வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானதல்ல. பிரச்சனைக்கு மூலகாரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் என்று இணையவழி இதழில் சுட்டிக்காட்டுகிறார் இணைய நிபுணர் சைபர் சிம்மன்.
“வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களைச் சேகரிக்கிறது. மற்ற செயலிகளும் இவ்வாறு செய்கின்றன. ஆனால், வாட்ஸ்அப் சேகரிக்கும் தகவல்களை (உண்மையில் அது சேகரிப்பது தனிப்பட்ட தகவல்கள் அல்ல. மெட்டா டேட்டா என்ற துணைத் தகவல்கள்) என்ன செய்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இப்போதைக்கு வாட்ஸ்அப் பயனாளிகளின் திரையில் விளம்பரங்களை நுழைப்பதில்லை. தகவல்களை அநேகமாக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பதில்லை.
ஆனால், வாட்ஸ்அப் பயனாளிகள் தொடர்பான பலவிதமான தகவல்களைத் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்கிறது.
இதற்குப் பயனாளிகள் ஒப்புக்கொண்டாக வேண்டும் என நிர்பந்திப்பதே இப்போது பிரச்சனை. இந்தத் தகவல் பகிர்வு ஏற்கனவே நடைபெற்றாலும், இதிலிருந்து விலகும் வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தரவுகளைக் கையாள்வதில் பேஸ்புக்கின் செயல்பாடு மிகவும் மோசமானது என்பதால் இது பிரச்சனையாகிறது. இனி, பேஸ்புக் விளம்பரங்கள் மேலும் பலவிதங்களில் பயனாளிகளை விரட்டும். எனவே பிரச்சனைக்கு மூலகாரணம் பேஸ்புக்தான்.
இதைப் புரிந்துகொண்டால், வாட்ஸ்அப்புக்கு மாற்றுச் சேவையைத் தேடுவதைவிட பேஸ்புக்கிற்கு மாற்றுச் சேவை தேடத் தோன்றும். இந்தக் கருத்து உங்களுக்கு ஏற்புடையது என்றால் ‘நோமோர் பேஸ்புக்’ (https://nomorefacebook.xyz/) இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.
பேஸ்புக்கில் என்ன பிரச்சனை என அப்பாவித்தனமாகக் கேட்பவர்களுக்கு இந்தத் தளம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். ஏனெனில், இந்தத் தளம், இனி பேஸ்புக் மற்றும் அதன் சாம்ராஜ்யத்தில் உள்ள துணை சேவைகளைப் பயன்படுத்தாமல் இருக்கத் தீர்மானிப்பவர்களுக்குப் பொருத்தமான மாற்றுச் சேவைகளைப் பரிந்துரைக்கிறது.
பேஸ்புக் அளிக்கும் ஒவ்வொரு வசதிக்கும் மாற்றாக நாடக்கூடிய இணையச் சேவைகளை இந்தத் தளம் பட்டியலிடுகிறது. இந்த சேவைகள் எல்லாமே இணையவாசிகள் பரிந்துரைத்தவை. வாட்ஸ்அப் சர்ச்சை பிரைவசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேஸ்புக்கிற்கான மாற்றுச் சேவைகளைத் தெரிந்துகொள்வது நல்லது.
விஷயமறிந்தவர்கள் பேஸ்புக் மட்டுமா பிரச்சனை, கூகுள் இதேபோல செய்யவில்லையா எனக் கேட்கலாம். ஆம், பிரைவசி என்று வரும்போது கூகுள் மீதும் எண்ணற்ற விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையில், மேலே பார்த்த தளமும் ஒரு விதத்தில் கூகுள்மீதான விமர்சனம் தொடர்புடையதுதான்” என்கிறார்.
-தான்யா
18.01.2021 01 : 47 P.M