“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதா?” – என்று ‘பாவமன்னிப்பு’ படத்தில் வரும் பாடலில் ஏக்கமான ஒரு வரி வரும்.
அது இன்றைக்கும் சராசரி மக்களின் ஆதங்கக் குரல்.
மக்களுக்கிடையில் தான் எத்தனை பிரிவினைகள்? மதம், சாதி, வட்டாரம், பாலினம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள் இருந்தாலும், முதன்மையான பிரிவினை பொருளாதாரப் பிரிவினை தான்.
அதில் தான் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள்? கடந்த முப்பது ஆண்டுகளில் பணக்கார்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அடித்தட்டு ஏழைகள் மேலும் நலிந்து குறைந்தபட்சக் கூலி கிடைக்காமலும், தரமான கல்வி கிடைக்காமலும் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு தரமான மருத்துவமனைகள் கூடக் கிடையாது.
ஒரு சின்னப் புள்ளிவிபரத்தைப் பார்க்கலாமா?
இந்திய மக்கள் தொகையில் உயர்ந்த நிலையில் இருக்கிற பத்து சதவிகிதம் பேரிடம் 77 சதவிகிதச் சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் சுமார் 6.7 கோடி இந்திய மக்கள் மிகவும் ஏழ்மையான நிலைக்குச் சரிந்து, ஒரு சதவிகித அளவுக்கே சொத்தை நெருங்கிய நிலையில் இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும் 119 பேர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் பெருகிக் கொண்டிருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை நாள்தோறும் 70 பேர் புதுக் கோடீஸ்வரர்களாகி விடுவார்கள் என்பது ஒரு கணக்கெடுப்பு.
இம்மாதிரியான கோடீஸ்வரர்களின் சொத்து கடந்த பத்தாண்டுகளில் பத்து சதவிகித அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டின் பட்ஜெட்டை விட அதிகம். அதாவது 2 லட்சத்து 84 ஆயிரத்து 220 கோடி என்கிற அளவுக்குக் கூடியிருக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல், தனிப்பெரும் செல்வாக்கோடு கோடீஸ்வரர்களாக 2009-ல் இருந்தவர்கள் சுமார் ஒரு கோடிப் பேர். 2015 ஆம் ஆண்டிலோ இவர்களின் எண்ணிக்கை 1.37 கோடியாகி விட்டது.
கடந்த 1990-களில் நூறு கோடிக்கும் மேல் சொத்து வைத்திருந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே. 2014-ல் அது 65 பேர் ஆனது.
இதில் பால்பேதமும் இருக்கிறது.
உலகின் பெரும் பணக்காரர்கள் முப்பது பேர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள். உலகின் முன்னணியான 500 நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் 23 பேர்.
இதற்கு நேர் எதிர் சாமானிய மக்களின் வாழ்க்கை.
பல தொழிலாளர்கள் தாங்கள் உழைக்கிற உழைப்பின் அளவுக்குப் பலனைப் பெறுவதில்லை. குறிப்பாக ஜவுளிப் பஞ்சாலைகள், நூற்பாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்தபட்சக் கூலியைக் கூடப் பெற முடியாத நிலையில் தான் இருக்கிறாகள்.
இந்தியாவின் முன்னணி ஆயத்த ஆடை நிர்வாகியின் சம்பளத்தை அவர்கள் எட்ட சில நூற்றாண்டுகள் ஆகும் என்பதே யதார்த்தம்.
இந்தியாவில் ஆறு கோடித் தொழிலாளர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை. மருத்துவ வசதி முறையான படி கிடைக்காததால், அவசர சிகிச்சைகளுக்குத் தங்களுடைய சொத்துக்களை அவர்கள் அடமானம் வைக்கிறார்கள் அல்லது விற்கிறார்கள். இதனால் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
இவர்கள் இப்படி அடிப்படை மருத்துவத் தேவைக்குத் திண்டாடுகிற நிலையில், இந்தியாவில் 17 சதவிகிதம் என்கிற அளவில் இறப்புச் சதவிகிதம் இருக்கிறது; இன்னும் சில நாடுகளில் இதுவே 21 சதவிகிதம் என்கிறது லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு சிவில் அமைப்பான ஆக்ஸ்பாம். வரி விதிப்பு முறையிலும் பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமான நிலை நீடிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த அமைப்பு.
அதிகாரமும், பணமும் எப்போதும் மேல்தட்டில் உள்ள மிகச் சிலரிடம் இருக்கும் நிலையில், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.
அந்த அளவுக்கு இருக்கிறது ஏற்றத் தாழ்வு. பொதுமக்களில் பத்து பேரை எடுத்துக் கொண்டால், அவர்களில் ஏழு பேர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாதிரி பொருளாதாரச் சூழல் மோசமாக இருக்கும் நாடுகளில் தான் வசிக்கிறார்கள்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றலாம்.
இந்தப் புதுப் பணக்காரர்கள் யார்? எங்கிருந்து அவர்கள் இவ்வளவு பணத்தைச் சேர்த்தார்கள்? என்கிற கேள்விகள் எழலாம்.
உங்களுக்கு முன்னால் உள்ள மணற்கொள்ளையர்கள், கள்ளச் சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்காரர்கள், காடுகளை அழிப்பவர்கள், கொத்தடிமைகளைப் போலத் தொழிலாளர்களை நடத்தி வேலை வாங்குகிறவர்கள் என்று பலரும் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரலாம்.
ஆனால் அவர்களை எல்லாம் மிஞ்சியவர்கள்- உலக அளவில் உள்ள பெரும் பணக்காரர்கள். அவர்களே உலகப் பொருளாதார நிலையை முடிவு செய்கிறார்கள்.
அதே சமயம் தொழிலாளர்களின் நிலைமையைப் பாருங்கள்.
சுமார் 60 கோடிப் பேருக்கு வேலை நிரந்தரம் இல்லை; அமைப்பு சாராத் தொழிலாளர்களில் அதிகம் பேர் பெண்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இம்மாதிரியான மக்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு மூலம் உதவும்போது நன்றி பாராட்டுகிறார்கள். அதேசமயம் தங்களுக்கு உதவி செய்துவிட்டு, அதை ஊடகங்களில் வெளியிடும்போது குறுகிப் போகிறார்கள்.
இந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுகளுக்கு சில நாடுகளின் வரி விதிப்புகளும் ஒரு காரணம். அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் சொல்லலாம். பாகிஸ்தான் போன்ற நாட்டில் வரி விதிக்கப்படும் முறையையும் சொல்லலாம்.
இதன் மூலம் மிகவும் வசதியானவர்கள் பெரும் அரசியல் செல்வாக்குடன் அவர்களை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது. அணி மாறவும், தொழிலை மாற்றிக் கொள்ளவும் முடிகிறது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி நிகர மதிப்பு ஏழு கோடி ரூபாய். தேர்தலுக்குத் தேர்தல் இந்தத் தொகை அதிகரித்துக் கொண்டே போகும். வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பதும் எழுதப்படாத விதியாக இருக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையை அடையப் பல காலம் பிடிக்கலாம். அதையும் மேட்டுக்குடிப் பெண்களே ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்கிற கருத்தையும் புறக்கணிக்க முடியாது.
சமூகத்தில் நமக்கு முன்னால் உள்ள பாகுபாடுகளை எப்படி எதிர்கொள்வது?
இதற்கு மாறாக நியாயமான பொருளாதார, அரசியல் கட்டமைப்பு உருவாக வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து முயல வேண்டும் என்று பன்னாட்டு சிவில் சமூக அமைப்புகளின் விருப்பம், வேண்டுகோள்.
ஏழைகளை ஒதுக்கிவிடாத போக்கு, இலவசப் பொதுச் சுகாதாரம், அனைவருக்கும் தரமான கல்வி, இளைய தலைமுறைக்கு வேலை, அதற்கு நியாயமான ஊதியம், பெரும் பணக்காரர்களின் வரியைப் படிப்படியாக அதிகரிப்பது, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, நிலப்பகிர்வு, கிராம சபைக் கூட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பது என்று பல கட்டங்களாக நமக்கு முன்னால் பணிகள் காத்திருக்கின்றன.
இப்படி நிறையவே சவால்கள்!
*
-கட்டுரையாளர் பால் பாஸ்கர் அமைதி அறக்கட்டளையின் தலைவர், நிதி ஆயோக் உறுப்பினராக இருந்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு மறைந்த அவருடைய நினைவின் மீள்பதிவாக இந்தக் கட்டுரை.
18.01.2021 12 : 55 P.M