என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மண்ணுக்கு பங்குள்ளது!

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.

அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதற்கான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார் பைடன்.

கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன்.

கொரோனா நோய்த் தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அதேபோல் அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவிலும், குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் 100 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர்ந்தோரை குறிப்பிடும் ‘அன்னியர்’ என்ற வார்த்தை, ‘குடிமகன் அல்லாதோர்’ என்று மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள், பைடனின் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

பின்னர் மக்களிடையே  உரையாற்றிய பைடன், “அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதில் பெருமைப்படுகிறேன். நான் எப்போதும் டெலாவரேயின் மகன்தான். அதை மறக்க மாட்டேன். என்னுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மண்ணுக்கு பங்குள்ளது” என்று உருக்கமாகப் பேசினார்.

21.01.2021 01 : 21 P.M

Comments (0)
Add Comment