சோலை சுந்தரபெருமாள்: வண்டல் இலக்கியத்தின் அடையாளம்!

தஞ்சாவூர் விவசாய வாழ்வின் விழுமியங்களையும் மக்களின் எதார்த்தங்களையும் கீழத்தஞ்சையின் வட்டார வழக்கில் படைப்புகளாக எழுதிக் குவித்த எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மறைந்துவிட்டார். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று வீட்டிலேயே இருந்து வந்தார். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

விவசாயத்திலும் ஆர்வம் கொண்டிருந்த சோலை, வட்டார வழக்கில் எழுதுவதிலிருந்து கடைசிவரை விலகவேயில்லை. தஞ்சாவூர் வட்டார எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்தார்.

மண் உருவங்கள், வண்டல் சிறுகதைகள், ஓராண்காணி, ஒரு ஊரும் சில மனிதர்களும், மடையான்களும் சில காடைகளும், வட்டத்தை மீறி, வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும், கப்பல்காரர் வீடு போன்ற சிறுகதைத் தொகுதிகளையும், உறங்க மறந்த கும்ப கர்ணர்கள், நஞ்சை மனிதர்கள், செந்நெல், ஒரே ஒரு ஊர்ல, தப்பாட்டம், பெருந்திணை, தாண்டவபுரம், பால்கட்டு, மரக்கால், எல்லைப் பிடாரி போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

அதேபோல் மனசு என்கிற குறுநாவல் தொகுப்பையும், தமிழ் மண்ணில் திருமணம், மருத நிலமும் சில பட்டாம்பூச்சிகளும், வண்டல் உணவுகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்ட பெரும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் சோலை சுந்தரபெருமாள்.

கீழ்வெண்மணிப் படுகொலை நிகழ்வுகளை செந்நெல் என்ற பெயரில் நாவலாக எழுதினார். பத்துக்கும் அதிகமான பதிப்புகளைக் கண்ட செந்நெல் நாவல், அவருக்கு நல்ல மதிப்பைத் தேடித் தந்தது.

சோலையின் எழுத்துக்கள் வண்டல் இலக்கியம் என்ற வகைமையின் அடையாளமாக இருந்தது. அதை கட்டியெழுப்பக் கடைசிவரை அவர் முயற்சித்துக்கொண்டே இருந்தார்.

தஞ்சை வட்டாரச் சொல்லகராதி தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். சோலை சுந்தரபெருமாளின் சொந்த ஊர் திருவாரூருக்கு அருகில் உள்ள காவனூர். நெல் வயல்கள் சூழ்ந்த அழகான கிராமம். தஞ்சாவூர் – நாகை சாலையில் அம்மையப்பன் என்ற ஊரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எண்பதுகளில் பிற்பகுதியில் தாமரை இதழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.

தமுஎகசவின் மாநில செயற்குழு உறுப்பினராக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவருடைய படைப்புக்களை ஒரு ரூபாய் விலையில் சின்னச் சின்ன வெளியீடுகளாக வெளியிட்டவர்.

திருஞானசம்பந்தரை ஒரு நாயகனாகக்கொண்டு அவர் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவலை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டபோது துணிச்சலுடன் அதை எதிர்கொண்டார்.

கீழ்வெண்மணியின் வரலாற்றை மக்கள் மொழியில் பதிவு செய்த “வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு” என்ற நூல் வெண்மணி வரலாற்றுக்கு அவர் செய்த முக்கியமான பங்களிப்பு.

வெண்மணிக்குப் பிறகான கீழத்தஞ்சை விவசாயிகள் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய ‘எல்லைப் பிடாரி’ நாவலே சோலை சுந்தரபெருமாள் கடைசியாக எழுதிய படைப்பாகும்.

தமிழக அரசு விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, தமுஎகசவின் பெருமாயி குப்பண்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படைப்பாளராகத் திகழ்ந்த சோலை சுந்தரபெருமாளின் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

-தான்யா

13.01.2021   11 : 40 A.M

Comments (0)
Add Comment