எம்.ஜி.ஆர் ஒரு அஷ்டாவதானி!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-20

1984-ம் ஆண்டு எனது அன்பு நாயகர் உடல்நலங்குன்றி மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்குப் போனார்.

விழா, இலக்கிய நயம் வாய்ந்த விழா. பெரும்புலவர் ‘அதன்கோட்டு ஆசான்’ அவர்களுக்கு நினைவுச் சின்னமும், நமது காலத்தில் வாழ்ந்திட்ட சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களுக்கு நினைவகமும், பொதுவுடைமை மாமேதை ஜீவா அவர்களுக்கு சிலை திறப்பும் ஆகும்.

கற்றறிந்த மேதையர்கள் மேடையிலும் கீழுமாக குழுமியிருந்தார்கள். தொல்காப்பிய அறிவை பெரும்புலவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நமது இதய தெய்வம் இறுதியாகப் பேச எழுந்தார். லட்சக்கணக்கான மக்களின் ஆர்வ அலை மோதிக் கொண்டிருந்தது. ஆனால் பெரும் புலவர்களிடையே இருந்த எண்ணமோ வேறுபட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘இவர் என்ன அப்படிப் பேசிவிடப் போகிறார்’ என்கிற மாதிரிதான் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

இவர் பேச ஆரம்பித்தார். “நான் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். நாடகத்தில் ‘நவரச நடிப்பு’ என்பார்கள் ரவுத்திரம், ஹாஸ்யம், சோகம், காமம், மோகனம் என்று வரிசைப்படுத்திவிட்டு தமிழில் இதனை ‘ஒன்பான் சுவை’ என்பார்கள்.

ஆனால் தமிழர்களின் மூல இலக்கண, இலக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒன்பது சுவைகள் கூறப்படவில்லை என்று நிறுத்தினார்.

பெரும் புலவர்கள் அத்தனை பேரும் ஆய்வு செய்யாத ஒரு விஷயத்தை அன்று சொன்னார். அறிஞர்கள் அத்தனை பேரும் நாற்காலியின் விளிம்பிற்கே வந்து விட்டார்கள்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசினார். “தொல்காப்பியத்தில் சினம், சிரிப்பு, வெகுளி, துன்பம் முதலான எட்டு சுவைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஒன்பதாவது சுவையான ‘மோனம்’ அதாவது ‘தவம்’ அதில் இல்லை. காரணம் ‘தவம்’ தமிழர்கள் நெறியல்ல. அது மாற்றார் நெறி!”

இப்படி தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஒரு தொல்காப்பிய விரிவுரையே நிகழ்த்தினார்.

அவர் ஒரு நடிகர். அரசியலில் முதல்வர். இப்படி ஏதோ ஒன்றில்தான் சம்பந்தப்பட்டு இருப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். தான் கற்றதை மட்டுமே துணையாகக் கொண்டு, அறிஞர்கள் அவையிலும் அவர்களை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு என் நெஞ்சில் நிற்கிற நிஜமான சான்று இவர்.

இளம் வயதில் தன் கையெழுத்திலும் தமிழின் உணர்வு தலை தூக்குவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் என்று அவரே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அநேகருக்குத் தெரியாத அந்த உண்மையை நான் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களும் எனது அன்பு நாயகரும் சிறுவயதில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஒன்றாக நடித்து வந்தவர்கள்.

அந்தக் காலத்தில் இவர், தன் பெயரை ‘எம்.ஜி.ராமச்சந்தர்’ என்று தான் எழுதி வருவாராம். இதைக்கண்ட நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர் அவர்கள் “வடநாட்டுக்காரர்களைப் போல பெயர் எழுதுவது நன்றாக இல்லை அழகான தமிழில் எழுதலாமே” என்றார்.

அதன்படியே பிறகு கடைசிவரை கையெழுத்திட்டு வந்தார். இதை தோட்டத்துத் தூயவரே சொல்ல கேட்டு இருக்கிறேன் நான்!

(தொடரும்…)

28.08.1988

Comments (0)
Add Comment