புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,
“நான் எங்கு செல்லட்டும்..?”
புத்தர் சிரித்தபடி, “நீயே தேர்வு செய்.!” என்றார்.
ஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாகச் சொன்னார் சீடர்.
காஷ்யபரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார் புத்தர். “அந்தப் பகுதிக்கா..? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படிப் பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..?”
“ஆமாம்!” என்றார் காஷ்யபர்.
“உன்னிடம் மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.” என்றார்.
முதலில், “அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..?” என்று கேட்டார் புத்தர்.
“மிகவும் மகிழ்ச்சியடைவேன்… ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்காமல் அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே அதற்காக நன்றி சொல்வேன்!”
“ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..?”
“என்னைக் கொல்லாமல் வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என்று மகிழ்ச்சியடைவேன்.”
“ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்..?’
“மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே, அதனால் மகிழ்ச்சியடைவேன்!” என்றார் காஷியபர்.
“நீ எங்கும் செல்ல முழுத்தகுதிப் பெற்றவன். நீ போய்வா காஷியபா..!” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.
எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழலையும் மகிழ்ச்சியாகவே காண முடியும். தோற்பதற்கு தயாராக இருப்பவன் ஒருபோதும் தோல்வியடைய முடியாது.
09.01.2021 02 : 45 P.M