புதுச்சேரி டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் வெங்கடேஷ், தன் அம்மாவின் சமையலுக்காக ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை. அவனே செல்போன் கேமராவில் படம்பிடித்து, மொபைல் ஆப் மூலம் எடிட் செய்து, தலைப்பிட்டு யூ டியூப்பில் பதிவேற்றுகிறான். பாண்டிச்சேரி சமையல் வித் வி.பி.கிச்சன் என்ற பெயரில் இதுவரை 57 காணொளிகளைப் பதிவேற்றியுள்ளனர்.
இந்தச் சேனலில் இறால் வடை, சிக்கன் கிரேவி, செட்டிநாடு மீன் வறுவல், மட்டன் குழம்பு, பிரிஞ்ஜி சாதம், தவா பன்னீர், சைவ கறிவறுவல், கலாகட், கோவில் புளியோதரை, ரவா பாயசம், பாதாம் கீர், மஷ்ரூம் மசாலா என தென்னிந்திய மற்றும் வடநாட்டுச் சமையல் காணொளிகள் கொட்டிக் கிடக்கின்றன.
யூ டியூப் சேனல் தொடங்கவேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது? என்று அவரிடம் கேட்டதற்கு சிறுவன் வெங்கேடசின் அம்மா மஞ்சுளா ஆர்வத்துடன் மகனின் திறமையில் பூரித்துப்போய் பேசுகிறார்.
“ஏதாவது சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நான் குடும்பத் தலைவியாக வீட்டில் இருக்கிறேன். வெளியில் போய் எதுவும் செய்ய முடியாது என்பதால், நாம் செய்கிற சமையலை எல்லோருக்கும் தெரியவைப்போம் என நினைத்தேன். அதற்காக என் மகனும் மகளும் கொடுத்த உற்சாகத்தில் பாண்டிச்சேரி சமையல் வித் வி.பி.கிச்சன் என்ற இணையதளத்தைத் தொடங்கினோம்” என்றார்.
செல்போன் மூலம் ஷூட் செய்வதில் இருந்து, எடிட் செய்வது வரை ஆர்வத்துடன் ஈடுபடுகிறான். ஓவியங்கள் வரைவான். மேஜிக் செய்வான். அவனுக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. படிச்சுக்கிட்டு, ஹோம் ஒர்க் செய்துக்கிட்டுத்தான் சமையல் வீடியோவை எடுக்கிறான்.
சேனலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதைப் பற்றி யாரிடமே நான் சொல்லவில்லை. என் சமையலைப் பார்த்து அவர்களாகவே முன்வந்து சப்ஸ்க்ரைப் செய்யட்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் அந்த வளர்ச்சி மகிழ்ச்சியானதாக இருக்கும் என நினைத்தேன். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக சேனல் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவர் வெங்கடேஷ் மழலைக் குரலில் பேசுகிறார். கலைகளில் கரைபுரளும் ஆர்வம். “நான் எடிட்டிங், கேமரா எல்லாத்தையும் யூ டியூப் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சரியா எடிட் செய்யமாட்டேன். இப்போது நல்லா செய்ய ஆரம்பித்துவிட்டேன். டிவி ஷோக்கள் அம்மாவுடன் சேர்ந்து பார்ப்பேன். அவர்கள் செய்வதை நானும் ஆர்வமாகப் பார்ப்பேன். கேமரா புதிதாக வாங்கி புரொபஷனலா வீடியோ எடுக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது.
மூன்றாம் வகுப்பில் இருந்து கேமரா எப்படிக் கையாள்வது பற்றி கற்றுக்கொண்டேன். செல்போன்ல சாதாரண மொபைல் அப்ளிகேஷன் வைத்துத்தான் எடிட் செய்கிறேன். மியூசிக்கும், எழுத்தும் பிறகு சேர்ப்பேன். அப்பாவும் அம்மாவும் பாராட்டுவார்கள். என் நண்பர்கள் யூ டியூப் சேனலைப் பார்த்து நல்லா இருக்குடா தம்பி என்று பாராட்டினார்கள்.
ஒரு பொருளைப் பார்த்தால் எப்படி விதவிதமா போட்டோ எடுக்கலாம் என்று எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால்தான் மெல்ல மெல்ல கேமரா கற்றுக்கொண்டேன்” என்கிறான்.
சிறுவன் வெங்கேடசின் எதிர்காலக் கனவு என்ன? “விஞ்ஞானியாக மாற வேண்டும் என்பதுதான் என் எதிர்கால ஆசை” என்று உடனடியாக பதில் வருகிறது. ஒவ்வொரு காணொளியிலும் கற்றுக் கொண்டும் தாயும் மகனும் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். முதலில் நிறையப் பேசியிருக்கிறார்.
பிறகு பேச்சைக் குறைத்துள்ளார்கள். “என் பையன்தான் அதிகம் பேசாதம்மா என்று பேச்சைக் குறைக்கச் சொன்னான். யாரும் பார்க்க மாட்டாங்க என்றான். இப்போது அதிகமாகப் பேசுவதில்லை. மிகக் குறைவாகவே பேசுகிறேன்” என்றார் சமையலில் கலக்கும் மஞ்சுளா.
– தான்யா
16.01.2021 11 : 11 A.M