முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “அ.தி.மு.க. தலைமைக் கழக கட்டடத்திற்கு, நம் நெஞ்சில் வைத்து போற்றுகின்ற எம்.ஜி.ஆர் பெயரைக் கொண்டு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ என்று பெயர் சூட்டுகின்ற அறிவிப்பை 17-ம் தேதி அவரது பிறந்தநாளில் அறிவிப்பது நாம் அவருக்கு செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர். தன் உழைப்பால் சம்பாதித்த பணத்தால் வாங்கிய சொத்துதான் அந்த இடம் என்பதை அனைவரும் அறிவோம்.
எம்.ஜி.ஆர். கட்சிக்கு இந்த இடம் வேண்டும் என்று சொன்னவுடன் மகிழ்வுடன் மறுப்பேதும் சொல்லாமல் கட்சிக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து இந்த இடமாகும்.
அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் ஒரு அறைக்கு ஜானகி அம்மாள் பெயரும், முதல் மாடி அரங்கத்திற்கு ஜெயலலிதா பெயரையும் வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
12.01.2021 – 11 : 46 A.M