பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் தாமதம் செய்வதால் உச்சநீதிமன்றமே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், இது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கே.எம்.நடராஜன் நேற்று வாதம் செய்தார்.

முன்னதாக, அரசியல் சட்டம் 161-வது பரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018 செப்டம்பரில் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறியிருந்தனர்.

ஏழு பேரையும் விடுவிப்பதில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளைத் திருப்பி அனுப்பலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து கையெழுத்திடுவாரா அல்லது கோப்புகளை திருப்பி அனுப்புவாரா என்பது இன்னும் சில நாளில் தெரியவரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரறிவாளன் விடுதலை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

21.01.2021 04 : 55 P.M

Comments (0)
Add Comment