மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!

நலம் வாழ: தொடர் 3

பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது?

எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி ஆவணப்படம் அதுவும் சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும்.

அதை எவ்வளவு பேர் கவனம் கொடுத்துப் பார்க்கிறீர்கள்? அடுத்து வரப்போகும் படம் பற்றிய ஆர்வத்தில், இதன் மேல் கவனம் இருக்காது என்பது சாதாரண பதில். ஆனால், உண்மையான பதில், அதில் சொல்லப்படும் விஷயத்தைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

உண்மையான நிலவரம் அல்லது, எச்சரிக்கை உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதை ஊன்றிப் பார்த்தோமானால் கடந்து போக முடியாது. அதனால் அதைத் தெரிந்து கொள்வதில்கூட ஆர்வம் காட்டுவதில்லை. ‘போராக இருக்கிறது’ என்ற காரணத்தைச் சொல்கிறோம்.

இதுதான் நமது சாதாரண இணையதள உலாவலுக்கும், இணைய வழிக் கல்வி கற்றலுக்கும் உள்ள வித்தியாசம். பாடத்தை நம்மால் கடந்து போக முடியாது. கவனம் செலுத்த வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். திரும்பச் சொல்லவோ எழுதவோ அல்லது செய்து காட்டவோ தெரிய வேண்டும்.

நமது வாழ்வின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது கல்வி. இதைக் குறிப்பிட்ட சூழலில் கற்றுக்கொள்வது நமக்குப் பழக்கமாகிவிட்டது. அதற்கு மாறாக, நாம் சாதாரணமான சூழல் என நினைக்கும் வழக்கமான இடம், வீடு போன்றவற்றில் இதைக் கற்றுக்கொள்ள நமக்கு மனம் வரவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.

இதற்கு என்ன செய்வது? மிகவும் சுலபமான பதில் இருக்கிறது. “உண்மை நிலையை ஏற்றுக் கொள்வது.” அவ்வளவுதான். இந்த முறைதான் இக்காலத்திய நிதர்சனம். இது எனக்குத் தெரியாதா என்று யோசிக்கலாம். ஆனால் நமக்குப் புரிந்ததை, தெரிந்ததை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோமா? ஏற்றுக்கொள்ள முடிகிறதா? அது போலத்தான் இதுவும்.

இந்த முறையில்தான் இப்போதைக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் மனதில் சலிப்போ, அலுப்போ வராது.

பிற முக்கிய அம்சங்கள்:

மாணவர்கள் இணைய வழி வகுப்பில் உட்காரும்போது, பள்ளியில், வகுப்பில் இருக்க வேண்டிய மன நிலையோடு இருக்க வேண்டும். இதை சொல்வது சுலபம்தான். ஆனால் அப்படி நினைக்க முடியவில்லையே? என்று தோன்றலாம். அவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்களுக்குப் பிடித்த இணையத் தொடரைப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். சிறிது நேரத்திலேயே, சுற்றிலும் உள்ள ஓசைகள், பிற அசவுகரியங்கள் ஆகிய அனைத்தும் மறந்துவிடுகின்றன அல்லவா?

நமது ரசனை அல்லது மனதிற்குப் பிடித்த வகையிலான இணையத் தொடருக்காக பல அசவுகரியங்களைக் கண்டுகொள்ளாமல் விடுகிறோம். அப்படியானால், நமது எதிர்காலத்துக்குத் தேவையான ஒரு விஷயத்துக்கு மட்டும் “நான் விரும்பிய சூழல், எதிர்பார்க்கும் விதத்திலான கற்பித்தல் போன்றவை இருந்தே தீர வேண்டும்” என்று நினைப்பது சரியானதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பழகிய வகுப்புச் சூழ்நிலை இல்லை, சட்டென்று சந்தேகம் கேட்க முடியாது, நண்பர்களுடன் சேர்ந்து இருக்க முடியாது போன்ற பல ‘முடியாது’களைக் காரணம் காட்டி இணைய வழி வகுப்பில் கவனம் செலுத்தாமல் போனால், நஷ்டம் உங்களுக்குதான்.

சக மாணவ நண்பர்களுடன் ஒன்றாக இருப்பது, தெரியாததை அவர்களிடம் கேட்பது, மனம் விட்டுப் பேசுவது போன்றவை இல்லாத நிலையில், அதுவும் இந்தப் பருவத்தில் மனதில் எரிச்சலும் சலிப்பும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், நடப்பது எதுவுமே, சூழ்நிலையால் ஏற்பட்டதே தவிர, வேறு யாரும் காரணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இணைய வழிக் கல்வியால் மாணவர்கள் அதிக நேரத்துக்கு மின்னணுச் சாதனங்களின் முன் செலவிட வேண்டியிருகிறது.  இது, மன அயர்வையும், சோர்வையும், தலைவலி, கழுத்து வலி மற்றும் கண்வலி போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். அதனால் மனதில் அமைதியிமையும், எரிச்சலும் இருக்க வாய்ப்புகள் அதிகம்தான்.

ஆனால், இதை சமன் செய்யும் விதத்தில் நீங்கள் அன்றாடம் சமூக வலைதளங்களில் ‘உலா’ செல்லும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா? அதை யாரும் செய்வதில்லை. வலைதளப் பக்கங்களில் செலவிடும் நேரமும், கல்விக்கான நேரமும் ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக மனமும், உடலும் பாதிப்படையும்தான். கல்வி என்பது எதிர்கால நலனுக்கு. அதேபோல வலைதள பக்கங்கள், எதிர்கால வாழ்க்கைக்கு அவசியத் தேவை என்று சொல்ல முடியுமா?

எனக்கு நடத்துவது பாதிதான் புரிகிறது, சந்தேகம் கேட்கவோ, தெளிவு பெறவோ வழியில்லை என்பது இணையதளக் கல்வி கற்கும் பலரும் கூறும் புகார். உண்மையிலேயே உங்களுக்குப் பாடம் புரிந்தே  ஆக  வேண்டும்.

அதுவும் முழுமையாக என்றால்,  அதற்கு பல வழிகள்  இருக்கின்றன. உங்களது ஆசிரியரை செல்பேசி மூலம் தொடர்பு கொள்வது, இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்வது போன்ற பல வழிகள் இருக்கின்றன.

இப்போது கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், முடிந்தால்  நேரிலும் சந்திக்கலாம். வாட்ஸ்ஆப்பை எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறீர்கள். கல்வி தொடர்பான சந்தேகங்களை போக்கிக் கொள்ள அதற்குத் தகுந்த உங்களது நண்பர்கள் குழுவை உருவாக்கலாம். அதன் மூலம் பரஸ்பர பகிர்தல்கள், சந்தேகம் தெளிவு பெறுதல் போன்றவற்றை செய்யலாம்.

இது எதுவுமே பிடிக்கவில்லை என்றால், யுடியூபில் ‘அ’ எப்படி போடுவது என்பதில் ஆரம்பித்து, அணுவியல் தொடர்பான படிப்பு வரை  விளக்கப்பாட சொற்பொழிவுகள், உரைகள், பாடங்கள் எடுத்தல் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதுவுமே புரியவில்லை, தெரியவில்லை என்ற நிலை அவமானத்துக்கு உரியதல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது மறைப்பதால் பலனில்லை. ‘எனக்குக் குறிப்பிட்ட பாடம், பிரிவு புரியாததற்குக் காரணம் ஆசிரியர்தான், சூழ்நிலைதான், சரியான உபகரணங்கள் இல்லாததுதான்’… என்று சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் உண்மையாகவும் இருக்கும்.

ஆனால் அதே நிலையில் இருந்தால், எதுவும் மாறாது. அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். அதாவது தெளிவு பெறும் நிலைக்கு. நீங்கள் அவ்வாறு முடிவுசெய்தால், அதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது, உங்களுக்கே தெரிந்துகொள்ள முடியும்.

இன்னொரு விஷயத்தை மறந்துவிடுகிறீர்கள். சமூக வலைதளங்கள், இணைய வழித் தொடர்கள், விருப்பமான மற்ற விஷயங்கள் ஆகியவற்றில் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை எழுகிறது. நாம் என்ன செய்வோம்? இரவு பகல் பாராமல் அதை நமக்குத் தெளிவுபடுத்தும் நண்பரை நிச்சயம் கேட்டுத் தெளிவோம் இல்லையா?

முதலில் நாம் ‘முடிந்தவரை’ தேடுவோம். இல்லாவிட்டால், நண்பர்களில் அதற்கு ஏற்றவர் யார்  என்பதை யோசித்துத் தொடர்பு கொள்வீர்கள் இல்லையா? இதே அணுகுமுறை கல்வி தொடர்பான விஷயங்களிலும் இருந்தால் போதும்.

மாணவர்கள் இந்தச் சூழ்நிலையில் குறிப்பிட்ட சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 7  மணி நேரம் இரவில் தூங்குவது மிகமிக முக்கியம். அடுத்து, இணையத்திலிருந்து, ஒவ்வொரு மணி நேரத்திற்கு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது திரையிலிருந்து கண்களை எடுத்து ஓய்வு கொடுக்க வேண்டும்.

இப்போது என்ன செய்கிறோம்? பாட இடைவெளியில், நமது சமூகப்  பக்கங்களுக்குச் சென்று அங்கே சேர்ந்திருக்கும் பதிவுகளைப் பார்க்கிறோம். இது இரண்டு விஷயங்களுக்காக மோசமான பழக்கம்.

முதலில் கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரத்தில் அதை மறுத்து, வேலை கொடுக்கிறீர்கள். இரண்டாவது, நாம் பார்க்கும் பதிவுகள் மனதில் சில கேள்விகளை, எண்னங்களை, நினைவுகளை ஏற்படுத்தும். நமக்குப் பிடித்ததும் இருக்கலாம். பிடிக்காததும் இருக்கலாம்.

சிலவற்றுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற நினைப்பும், அதற்கான நேரம் இல்லையே என்ற பரிதவிப்பும், அது தொடர்பான கோபமும், எரிச்சலும் மனதில் உருவாகும். இப்படி மனம் நிறைய நினைவுகளுடன், மூளை நிறைய அடுத்து செய்ய வேண்டிய, ஆனால் செய்ய முடியாத நிலை பற்றிய எண்ணங்களுடன் இணையக் கல்விக்கு மீண்டும் செல்லுவோம். என்ன நடக்கும்? பிரச்சினைதான்.

நீங்கள் அனுபவிக்கும் பல விஷயங்களுக்கு, எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஆதி புள்ளி நீங்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இது பெரும் சாதகமான விஷயமும் கூட. ஏனென்றால், குறிப்பிட்ட சூழ்நிலையை சரி செய்ய, பிரச்சனையைத் தீர்க்க, மற்றவர்களின் உதவி தேவை என்று வைத்துக் கொள்வோம்.

அதற்காக மெனக்கெட வேண்டும். அவர்களை சரிக்கட்டவேண்டும். எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பிரச்சினைகளின் தீர்வே உங்களுக்குள், உங்களது முயற்சிகளுக்குள்தான் அடங்கி இருக்கிறது என்பது நல்லதுதானே?

***

கட்டுரையாசிரியர் டி.ஐ.ரவீந்திரன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் மனவள ஆலோசகராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவரைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல்: rawindran@gmail.com, செல்: 98404 14389

21.01.2021   02 : 55 P.M

Comments (0)
Add Comment