எழுவர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதலாவதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கூட குடியரசுத் தலைவர் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நிராகரித்து விட்டார்.

இதற்கிடையே, பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் இறுதி முடிவை எடுப்பார் என்றும், அவருக்குத் தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளதென்றும், அதனால் பேரறிவாளனை விடுவிக்கும் விதமாக எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுத்து அதனை அறிவிப்பார். இதுகுறித்து மத்திய அரசிடமும் அவர் விளக்கியுள்ளார்” என தெரிவித்தார். தொடர்ந்து, வழக்கை அடுத்த நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையிடப்பட்டது.

இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

22.01.2021     12 : 22 P.M

Comments (0)
Add Comment