சிவன் கோயில் முன் திடலில் சப்பரம் நிறுத்தப்பட்டிருக்கும் கீற்றுக் கொட்டகைக்குள், ஒடுங்கி குந்தியிருக்கும் டேவிட் மாறன், இருள் அசைந்து சலசலப்புறுவதைக் கேட்டு, அந்த இரவை வென்று உயிர்த்திருப்பது குறித்து குழப்பமும் வியாகுலமும் அடைந்தான்.
புயல் கடக்கும் இரவு.
ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் கடல் நகர்ந்து ஊருக்குள் நுழைந்துவிட்டது போல விரிவடைந்து கொண்டிருக்கும் இரைச்சல்.
அவன் குந்தியிருந்த கொட்டகைக்கு அருகில் மர வேர்கள் அறுபடும் சடசடப்பு. தலையை மெதுவாக வெளியே நீட்டிப் பார்க்கிறான். கொட்டகை மேட்டு அரசமரம் பம்பரம்போல் சுழன்று அசைகிறது. கொஞ்ச நேரத்தில் அது தரையை விட்டு கிளம்பிவிடும். அது கொட்டகை மேல் விழுந்தால் அவனை பூமியோடு சேர்த்து தட்டையாக்கிவிடும். 300 வருட பழமையான அரசமரம்.
அவன் அங்கிருந்து சட்டென வெளியேறி சிவன் கோயிலின் முன் கோபுர கீழ் மண்டபத்திற்கு ஓடி வருகிறான். பறக்கும் ஈர இலைகளின் சுளிர் மோதல்கள். கைகளால் விசிறித் தடுத்து, ஒரு மூலையில் குந்தி, அரசமரத்தைப் பார்க்கிறான். பிரம்மாண்ட அரசமரம் ஊஞ்சலைப் போல மேலும் கீழுமாக, சன்னதம் கொண்டு ஆடுகிறது.
ஆடியும் சுழன்றும் கொண்டிருந்த அது, வேர்களை சடசடவென மேற்புறமாகக் கிளப்பிக் கொண்டு, தனது ஆயிரம் கிளைகள் சூழ, தலைக்குப்புற அருகிலிருந்த குளத்தில் விழ, மோதலின் வேகத்தில் குளத்து நீர் ஒரு பனைமர உயரத்திற்கு வெள்ளக்காடாக எவ்வித் தெறித்து அடங்குகிறது.
அவன் நெஞ்சடைக்கப் பார்த்த அந்தக் காட்சி அவனை அச்சமூட்டுகிறது. அவன் தனியாளாக புயல் வீசும் இரவை எதிர் கொள்ளும்படியாக விதி அவனைச் சபித்திருக்கிறது.
அரசமரம் விழுந்ததும் குளத்தின் அக்கரை கொஞ்சம் தெளிவாகிறது. அங்கிருக்கும் தோப்புகள் தெரிகிறது. தென்னை மரங்கள் வில் போல வளைந்து ஆடுகின்றன. வீடுகளுக்குள் உறங்காமல் ஆண்களும், பெண்களும், முதியவர்களும், குழந்தைகளுமாக அச்சத்தில் விழித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரது மனங்களிலும் ‘அப்படி நடந்து விடக்கூடாது’ எனும் பிரார்த்தனை, பயம், அவநம்பிக்கை.
தென்னை மரங்கள். அவைதான் அவர்களை செழிப்பும், களிப்புமாக வைத்திருந்தன. தென்னை வருமானம் அவர்களுக்கு நகரத்து மனிதர்களின் போன்றதொரு வாழ்க்கையை அருளி இருந்தது.
காலுக்கு செருப்பு அணியாமல் பள்ளிக்கூடம் போன முந்தைய தலைமுறையினரின் குழந்தைகள் சொகுசு பள்ளி வாகனங்களில் பயணித்து, பள்ளிக்குப் போய் வருகிறார்கள். அவர்களது புதல்வர்களும் புதல்விகளும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.
தென்னை செழித்தோங்கும் கிராமங்களில் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் வளமுடன் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில பள்ளிக் கூடங்கள் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-டூ வரை குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுள்ளன.
தென்னை தந்த வாழ்க்கையால் டெல்டா வட்டங்களில் குளிர்மையும் பசுமையும் பரப்பி இருந்தது. அதை ஓர் இரவின் விடியலுக்கு முன்பாக துடைத்தழித்த புயலுக்குள் ஒளிந்திருந்த லட்சம் பெண் யானைகளின் எக்காலம்.
கஜா புயலின் பிளிறலை தனி ஆளாக சிறு மண்டபத்தில் குந்தி நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட் மாறன். அந்த கிராமத்தில் 350 வீடுகளும் அவனுக்கு உறவுக்காரர்கள் தான். அவனுடன் உடன் பிறந்தவர்களையும் சேர்த்து மொத்தம் நான்கு சகோதரர்கள். அவர்களது வீடும் அதே ஊரில் தான். ஆனால் அவன் ஒண்டி மனிதனாக புயலின் வலிய கரங்கள் அவனது கன்னத்தில் தொடர்ந்து அறைவதைப் பொறுத்துக் கொண்டு, இயலாதவனாக நெடும் இரவைக் கடந்து கொண்டிருக்கிறான்
திகிலும் குளிர் நடுக்கமும் தாங்கொணா வலியுமாக அவனுக்குப் பின்புறம் மூடப்பட்ட கோயிலின் பெருங்கதவுகள்.
டேவிட் மாறன். அவனது பழைய பெயர் தமிழ் மாறன். பத்தாம் வகுப்பு தேறி தென்னை வளர்ச்சி வாரியத்தின் கயிறு தொழில்நுட்பம் பட்டயப்படிப்பு முடித்து, அதே துறையில் பயிற்சி அளிப்பவனாக தற்காலிகப் பணியில் சேர்ந்து, நாகர்கோவில் பகுதியில் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த கிறிஸ்துவ யுவதி மேல் காதல் கொண்டு, டேவிட் மாறனாக மதம் மாறி, திருமணம் செய்து கொண்டு 20 வருட வாழ்க்கைக்குப் பிறகு மனைவியுடன் கருத்து வேறுபாடாகி, குடும்பத்தைவிட்டு விட்டு மீண்டும் டெல்டாவிற்கே வந்துவிட்டான்.
அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகள்கள் மற்றும் மகன் திருமண வயதைத் தொட்டிருந்தனர். அவனது மனைவி அவனது சொந்த ஊருக்கு வந்து உள்ளூர் பஞ்சாயத்தார்கள் உதவியோடு அவனின் பூர்வீகக் குடி மனையை நான்கு சதுரங்களாகப் பிரித்து, அதில் டேவிட் மாறனுக்குச் சேரவேண்டிய சதுர பங்கு நிலத்தை அவனது சகோதரர்களிடமே கிரையம் செய்து விட்டு, பணத்தை அவள் தம் மக்கள் செலவிற்கு எடுத்துப் போய் விட்டாள்.
இவன் பிறந்த ஊரிலேயே அகதி போலத் திரிந்து சின்னச்சின்ன எலக்ட்ரீசியன் வேலை செய்தும், மீன் பிடித்தும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்.
இரவுப் படுக்கை கோயில் எதிரே இருக்கும் சப்பரக் கொட்டகையில். டேவிட் மாறன் அந்தக் கிராமத்தில் தனித்த ஆளாக இருந்தான். புயல் சூறையாடிய இரவில் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்த தென்னந்தோப்புகளைப் பற்றி, மறுநாள் காலையில் அதன் நேரடிக் காட்சிகளை அவன் தான் ஊர் மக்களுக்கு சீற்றத்தின் வேகம் தணியாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.
(தொடரும்…)
– கே.பி.கூத்தலிங்கம்
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்.
15.01.2021 02 : 55 P.M