ஆரி – நிஜ வாழ்வின் நாயகன்!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற எம்ஜிஆர் பாடல் திரையில் ஓடியதைக் காட்டிலும், பலரது நெஞ்சத்தில் ஓடிய தருணங்கள் அனேகம். கிட்டத்தட்ட அதே போன்ற பிரதிபலிப்பை ‘பிக்பாஸ் சீசன் 4’ வெற்றியின் மூலம் ஈட்டியிருக்கிறார் ஆரி அர்ஜுனன்.

ஆரி, தமிழ் மக்களுக்கு ‘நெடுஞ்சாலை’ பட நாயகனாக அறிமுகமானவர். வெகு சிலர், சேரன் நடித்த ‘ஆடும் கூத்து’ படத்திலேயே நடித்திருக்கிறார் என்று சிலாகிப்பார்கள்.

இன்னும் சிலர், ஷங்கர் தயாரிப்பில் உருவான ‘ரெட்டைச்சுழி’ படத்தில் அஞ்சலியோடு நடித்தவர் என்பார்கள். இன்னும் சிலருக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஆரி காட்டிய ஈடுபாடு நினைவுக்கு வரும். இவை தவிர, அவருக்குச் சில முகங்கள் உண்டு.

அனைத்தையும் தாண்டி ஆரி என்பவர் இருக்கிறார் என்று காட்டியிருக்கிறது ‘பிக்பாஸ்’ வெற்றி.

சினிமா ஆர்வம்!

பழனி வட்டாரத்தைச் சேர்ந்தவர் ஆரி. சிறு வயதிலேயே சினிமா ஆர்வத்தை விதைத்துக் கொண்டவர். நடிகனாக முகம் காட்ட நினைத்தவர், தன் உடலைக் கட்டுறுதியுடன் வைத்துக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார். விளைவு, உடற்பயிற்சிக் கூடமே கதி என்றிருந்தார்.

அந்த பழக்கம் அவரை பிட்னெஸ் ட்ரெய்னர் ஆக்கியது. அதுவே, பல நட்சத்திரங்களுக்கு பயிற்சி கொடுப்பவராகவும் மாற்றியது. அப்படித்தான், இயக்குனர் சேரனுக்கு அறிமுகமானார் ஆரி.

‘ஆட்டோகிராப்’ படத்தில் மூன்றுவித தோற்றங்களில் நடிப்பதற்காக, ஆரியைத் தனது பெர்சனல் ட்ரெய்னர் ஆக்கிக் கொண்டார் சேரன். தொடர்ச்சியாக ‘சுப்பிரமணியபுரம்’, ‘யோகி’, ‘மிருகம்’, ‘கற்றது தமிழ்’, ’ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈரம்’ படங்களுக்காக இயக்குனர்கள் சசிகுமார், அமீர், ஆதி, ஜீவா, பார்த்திபன் மற்றும் சிந்து மேனன் ஆகியோருக்கு உடற்பயிற்சி ஆலோசனைகள் தந்தார்.

சேரனுக்கு அறிமுகமான சில ஆண்டுகளில் ‘ஆடும் கூத்து’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்ற ‘ஆடும் கூத்து’ படத்தில் சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் உட்படப் பலர் நடித்தனர். ஆனாலும், தியேட்டர்களில் பரவலாக ரிலீஸ் ஆகாததால் மக்களின் பெருவாரியான கவனத்தை அத்திரைப்படம் பெறவில்லை.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து ரிலீஸான ‘ரெட்டைச்சுழி’ மட்டுமே ஆரியின் முகத்தை ரசிகர்களுக்குத் தெரிய வைத்தது. இயக்குனர் இமயத்தையும் இயக்குனர் சிகரத்தையும் எதிரெதிராகக் களமாட வைத்து, தாமிரா இயக்கிய திரைப்படம் இது.

இதன் தொடர்ச்சியாக, ஒரு காபிஷாப்பில் நிகழும் கதையான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்தார் ஆரி. மிகக் குறைவானவர்களின் கவனத்தையே அது ஈர்த்தது.

சமூகப் பயணம்!

கிருஷ்ணா இயக்கிய ‘நெடுஞ்சாலை’ ஆரியை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. ‘தாமிரபரணியில் நீந்திவந்த என் ஆலம் பூவிலையே’ பாடல் மூலைமுடுக்கெங்கும் பரவியது.

அதன்பின் தரணி, முப்பரிமாணம், உன்னோடு கா ஆகியன பெரிய வரவேற்பைப் பெறாமல் போக, ‘மாயா’ படத்தில் மீண்டும் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற, 2018-ல் வெளியான ‘நாகேஷ் திரையரங்கம்’ சலனமில்லாமல் போனது.

2017 ஜனவரியில் தமிழ்நாடு முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக சமூகத்தின் மீதான தனது அக்கறையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார் ஆரி. நகரமயமாக்கலில் மூழ்கியவர்களை தமிழ் மொழி, கலாசாரத்தின் பக்கம் திருப்பிய போராட்டம் அது.

பல சினிமா பிரபலங்களின் சமூக பொறுப்பை வெளிக்காட்டிய அந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ‘மாறுவோம்.. மாற்றுவோம்..’ என்ற அமைப்பைத் தொடங்கினார் ஆரி. கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஊட்டப்பட்டது.

இயற்கை முறையில் காய்கறி பயிரிடுவதில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இளைய தலைமுறையினரோடு கைகோர்த்தார். தாய் மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தின் மூலமாக, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதனை வேறு வடிவத்தில் முன்னெடுத்தவர் ஆரி.

ஒன் மேன் ஆர்மி!

சினிமா நடிகர், சமூக ஆர்வலர், களச் செயற்பாட்டாளர் ஆகிய முகங்கள் கொண்டிருந்தாலும் ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பை ஆரிக்குத் தந்திருக்கிறது.

கொரோனாவின் தாக்கத்தினால் விஜய் தொலைக்காட்சியில் தாமதமாகத் தொடங்கியது ‘பிக்பாஸ் சீசன் 4’. 16+2 பேர் கலந்துகொண்ட இப்போட்டியின் இறுதியில் வெற்றியாளராகி இருக்கிறார் ஆரி. நடுவே, 11 முறை அவரை வெளியேற்றுவதற்கான ‘நாமினேஷன்’ நிகழ்ந்திருக்கிறது.

கும்பல் கூடிய சில நிமிடங்களிலேயே கோஷ்டி பிரியும் காலத்தில், தான் எந்தக் குழுவையும் சார்ந்தவனல்ல என்பதே பிக்பாஸில் ஆரியின் ஸ்டைலாக இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவர் என்ற இமேஜையும் தந்திருக்கிறது.

கூடவே, தமிழ் சொற்றொடர்கள், பழமையான மொழிகள் போன்றவற்றை சக போட்டியாளர்களோடு பகிர்ந்துகொண்டதன் மூலமாகத் தான் மேற்கொண்டுவரும் சமூகப் பயணத்தின் மீதும் கவனத்தைக் குவிக்க வைத்திருக்கிறார்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அந்தந்த நேரங்களில் முடிவெடுக்க வேண்டுமென்ற கோட்பாட்டை இந்நிகழ்ச்சியில் உடைத்திருக்கிறார் ஆரி. இதுவே, #ஆரிஆர்மி எனும் பெயரில் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கைகோர்க்கவும் காரணமாகியிருக்கிறது.

சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, சினிமா கலைஞர்களின் ஆதரவும் ஆரிக்குக் கிடைத்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வடிவத்தையும் மீறி, அவரது தனிப்பட்ட ஆளுமை வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர் ரசிகர்கள். குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும், சமூக வெளியிலும் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கான உதாரணமாகக் கொண்டாடப்படுகிறது ஆரியின் ‘பிக்பாஸ்’ பயணம்!

அந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சொன்னதுபோல, ஆரியின் பொறுப்பு இப்போது கூடியிருக்கிறது. தொடரட்டும் அவரது சமூக முனைப்பு..!

– லத்திகா

19.01.2021   05 : 25 P.M

Comments (0)
Add Comment