பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் நேற்று (17.01.2021) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார். அரசியல் உலகிலும், சினிமா உலகிலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
முதல்வராக இருந்தபோது, வறுமையை ஒழிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை வலியுறுத்தினார். அவரது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இதேபோல் சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆரின் தொண்டர்களும், ரசிகர்களும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் மகிழ்ந்தனர்.
இதேபோல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிட்ட 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களை, அதிமுக அமைப்புச் செயலாளரும் வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜே.சி.டி.பிராபகர் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தை பராமரித்து வரும் அறக்கட்டளை நிர்வாகி திரு.குமார் ராஜேந்திரனிடம் வழங்கினர்.
18.01.2021 10 : 52 A.M