“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது”
தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் மனதில் குமையும் உணர்வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்திருப்பவர் யார் என்கிறீர்களா?
முன்பே சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழர் பிரச்சனையில் அலட்சியம் காட்டியபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் தான் இவை.
இந்த உண்மையை, சர்வதேசத்தின் ‘கள்ள மௌனத்தை’ உலகிற்கு உணர்த்தியது இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமாக நடந்தேறிய இனப்படுகொலைச் சம்பவங்கள்தான்.
கொத்துக் கொத்தாக எத்தனை தமிழர்களின் உயிர்கள் பலியாகின? நம்முடைய தமிழ்ப் பெண்களில் எத்தனை பேர் சொல்லவொண்ணாத பாலியல் வன்முறைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தார்கள்? எவ்வளவு தமிழர்கள் காணாமல்போன பட்டியலில் சேர்ந்தார்கள்? எத்தனை தமிழர்கள் வீடற்று, நாடற்றவர்களாக மாறினார்கள்?
பதுங்கு குழிகளும், ஷெல்களும், கொத்துக் குண்டுகளும் எந்நேரமும் மனதில் உரைந்திருக்கும் மரண பயமும், கலங்கடிக்கும் கதறல்களுமாக ஏன் தமிழர்களின் வாழ்க்கை மாறிப்போனது?
தமிழ்மண்ணில் கன்னிவெடிகளும், கந்தக நெடிகளும் மட்டுமல்ல – எங்கு பார்த்தாலும் உயிர் பறிக்கப்பட்ட தமிழர்களின் மரண நெடி அடிக்கிறது.
மறக்க முடியுமா?
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி அன்று முள்ளிவாய்க்காலில் தனித்தீவாகக் குவிக்கப்பட்ட தமிழர்கள் 40,000 பேரை இலங்கை அரசு கொன்று குவித்த பயங்கரத்தை?
ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஒன்றரை லட்சம் பேர் பலியான அவலத்தை?
நிறவெறி போராட்டத்தின் உக்கிரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு வெறியில் நடந்த தாக்குதல்களைப் பற்றி படித்திருக்கிறோம்.
ஆனால், இந்த நூற்றாண்டில் நமக்குப் பக்கத்தில் உள்ள நாட்டில் இவ்வளவு உயிர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் என்கிற இன வேறுபாட்டை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளப்பட்டதைக் கேட்கும்போது, பன்னாட்டுத் துணையுடன் எம் தமிழர் வேட்டையாடப்பட்டதை காட்சி ஊடகங்கள் அம்பலப்படுத்தும்போது மனம் பதைபதைக்கிறது. நெஞ்சம் விம்முகிறது. நம் கண்கள் பனிக்கின்றன.
-முனைவர் ம.நடராசன் தொகுத்த ‘முள்ளிவாய்க்கால்; குருதி தோய்ந்த குறிப்புகள்’ நூலிலிருந்து…
11.01.2021 – 03.45 P.M