எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!

அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார். தேவரின் இளைய தம்பியான எம்.ஏ. திருமுகம், படத்தை இயக்கியிருப்பார்.

சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை வளர்ப்பதிலும், அவற்றுடன் பழகுவதிலும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நேர் எதிரானவர் எம்.ஏ.திருமுகம். விலங்குகள் என்றால் அவருக்கு அவ்வளவு பயம்!

ஒருமுறை வேட்டைக்காரன் (1964) படத்துக்காக சிங்கத்தை வைத்து வெளிப்புற படப்பிடிப்பு நடந்திருக்கிறது. பழகிய சிங்கம்தான் என்றாலும் கூண்டை விட்டு வெளியே வந்த பிறகு சிங்கத்தின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் வேறு நடிக்க இருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வெளியூர் சென்றிருந்தார். எனவே, முழுவிழிப்பு நிலையில் படக்குழு இருந்தது.

சிங்கம் ஏதாவது கலாட்டா செய்தால், எடுத்த எடுப்பில் அதை கூண்டில் அடைத்து விட முடியாது. எனவே சிங்கத்தை வலையுடன் வளைத்துப் பிடிக்க, அதற்கென பயிற்சி பெற்ற தேவர் பிலிம்ஸ் குழு ஒன்று தயாராக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் கிணறு போன்ற பத்தடி பள்ளமும் தோண்டப்பட்டு இருந்தது.

சிங்கம் ஏதாவது தகராறு செய்தால், வலையால் அதைச் சுற்றிவளைத்து முதல்வேலையாக அந்தப் பள்ளத்தில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சிங்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியபிறகு பள்ளத்தின் ஒருபகுதியை இடித்துத் தகர்த்து, சிங்கத்தைப் பிடித்து, மீண்டும் அதை கூண்டில் அடைப்பார்கள்.

இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது. இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஒளிப்பதிவாளரின் அருகே நின்றார். ‘கேமரா ஸ்டார்ட், ரெடி’ என்று அவர் சொன்னதுதான் தாமதம், சிங்கம் திருமுகத்தை நோக்கிப் பாய்ந்தது.

தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கும் விலங்குகளில் எந்த விலங்கு குழப்பம் அடைந்தாலும் அது எம்.ஏ.திருமுகத்தை நோக்கித்தான் பாயும். அவரது ராசி அப்படி. அதனால் சிங்கம் தன்னை நோக்கி பாய்ந்து வந்தபோது திருமுகம் திரும்பி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.

ஓடிய திருமுகம் கால்தவறி அந்த பத்தடி பள்ளத்தில் விழுந்தார். (கால்தவறி விழுந்தாரா அல்லது பாதுகாப்பு கருதி பயத்தில் உள்ளே குதித்தாரா என்பது தெரியாது) ஆனால், கெடுவாய்ப்பாக சிங்கமும் அந்த பத்தடி பள்ளத்தில் குதித்து விட்டது.

இப்போது சிங்கமும், திருமுகமும் ஒரே பள்ளத்தில் கிடக்க, திருமுகம் பயந்து அலற ஆரம்பித்தார். சிங்கத்தைப் பிடிக்க வேண்டிய தேவர் பிலிம்ஸ் ஆள்களோ, பள்ளத்தைச் சூழ்ந்து நின்று செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவர் துணிச்சலாக உள்ளே குதித்தார். குதித்தவர் சிங்கத்துக்கும், திருமுகத்துக்கும் நடுவில் அரண் போல நின்று கொண்டார். அப்படி குதித்த நபர் வேறு யாருமில்லை. எம்.ஜி.ஆரேதான்.

எம்.ஜி.ஆரே உள்ளே குதித்துவிட்டார், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாண்டோ சின்னப்பா தேவருக்கு யார் பதில் சொல்வது என்ற பயத்தில் தேவர் பிலிம்ஸ் ஆள்கள் அத்தனைப் பேரும் இப்போது பொத்பொத்தென வலையுடன் பள்ளத்தில் குதித்தார்கள். வேறு வழியில்லாமல் சிங்கத்தை அவர்கள் மடக்கினார்கள்.

‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று இந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவுகூர்ந்தார் எம்.ஏ.திருமுகம்.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

17.01.2021

Comments (0)
Add Comment