மக்கள் குரலே மகேசன் குரலாகட்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :

டெல்லி எங்கும் பாலிதீன் போர்த்தியதைப் போலப் பனி. எங்கும் அடர்த்தியான குளிர். இதற்கிடையில் மாநகர எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்துக்கட்டப் பேச்சுவார்த்தை சம்பிரதாயமாக நடந்து முடிந்து விட்டது. இத்தனை பேர் உயிரிழந்து, இத்தனை பேர் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து தாங்கள் தேர்வு செய்த ஆட்சியிடம் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் போராடுவதை என்ன சொல்லிப் புறக்கணிக்க முடியும்?

அண்மையில் அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் தன்னுடைய உரையில் சொன்னதைப் போல, “என்னைத் தேர்ந்தெடுக்காத மக்கள் நலனுக்காகவும் நான் உழைப்பேன்” என்று சொன்னது ஜனநாயக ஆட்சியின் படி பதவியிலிருக்கும் யாருக்கும் பொருந்தும்.

இந்தியாவுக்கும் பொருந்தும். வேளாண் சட்டங்கள் மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்படுகிறது என்றால், சம்பந்தப்பட்ட மக்களுக்குச் சரிவர உணர்த்தப்பட்டு அது அமலாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அது நிராகரிக்கப்படும், யார் என்ன வியாக்கியானம் செய்தாலும்.

நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்கள் பார்ப்பதற்கும், பெரு வணிக நிறுவனங்கள் பார்ப்பதற்கும், விளைவிக்கிற விவசாயி அதே நிலத்தைப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் அதிகாரிகளுக்குப் புலப்படாத ஒன்றல்ல.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக கொண்டுவரப் படுகிறதோ என்று விவசாயப் பெருமக்களின் மத்தியில் வேளாண் சட்டங்களைப் பற்றி இருக்கிற அச்சம் போக்கப்பட வேண்டும் என்றால், விவசாயிகளின் குரலுக்கு அரசு செவி சாய்ப்பது அவசியம்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்களுடைய பார்வையிலிருந்தும் பிரச்சினைகளைப் பார்ப்பது மக்கள் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற எவருக்கும் சிறப்பு.

மக்கள் குரலே மகேசன் குரல் – என்ற பழைய சொல்லாடலை இன்றைக்கும் அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள்!

– யூகி

22.01.2021 11 : 04 A.M

Comments (0)
Add Comment