அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பைடன்!

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இதையொட்டி, அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜனவரி-20, இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு) பதவியேற்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதனிடையே, இன்று நடைபெறும் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்த நிலையில், பதவியேற்பு விழாவின்போது அவரது ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள 25 ஆயிரம் ‘நேஷனல் கார்ட்’ எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.

நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின்” என்று பைடன் தெரிவித்துள்ளார்.

லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதாரச் செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19.01.2021  01 : 25 P.M

Comments (0)
Add Comment