‘ஈஸ்வரன்’ – க்ளிஷேக்களின் எளிமையான உருவம்!

“நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன்டா” என்பது போன்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏதேதோ எண்ணங்களை உண்டாக்கலாம். அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தியேட்டரில் ஆரவாரத்தோடு படத்தைக் கொண்டாட வேண்டுமென்ற நோக்கில் ‘ஈஸ்வரன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

எத்தகைய களமானாலும் அசராமல் களமாடும் சுசீ, ஈஸ்வரனுக்காக தமிழ் சினிமாவின் அரதப் பழசான க்ளிஷேக்களை எல்லாம் ஒன்றுகூட்டியிருக்கிறார். அது பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களுக்கு, இப்படம் விழாக்காலத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கைத் தருவது ஆறுதலான விஷயம்.

ஒரு ஊர்ல..!

பெரியசாமி – பாப்பாத்தியம்மாள் தம்பதியர்க்கு மூன்று மகன்கள், ஒரு மகள். நால்வரும் குழந்தைகளாக இருக்கும்போது, பாப்பாத்தியம்மாள் கீழே விழுந்து மரணமடைகிறார்.

சில நிமிடங்களுக்கு முன்னர், அவரது வீட்டிற்கு வரும் ஜோதிடர் காளி (காளி வெங்கட்) அம்மரணத்தின் வருகையைச் சரியாகக் கணிக்கிறார் என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. வளர்ந்த பின்னர் பெரியசாமியின் பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில் முறுக்கிக்கொண்டு நிற்க, அதனால் தாயின் நினைவு நாள் விழா கூட நடப்பதில்லை.

பெரியசாமியின் வீட்டில் பணியாற்றும் ஈஸ்வரன் (சிலம்பரசன் டி.ஆர்), கொரோனா கால ஊரடங்கை ஒட்டி அவர்கள் அனைவரையும் கிராமத்துக்கு வரவழைக்கிறார். இப்படியொரு தருணத்திற்காகக் காத்திருக்கிறார் பெரியசாமியால் பாதிப்புக்குள்ளாகி பழிவாங்கும் வெறியோடு திரியும் ரத்தினசாமி (ஸ்டன்ட் சில்வா).

ரத்தினசாமியின் பகையை மீறி, பெரியசாமியின் குடும்பத்தை எவ்வாறு ஈஸ்வரன் காக்கிறார்? பெரியசாமியுடன் ஈஸ்வரன் ஒட்டி உறவாடுவதற்கான காரணம் என்ன? பெரியசாமியைக் கொலை செய்யத் துடிப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு ‘க்ளிஷே’வான காட்சியமைப்புகளின் துணையுடன் பதில் சொல்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

கொரோனா ஜோக்குகள்!

ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்ட நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, காட்சிகளில் நன்றாகப் புலனாகிறது. கமர்ஷியல் படங்களில் வழக்கமாகத் தென்படும் பெருங்கூட்டம் இதில் ‘மிஸ்’ ஆகியிருப்பது அதனை உணர்த்துகிறது.

ஆனால், கொரோனா கால ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் காட்சிகளின் உள்ளடக்கமாக மாற்றி கலகலப்பூட்டுகிறது ‘ஈஸ்வரன்’. சென்னையில் இருந்து வந்தவர்களைக் கிராமத்தில் வேண்டாதவர்களாகப் பாவிப்பது, சோதனை முடிவை எதிர்பார்த்து ஒட்டுமொத்தக் குடும்பமும் பதைபதைப்புடன் இருப்பது, சமூக இடைவெளியை ஒரே வீட்டில் கடைபிடிக்க முயல்வது என்று சமகாலப் பிரச்சனைகளை ‘கிண்டலோ கிண்டல்’ செய்திருக்கின்றனர்.

பார்த்த ஞாபகம் இல்லையோ!

பெரியசாமியின் நடுத்தர வயது மற்றும் முதுமை தோற்றத்தைக் காட்ட மனோஜ் மற்றும் அவரது தந்தை பாரதிராஜாவை பயன்படுத்தியிருப்பது அருமையான உத்தி.

பாண்டியநாடு, நம்மவீட்டுப் பிள்ளையில் நடித்ததில் கால்வாசி வாய்ப்பு கூட இப்படத்தில் இயக்குனர் இமயத்துக்குக் கிடைக்கவில்லை. ஆனால், மனோஜ் சிறந்த குணசித்திர நடிகர் ஆவதற்கான வாய்ப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம்.

நந்திதா, நிதி அகர்வால் என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தும், ரசிகர்கள் மனதில் பதியும்படியான காட்சிகள் இருவருக்குமே கிடைக்கவில்லை. வினோதினியின் முகம் தெரியும் அளவுக்கு கூட, துர்காவுக்கு திரையில் பெரிதாக வாய்ப்பில்லை.

முனீஸ்காந்த் முடிந்தவரை தனது பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார். பாலசரவணனும் சிலம்பரசனும் அவரை திட்டும் காட்சியில் தியேட்டரே அல்லோலப்படுகிறது.

உடல் இளைத்த சிலம்பரசன் டி.ஆர் என்ற சிம்புதான் இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்புக்குக் காரணம். மடிப்பு கலையாத லுங்கி, சட்டையுடன் தோன்றுவதுதான் கிராமத்து மனிதர்களின் அடையாளம் என்றால், ஈஸ்வரன் எனும் பாத்திரத்தில் கிராமத்தானாக சிம்பு நடித்திருக்கிறார் என்று சொல்லிவிடலாம்!

அதே நேரத்தில், ஒரு கமர்ஷியல் படத்தில் அமெச்சூராக தெரியும் எந்த விஷயத்தையும் வெளிப்படுத்தாதது அவரது தேர்ந்த அனுபவத்தைக் காட்டுகிறது.

சிம்புவுக்கு அறிமுகக் காட்சியில் கொடுக்கப்படும் பில்டப்பும், அதனைத் தொடர்ந்து வரும் நகைச்சுவையும் ஒன்றையொன்று ‘பேலன்ஸ்’ செய்கிறது. அவரது இமேஜை தூக்கி நிறுத்தும் வகையில் பேட்டியளிப்பது போல, பாரதிராஜாவே வசனம் பேசியிருப்பது பெரிய விஷயம்.

ஆனாலும், பழனி முருகன் கோயிலில் விஐபிகளுக்கு தரிசனம் காட்ட உதவுபவருக்கு அமைச்சரே போன் பண்ணி பேசும் அளவுக்கு செல்வாக்கு இருப்பது ஆச்சர்யம்தான்.

‘சாம்பியன்’ படத்தைத் தொடர்ந்து இதிலும் ‘ஸ்டன்ட்’ சில்வாவை வில்லனாக்கி இருக்கிறார் சுசீந்திரன்.

அவர் என்ன செய்வாரோ என்று ரசிகர்கள் காத்திருக்க, ‘இப்போதாண்டா என் சீன்’ என்று தன் பங்குக்கு கிளைமேக்ஸில் தோன்றி சண்டை போடுகிறார். அவர் வரும் பகுதி முழுக்க ‘நாட்டாமை’ பொன்னம்பலத்தை நினைவூட்டுகிறது.

இது தவிர யார் கண்ணன், மூர்த்தி உள்ளிட்ட இயக்குனர்கள் ஆங்காங்கே வந்து ஈஸ்வரன் புகழ் பாடுகின்றனர். அவை புதுமையாகத் தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் பார்க்கும் முதல் தமிழ் சினிமாவாக ‘ஈஸ்வரன்’ இருக்கும்.

குறுகிய காலத் தயாரிப்பு!

வித்தியாசமான கதைக்களத்தை கையிலெடுக்காமல், தமிழ் சினிமாவில் நையப்புடைத்த விஷயங்களைக் கொண்டே ஒரு திரைப்படத்தை உருவாக்கப் பெரிய தைரியம் வேண்டும். அந்த வகையில், ரசிகர்களின் கணிப்புகளைக் கொஞ்சம் கூடப் பொய்யாக்காமல் செயல்பட்டிருக்கிறார் சுசீந்திரன்.

கொரோனா காலக் கட்டுப்பாடுகளை மீறி, வழக்கமான கமர்ஷியல் படமாகத் தெரிய நிறைய மெனக்கெட்டிருக்கிறது சுசீந்திரன் அண்ட் டீம். அதனாலேயே, வழக்கமான சில விஷயங்களைத் தவிர்க்கவும் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் திரு, இசையமைப்பாளர் தமன், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், படத்தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குனர் சேகர் பாலு, வசனகர்த்தா பாலாஜி கேசவன் உட்பட மொத்த படக்குழுவும் இயக்குனரின் பார்வையோடு ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கிறது.

ஒரு இயக்குனரின் பணி என்பது அந்தந்த நேரத்தில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு மிகச்சிறப்பான ஆக்கத்தை அளிப்பது எனக் கொண்டால், தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆவாரோ சிம்பு என்று திரையுலகமே நினைத்த நிலையில், அவருக்கான ‘கம்பேக்’ களம் தந்திருக்கிறார்.

படத்தில் புதுமை என்று ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனால், அதை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு ‘ஈஸ்வரன்’ தருவது சர்க்கரைப் பொங்கல்.

இல்லையில்லை என்பவர்கள், சிம்பு அல்லது சுசீந்திரனின் அடுத்த படம் வரை காத்திருக்கலாம்!

-உதய்.பா

18.01.2021 01 : 02 P.M

Comments (0)
Add Comment