எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் – 21
“பெருக்கெடுத்து வரும் சரித்திர வெள்ளத்தின் திசையை மாற்றி அமைக்கும் மாபெரும் சக்தி படைத்த சரித்திர நாயகர்கள் உலகில் எப்போதோ ஒருமுறைதான் தோன்றுகிறார்கள்” என்று லார்டு மெக்காலே எழுதிய பொன்மொழி ஒன்றை நமது பழைய தாய் இதழ் ஒன்றில் படித்தேன்.
இதை எதற்கு சொல்கிறேன் என்பதைத் தொடர்ந்து படித்தால் தெரிந்து கொள்வீர்கள். அ.இ.அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டு ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்போது கழகத்தில் சல்லிக் காசு கிடையாது. உழைத்துச் சம்பாதித்ததை ஏழை எளியோர்களுக்கு வாரி இறைத்த வள்ளல் பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழல்.
தேர்தல் நிதி திரட்ட தென்மாவட்டங்களில் கூட்டங்களில் கலந்துகொள்ள என் அன்பு நாயகர் புறப்பட்டார். மதுரை விமான தளத்தில் அவருக்குப் பாதுகாப்புக்காக வந்தவர்களின் வண்டி பழுதாகி நின்று விட்டது. மாற்று வண்டி உடனே அமைத்துக்கொள்ள அப்போது வசதி இல்லை. இருந்தும், அவர்களை உடன் அழைத்துச் செல்ல இவருக்கோ நேரம் இல்லை.
அடுத்தடுத்து அடுக்கடுக்கான கூட்டங்கள் பாதுகாப்பிற்கு ஒரே நபர். ஸ்டண்ட் பார்ட்டி முத்து மட்டும்தான் விக்கிரம சிங்கபுரத்திலும் காயல்பட்டினத்திலும் லட்சக்கணக்கில் திரண்டக் கூட்டம். ஊருக்குள் நுழைய முடியாத அளவு கூட்டம். எங்கேயும் மருந்துக்குக்கூட ஒரு போலீஸ் கிடையாது.
தூத்துக்குடி கூட்டம் இரவு ஒரு மணிக்கு ஆரம்பித்தது. மூன்று லட்சம் மக்கள் இவரது பொன் முகம் காண அந்த நடு இரவுப் பொழுதிலும் கூடியிருந்தனர். அலைமோதும் அந்தக் கூட்டத்தில் இவருக்கு பாதுகாப்பாக இருந்த முத்துவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சினிமாவில் பல பேர்களை சாதாரணமாக நம் தலைவர், உண்மையிலேயே நூற்றுக்கணக்கானவர்களை மிகச் சுலபமாகச் சமாளித்து மேடை ஏறி பேசவும் ஆரம்பித்தார்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்த பட்டுராஜன் அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று பந்தோபஸ்துக்கு ஆள்கேட்கப் பறந்தார்.
காவலர்கள் நிறைய குவிக்கப்பட்டு இருந்தபோதும் அசம்பாவிதங்கள் நடந்தால் தான் காவல்துறை உதவி கிடைக்கும் என்ற பதிலைத்தான் அன்றைய காவல் துறையிடமிருந்து பெறமுடிந்தது.
பட்டுராஜன் அவர்கள் கூட்டத்திடலுக்குத் திரும்பியபோது கூட்டம் முடிந்துவிட்டது.
எப்படி மேடையேறினாரோ அப்படியே திரும்பவும் வேனுக்கு வந்து சேர்ந்தார் என் அன்பு நாயகர்.
பாளையங்கோட்டை நோக்கி அடுத்த பயணம். தூத்துக்குடி விட்டு 3 மயில் கடந்தாகிவிட்டது. திடீரென்று ஸ்டண்ட் பாத்தி, முத்து எங்கே என்றார். வேன் உடனே நின்றது. வழக்கமாக டிரைவர் அருகில் அமர்ந்து வரும் முத்துவைக் காணவில்லை. வண்டியை விட்டுக் கீழே இறங்கிய இவர், “முத்து கூட்டத்தில் சிக்கி இருப்பான் போய் கூட்டி வாருங்கள். முத்துவுக்கு என்னவாயிற்றோ” என்ற கவலையோடு, பின்னால் வந்த வண்டித் தோழர்களிடம் சொல்ல, கார்கள் அத்தனையும் தூத்துக்குடி பறந்தன. பட்டுராஜன் அவர்கள் காவல்துறையில் நடந்ததைச் சொன்னார்.
இவரோ, அவரை சாந்தப்படுத்தி, “மேலே ஆட்சியாளர்கள் போடுகிற உத்தரவுக்கு அவர்கள் என்ன செய்வார்கள். பாவம் அதிகாரிகள்” என்று சொன்னதோடு தன் பாதுகாப்புக்கு வந்த முத்து, வந்து சேருகிற வரை அந்த வண்டியில் கூட ஏறி அமரவில்லை என்றால் அவரது உள்ளம் எப்படிச் சிறந்தது என்பது புரியும்.
அய்யா பெரியாரைப் போலவும், பேரறிஞர் அண்ணாவைப் போலவும் இந்தத் தோட்டத்து தூயவர் கழகத் தோழர்களிடமும், தன்னிடம் ஊழியம் பார்ப்பவர்களிடமும் குடும்பப் பாசத்தோடு இருந்தார் என்பதற்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு உண்டு. அது இதுதான்.
அண்ணா நகர் இடைத்தேர்தல் நடக்கும் சமயம். அப்போது தொழிற்சங்கப் பேரவைச் செயலாளரோடு இணைந்து பணியாற்றிய ஒரு தோழரை காவல் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.
“உன்னை நாங்கள் நினைத்தால் தொலைத்து விடுவோம்” என்று சற்றுக் கடுமையாகவே சொல்கிறார்கள்.
அதற்கு அந்தத் தொண்டர் சொன்னது என்ன தெரியுமா? “அப்படியே செய்… செத்தால் உன் குடும்பத்துக்கு 10 ஆயிரம் கிடைக்கும். ஆனால் நான் செத்ததாக கேள்விப்பட்டால், என் குடும்பத்திற்கு 20 ஆயிரம் கொடுப்பார்.. என் தலைவர்” என்று சொல்லி இருக்கிறார்.
எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்? இந்தத் தோட்டத்து தூயவர் என் அன்பின் நாயகர், இந்த நம்பிக்கை ஏற்பட வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று இப்போது நினைத்தாலும் எனக்குச் சிலிர்க்கும்.
04.09.1988