விவசாயிகளின் போராட்டத்தைக் கையாளும் விதம் கண்டனத்திற்குரியது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்குகள் மற்றும் டெல்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது போன்ற காரணங்களை முன்வைத்துத் தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது “விவசாயிகள் போராடிவரும் நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது.

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை.

மத்திய அரசு மனு மீது உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. விவசாயச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் பிடித்தால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும்.

வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என்றால் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். ஆனால்,  இந்தச் சட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தடை இல்லை. விவசாயிகள் தொடர்ந்து போராடலாம். போராட்டக் களத்தில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது. போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர். சிலர் தற்கொலை செய்கின்றனர்; வயதானோர், பெண்கள் போராடுகின்றனர்; என்னதான் நடக்கிறது?

மத்திய அரசு-விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது. சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா? வேளாண் சட்டங்கள் நல்லது என்று இதுவரை ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை.

யாருடைய ரத்தத்தையும் எங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை! இந்திய குடிமக்கள் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க இயலாது. உத்தரவின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கக் கூடாது.

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தால் விவசாயிகள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதபடி பொதுவான ஒரு இடத்திற்கு போராட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.

வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள்; இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்” என்று காட்டமாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

11.01.2021 – 03.14  P.M

Comments (0)
Add Comment