“நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்துப் பேசவில்லை” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு பிரேத்யக பேட்டி அளித்தார்.
அதில் “நான் வருத்தத்தில் உள்ளேன். நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை. நான் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன்.
ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையைக் கூட தமிழக அரசு நிராகரித்துள்ளது. அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது” என்றார்.
புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வானவர். இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.
சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை எனவும் இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்திருந்தார். இவரது பணி காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.
இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்த சகாயத்தின் அவகாசம் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் முறைப்படி அவர் அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்
09.01.2021 12 : 50 P.M