எதையும் வெளிப்படையாகப் பேசுவதை எம்.ஜி.ஆர் ரசிப்பார்!

ஒசாமஅசா தொடர் – 17    எழுத்தும், தொகுப்பும்; மணா

நான் துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்கிறபோது எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.

“வேண்டாம் சினிமாவில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா என்னுடைய பல படங்களில் நீங்க இருக்கப் போறீங்க. ஏற்கனவே நீங்க உங்க நாடகத்திலேயே தி.மு.க.வை ரொம்பவும் கலாட்டா பண்றீங்க. பத்திரிகை ஆரம்பிச்சா இதெல்லாம் இன்னும் ஜாஸ்தியாப் போயிடும்.”

“ஆமாம் சார்… அப்படித்தான் வரும்.”

“அப்படியிருக்கும்போது பத்திரிகை ஆரம்பிக்கிறது நல்லதில்லை. உங்க சினிமா சான்ஸ் எல்லாம் கெட்டுப்போகும். இரண்டிலேயும் ஒரே நேரத்தில் காலை வைக்காதீங்க. ஏற்கனவே டி.டி.கே.வில் வேற நீங்க இருக்கிறப்போ இது தேவை தானா?” என்று எவ்வளவோ சொன்னார் எம்.ஜி.ஆர்.

அன்றைக்கு அவருடன் இருந்த ப.நீலகண்டனைப் போன்ற இயக்குநர்களும் பத்திரிகை துவக்குவதில் இருக்கிற பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள்.

நான் அவர் சொன்ன எதையும் கேட்காமல் பத்திரிகையைத் துவக்கியதில் அவருக்கு வருத்தம்தான்.

அவரைப்பற்றி நான் துக்ளக்கில் விமர்சித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்க மாட்டார். ஒருமுறை ‘துக்ளக்’கில் வெளியிட அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.

“துக்ளக்கையே விமர்சனம் பண்ணி எழுதட்டுமா?” – என்றார்.

“சரிங்க சார்… எழுதுங்க”

“நான் எழுதினது அப்படியே வரணும்.”

“கண்டிப்பா அப்படியே வரும் சார்.”

அதன்படியே துக்ளக்கைப் பாராட்டியும், சிறிது விமர்சித்தும் மூன்று கட்டுரைகளை அவர் எழுதி துக்ளக்கில் அப்படியே வெளிவந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அதற்குமேல் தொடர்ந்து அவரால் எழுத முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.

அவரிடம் நேரடியாக அவரையே கிண்டல் செய்து பேசினால் கோபப்படாமல் ரசிப்பார். இதே குணம் சிவாஜியிடமும் உண்டு. இவர்களைப் பற்றி வெளியே எங்கோ பேசுவதுதான் இவர்களுக்குப் பிடிக்காது.

எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ப.நீலகண்டன்தான் டைரக்டர். சினிமா விஷயத்தைக் கரைத்துக் குடித்த இயக்குநர் அவர். எம்.ஜி.ஆருக்கு அந்தக் காட்சியில் கொஞ்சம் நீளமான வசனம். நான் பதிலுக்கு “சரி” என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இதுதான் காட்சி.

நான் “சரி” என்று சொன்னதும் ‘ஷாட்’ முடிந்தது.

“சோ.. நீங்க ‘சரி’ன்னு எப்படிச் சொன்னீங்க?” – நீலகண்டன் கேட்டார்.

“சரின்னு தானே சார் சொன்னேன்”.

“அப்படியில்லை.. சரின்னு அழுத்திச் சொல்லுங்க” – ‘சரி’யைச் சொல்லிக் காட்டினார் நீலகண்டன்.

இரண்டாவது டேக் எடுக்கப்பட்டது.

நான் “சரி”யை அழுத்திச் சொன்னபோது டைரக்டர் “கட், கட் அப்படியில்லை சோ..” என்றார்.

நான் சுதாரித்துக் கொண்டு எம்.ஜி.ஆரிடம் “இவர் என்னை விடப்போறதில்லை. இந்த சீனில் உங்க டயலாக் சரியா வரலை சார்.. அதை உங்க கிட்டே சொல்ல முடியாது.  அதனால் என்னைப்போட்டு ‘சரி’ங்கிறதுக்காக இந்தப் பிழி பிழியுறார்.

சரிங்கிறதை இதைவிட எப்படி சார் சரியாச் சொல்லிற முடியும்? தயவு செஞ்சு உங்க டயலாக்கை ஒழுங்காச் சொல்லிடுங்க சார்?” – சிரித்துக் கொண்டே சொன்னேன்.

எம்.ஜி.ஆரும் சிரித்தார். ப.நீலகண்டனும் சிரித்தார். நேரடியாக நான் பேசியதை எந்த விதத்திலும் எம்.ஜி.ஆர். தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்னொரு படம் எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தேன். அதிலும் ப.நீலகண்டன் தான் டைரக்டர். ஷூட்டிங் நேரத்தில் என்னை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருப்பார் நீலகண்டன். அன்றும் அப்படித்தான்.

“என்ன சோ.. துக்ளக் பத்திரிகை எப்படிப் போயிட்டிருக்கு?”

“நல்லாப் போகுது சார்” – சொன்னேன்.  அவர் எதற்கோ பீடிகை போடுகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.

அவரே தொடர்ந்தார்.

“மஞ்சரி எப்படிப்பட்ட பத்திரிகை?”

“நல்ல பத்திரிகை சார்”.

“அதில் நல்ல விஷயங்கள் எல்லாம் வருமா?”

“வரும் சார்”.

“அதிலே வர்ற அளவுக்கு உருப்படியான விஷயங்கள் உங்க துக்ளக்கில் வருமா? மஞ்சரிக்கு என்ன விற்பனை?”

“விற்பனை குறைவுதான் சார்”

“அதாவது நல்ல சரக்குக்கு நாட்டில் நல்ல மதிப்பில்லை. துக்ளக்கிற்கு விற்பனை இருக்கிறது. அப்படித்தானே?” –  சொல்லிவிட்டு என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்.

“ஆமாம் சார்… நல்ல படங்கள் நிறைய நாட்கள் ஓடுவதில்லை. ‘என் அண்ணன்’ நூறு நாட்கள் ஓடுகிறது” என்று நான் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

பக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நீலகண்டனிடம் சிரித்தபடியே சொன்னார். “எதுக்கு சோ வாயைப் போய்க் கிளர்றீங்க?”

“எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணுமா? சிலதுக்குப் பதில் சொல்லாம விடக்கூடாதா நீங்க?” என்று நீலகண்டன் என்னிடம் திருப்பிக் கேட்க, அந்த உரையாடல் தமாஷாகப் போனதே ஒழிய, சீரியஸாகவிடவில்லை.

‘என் அண்ணன்’ எம்.ஜி.ஆர். நடித்த படமாக இருந்தாலும்கூட அவரும் நான் சொன்னதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு ரசித்தார். இது அவருடைய சுபாவம்.

ஒருமுறை நான் கலைஞரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்திப்பு குறித்த தகவல் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து அப்போது பரபரப்பாகி விட்டது.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் வெள்ளிவிழா சென்னை ‘சில்ட்ரன்ஸ்’ தியேட்டரில் நடந்தது. விழாவில் நானும் கலந்து கொண்டேன்.

துவக்கத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., “இரண்டு நாட்களுக்கு முன்னால் சோ ஒருத்தரை சந்திச்சுட்டு வந்திருக்கார். கடுமையா விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்கிற ஒருத்தரை ஏன் இவர் சந்திச்சார்? என்ன பேசினார்ங்கிறதைத் தெரிஞ்சிக்க நீங்க எல்லாம் ஆர்வமா இருக்கீங்க.

சோ சட்டம் படித்தவர். அதனால் சட்டப்படி அவர் அதைச் சொல்லியாகணும்” என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னதும் ஒரே கைதட்டல். அதோடு என்னைப் பேசச் சொல்லிவிட்டார்.

நான் ஜனங்களைப் பார்த்தபடி மைக்கில் சொன்னேன்.

“இது உங்க கிட்டே சொல்லவேண்டிய விஷயமில்லை. நான் இவர் கிட்டேதான் சொல்லணும். அதுக்கேத்தபடி நான் இந்த மைக்கைத் திருப்பி வைச்சுக்கிறேன்” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்தபடி, “நான் சட்டம் படிச்சுருக்கிறதாச் சொன்னீங்க. நான் சட்டம் படிச்சவன்தான். அதனால் சட்டப்படி நழுவ வேண்டிய நேரம். அதனால் நான் சொல்ல மாட்டேன்!”

அதையும் ரசித்தார் எம்.ஜி.ஆர்.

(தொடரும்…)

20.01.2021 04 : 55 P.M

Comments (0)
Add Comment