தேவை ஒரு புதுக் கதையாடல்!

மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த நேரத்திலும் அந்த வண்டிக்கு உண்டு.

எனவே, அப்படிப்பட்ட நடத்தை மற்றும் செயல்பாடு மாடுகளுக்கு வந்து விட்டால் அந்த மாடுகளை மாற்றி விடுவார்கள். இன்று அந்த நிலை நம் அரசியலுக்கு வந்து விட்டது.

இந்தச் சூழல் சமூகத்தில் அவ்வப்பொழுது ஏற்படுவது உண்டு. அந்தச் சூழலை மாற்றுவதற்கு எவரும் எதிர்பார்க்காத நிலையில் தலைவர் ஒருவர் எங்கிருந்தாவது புது கதையாடலுடன் வந்து, மக்களுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சி இருள் நிறைந்த சூழலை ஒளி பொருந்தியதாக மாற்றியமைத்து விடுவார்.

இந்த நிகழ்வு மகாபாரதக் காலம் தொடங்கி இன்று வரை இருள்வதும், இருளிலிருந்து வெளிவந்து ஒளிர்வதும் மாறி மாறி நடக்கின்றன.

எந்தச் சமூகம் பெற்ற நம்பிக்கை ஒளியை பாதுகாத்து வைத்துக் கொள்கிறதோ, அந்தச் சமூகம் எளிதில் தாழ்நிலையை அடைவதில்லை. எந்த ஒரு சமூகம் பெற்ற ஒளியைப் பாதுகாக்கத் தவறி அலட்சியப்படுத்துகின்றதோ, அந்தச் சமூகம் பலவீனமடைந்து தாழ்நிலைக்குச் சென்று விடும்.

எனவே, பெற்ற வாய்ப்பினை பாதுகாத்து மேலும் உயர்ந்திட உழைக்கும் சமூகம் என்றும் உயரச் சென்று கொண்டே தான் இருக்கும்.

இந்தக் கோட்பாட்டைத் தான் அர்னால்டு டாயின்பி – ‘நிறுவனமோ, அமைப்போ, நாகரீகமோ, கலாச்சாரமோ எதுவாக இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் தாழ்வை நோக்கிச் சென்று அழிவுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடும்’ என்று கூறியிருக்கிறார்.

இதில் அவர் சொல்லும் சூழலுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளுதல் என்பது மக்கள் தொடர்ந்து உழைப்புக் கலாச்சாரத்திலும், புதுமைகள் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான கதையாடலை நாட்டில் இருக்கும் தலைவர்கள் உருவாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை ஏற்க மறுத்த ஒரு பிரிவினரை மாற்ற நினைத்த பெஞ்சமின் பிராங்கிளின், இங்கிலாந்து நாட்டுச் சேர்ந்த தாமஸ் பெய்ன் என்ற சிந்தனையாளனை வரவழைத்து, சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான மனநிலையில் வாழ்ந்து கொண்டிருப்போரை மாற்றி விடுங்கள் என வேண்டிக் கொண்டான்.

தாமஸ் பெயின் மிகவும் எளிய மக்கள் மொழியில் எழுதும் திறன் படைத்த மனிதன். அது மட்டுமல்ல தாமஸ் பெயின் கதையாடல் என்பது மக்களைச் சிந்திக்கத் தூண்டும் தனித்தன்மை பெற்றது. அமெரிக்க விடுதலை மீது நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு நம்பிக்கையூட்ட தாமஸ் பெய்ன் எழுதிய புத்தகம் தான் ‘பொதுஅறிவு’.

அந்தப் புத்தகம் ஒரு நம்பிக்கைக்கான எதிர்காலம் பற்றிய புரிதலைக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து பிரான்ஸ் தேசத்து பிரெஞ்சுப் புரட்சிக்காக வித்திட்டவர்களின் அழைப்பின் பெயரில் பிரான்ஸ் சென்று பிரெஞ்சுப் புரட்சிக்கு ஏதுவாக கட்டுரைகளை எழுதி மக்களை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட மக்கள் தயாரிப்பைச் செய்து சிறைக்குச் சென்றார் தாமஸ் பெயின்.

பிரான்ஸ் நாட்டில் புரட்சிக்கு வித்திட்ட மாமனிதர்கள் வால்டர் ரூசோ, மாண்டஸ்க்யூ போன்றோர் புரட்சிக்கான கதையாடல்களை எழுதிவிட்டு மறைந்து விட்டார்கள். அதன்பின் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க நூற்றுக் கணக்கான கருத்தாளர்கள் (100 எழுத்தாளர்கள்) தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தார்கள். அவர்களும் மாண்ட பிறகு தான் புரட்சி அங்கே வந்தது.

மாற்றம் எப்போது வரும் எப்போது அந்த தீப்பொறி ஜ்வாலையாக மாறும் என்பதை எவரும் கணிக்க முடியாது. ஆனால் நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுவோர் சுயநலமற்று ஒற்றைச் சிந்தனையில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிக்கிறது பிரெஞ்சுப் புரட்சி.

இதைத்தான் தென்னாப்பிரிக்காவின் காந்தியாக வாழ்ந்த நெல்சன் மண்டேலா கூறினார். சுதந்திரம் அடைவதற்கு மக்கள் உயரிய சிந்தனையில் தியாக உணர்வுடன் செயல்பட்டால் சுதந்திரத்தைப் பெற்று விடலாம்.

ஆனால் அப்படி போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து மக்கள் பயன்பெற, சுகந்திரப் போராட்டகாலச் செயல்பாடுகளை விட ஒரு மடங்கு கூடுதலாக மக்கள் உழைக்க வேண்டியிருக்கும். அப்படி உழைக்க மக்கள் மறுத்தால் பெற்ற சுதந்திரத்தை யாரோ ஒரு சிலர் அனுபவிப்பார்கள். மற்றவர் குறுகிய காலத்திற்குள்ளாகவே தங்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி விடுவார்கள் என்று கூறினார்.

இருள் சூழ்ந்து, நம்பிக்கையற்று இயங்கி வந்த இந்தியாவுக்குள் 1915 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சூரிய ஒளி போல் வந்து இறங்கினார் என்று நேரு எழுதினார்.

காந்தி இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்ததும் முதலில் செய்த வேலை – வாடிக் கிடக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டினார். அரசாங்கத்தைக் கண்டு நடுங்கிய மக்களின் பயத்தைப் போக்கினார்.

அது மட்டுமல்ல மக்களை செயல்பாட்டுக் களத்துக்குக் கொண்டு வந்து செயல்பட வைத்து அவர்களை அதிகாரப்படுத்தினார். அந்த செயல்பாட்டுக் களத்திலேயே எதிர்காலத்திற்கான கனவுக் கதையாடல்களை உருவாக்கினார். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு புதிய சிந்தனை ஓட்டத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த புதிய சிந்தனை ஓட்டத்தில் ஒருமுகத் தன்மையை உருவாக்க புதிய யுத்தியைக் கையாண்டு எவரும் விவாதிக்கக் தேவையான மனோபாவத்தையும் விவாதத்தில் வெளிவரும் கருத்தாடல்கள் உண்மையின் அடிப்படையில் இருந்தால், அதை ஏற்கும் பக்குவத்தையும் அவர் பெற்றிருந்த காரணத்தால் அவருடைய குரலுக்கு மக்கள் மத்தியில் மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. அவரால் எதிர்க்கருத்தினர்களை தன் வயப்படுத்தவும் முடிந்தது.

எந்த ஒரு சமூகமும் சுதந்திரமாக வாழ அதற்குத் தேவை சுயக்கட்டுப்பாடு, தற்சார்பு, உள் ஒற்றுமை. இவை மூன்றும் இருந்து விட்டால் எந்தச் சக்தியாலும், அந்தச் சமூகத்தை வீழ்த்த முடியாது. இந்த மூன்று பண்பு நலன்களும் எங்கு சாத்தியம் என்றால் வன்முறையற்ற சமூகத்தில் தான் சாத்தியப்படும்.

அத்துடன் எல்லா மானுடச் செயல்பாடுகளுக்கும் உண்மை என்பதைத் தெய்வப் பேரொளியாகப் பின்புலத்தில் வைத்தால்தான் சாத்தியம் என்பதையும் கொண்டு வந்து வழி காட்டினார்.

இந்த எண்ண ஓட்டத்திலிருந்து இந்தியா தடம் புரண்டு மக்கள் நலன் என்பதை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் என்ற கட்டமைப்பை முதன்மை படுத்திச் செயல்பட்டதன் விளைவு – இன்று நம் அரசியல் தாழ்நிலையின் உச்சத்தை எட்டிவிட்டது.

அரசியல் மட்டுமல்ல, மக்களின் செயல்பாட்டுச் சூழல் என்பது வாழ்க்கையின் உன்னத விழுமியங்களை இழந்ததாக மாறி அரசியல், சமூகம், வணிகம், ஆன்மீகம் என அனைத்து நிறுவனங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உண்மை, சத்தியம், நேர்மை, நாணயம், சமத்துவப் பார்வை என அனைத்தும் மக்கள் செயல்பாடுகளிலிருந்து ஓடி ஒளிந்து விட்டன. ஒரு விழிப்பில்லா, தெளிவில்லா, உணர்வில்லா வாழ்க்கைப் போக்கில் சமூகம் சிக்குண்டு கிடக்கிறது.

புலன்கள் தூண்டப்பட்டு புலன்களுக்குள் சிக்கி, ஒருவித மயக்க வாழ்வில் தான் இன்று நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

வளர்ச்சி, மேம்பாடு என்பதை பொருள்வளம் பெருக்குவது என்பதாக பொருள் கொண்டு மற்ற வாழ்க்கையில் உள்ள வளங்கள் பற்றி எந்தக் கவலையும் இன்றி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே, மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த மாற்றம் ஒரு ஆட்சி மாறுவதால் மட்டும் நடக்கப்போவது கிடையாது. அரசியல் மாறுவதால் மட்டுமே நடக்கப்போவது கிடையாது. இவற்றையெல்லாம் தாண்டி நம் சமூகம் மாற வேண்டும்.

ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கான ஒரு மாபெரும் கற்பனை கதையாடல் உருவாக வேண்டும். அந்த கதையாடல் மக்கள் மனதைத் தைக்க வேண்டும். அதை உருவாக்க மக்கள் மனதுக்குள் செலுத்தும் ஆளுமை மிக்கவர் ஒருவர் வேண்டும்.

அந்தக் கதையாடல் – உண்மையை நோக்கிப் பயணம் செய்யும் செயல்பாடு தான் – மையச் செயல்பாடாக இருக்க வேண்டும். இது ஒரு தேர்தலை நோக்கிய அரசியலாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது இந்திய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும்.

அங்கே அன்பு தான் பிரதானம், வெறுப்புக்கு இடமில்லை. மக்கள் சேவைதான் இயக்கத்தின் பணியாக இருக்க வேண்டும். இயக்கச் செயல்பாடுகள் அனைத்திலும் வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள் பின் புலத்தில் இருக்க வேண்டும்.

இதைச் செய்ய இன்னொரு மகாத்மாவுக்காக காத்திருக்கப் போகிறோமா? நாமே காந்தியாகச் செயல்பட முடியாதா? காந்தி அதற்கு நமக்கு வழி காட்டவில்லையா? இதில் நாம் ஒவ்வொருவரும் காந்தியாக மாற நம்மைத் தயார் செய்து கொள்ள ஒன்றிணைந்து ஓர் புதிய சிந்தனையை உருவாக்க முடியாதா? அப்படிப்பட்ட மாமனிதர்கள் இந்தியாவில் 100 பேர் இல்லையா? அரசியல் தலைவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல. இந்த நாடு அவர்களைவிடப் பெரியது. நாம் இந்தத் தலைவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆப்ரகாம் லிங்கன் சொன்னதைப் போல ஒவ்வொரு மோசமான அரசியல்வாதிக்குள் ஒரு தலைவன் இருக்கிறான் என ஒரு புதுச் சிந்தனையை உருவாக்குதன் மூலம் அந்தத் தலைவர்களை நம் அரசியல்வாதிகளிடமிருந்து உருவாக்குவோம்.

நம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையான அரசியல் செயல்பாடுதான் நம் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். நம் மக்களின் கட்டுப்பாடான ஒழுக்கமான வாழ்க்கைதான் நம் சுயாட்சியை உருவாக்கும்.

எனவே, இன்று வீழ்ந்து கிடக்கும் நம் சிந்தனைப் போக்கை உயர்த்துவதுதான் நம் தலையாயக் கடமை. அதைச் செய்ய நாம் இணைவோமா? இந்தச் செயல்பாடுகள், நம் கட்சிச் செயல்பாடுகளைத் தாண்டிய மக்கள் அரசியலாக இருக்க வேண்டும். அதில் ஓட்டு வேட்டை இல்லை. எனவே வாக்குக்காக சமரசம் செய்ய வேண்டிய சூழல் இல்லை.

எனவே இன்று நமக்குத் தேவையான புதுச் சிந்தனையை நோக்கிப் பயணிப்போம்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

20.01.2021   12 : 30 P.M

Comments (0)
Add Comment