அவரை மீட்ட மீட்புக்குழுவினர், அவருடைய புத்திசாலித்தனத்தைப் பாராட்டி, தங்கள் வேலையை எளிதாக்கி விட்டதாகக் கூறியுள்ளனர்.
“ஏன் இப்படி மாட்டிக்கிட்டீங்க?” என்று ராபர்டிடம் கேட்டால், “வீட்டில் இருக்கும்போதே இதுபோன்ற குகைகள் உருவாக்கி பழகி இருக்கிறேன். அதை மனதில் வைத்தே செயல்படுத்தினேன். நான் காப்பாற்றப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்று பதட்டமில்லாமல் தெரிவித்திருக்கிறார் ராபர்ட்.
இதையடுத்து, ‘என்ன ஒரு புத்திசாலித்தனம்’ என்று சோசியல் மீடியாவில் ராபர்ட்டை பாராட்டி வருகின்றனர். மீட்புப் படைகளில் இவரைச் சேர்க்கலாம் என்று ஆலோசனையும் செய்து வருக்கிறார்கள்.
– அழகு
22.01.2021 04 : 50 P.M