உனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் டாக்டர்.கமலா செல்வராஜின் பள்ளிப் பிராயம்.

***

தினமும் ஒருவரிடம் இருந்து ஏதோ ஒரு நல்ல விஷயத்தை நான் கற்றுக் கொண்டே இருக்கிறேன். என் வாழ்க்கையில் இரண்டு ஆசிரியர்களை எப்போதும் மறக்கமுடியாது.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஃப்ரி யுனிவர்சிட்டி வகுப்பில் ஓவியமும் பெயிண்டிங்கும் பிடிக்கும் என்பதால் சேர்ந்தேன். எனக்கு அங்கு ஓவியம் கற்றுக்கொடுத்தவர் எம்மா தேவப்ரியம். இன்னொருவர், ஸ்கேன் எடுப்பதற்கு பயிற்சி அளித்தவர் தேவகி. இருவரும் என் இளம் பிராயத்தின் ஞாபகங்களில் நிறைந்திருக்கிறார்கள்.

தேவப்ரியம் மேடத்தின் உடன்பிறந்தவர்கள் 3 சகோதரிகள், 3 சகோதரர்கள். குடும்பம் கடைசிவரை ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள் என்பதற்காக தேவப்ரியம் மேடமும் அவரது இரு சகோதரிகளும் திருமணமே செய்து கொள்ளவில்லை. சகோதரர்களின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே வளர்த்தார். நான் ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

எப்போதும் நேர்த்தியாக உடை அணிந்திருப்பார். கிறித்துவர் என்பதால் பொட்டு வைத்துக் கொள்ளமாட்டார். நல்ல நிறம். ரொம்ப அமைதியாக மென்மையாக சாந்தமாகப் பேசுவார். நான் நன்றாக வரைவேன் என்பதால், என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.

எனக்கு அவர் மேல் பைத்தியம். அவ்வளவு பிடிக்கும். எங்களுக்கு கொடைக்கானலில் வீடு உண்டு. அங்கிருந்த டைமண்ட் குவார்ட்டர்ஸில் தேவப்ரியம் டீச்சருக்கும் வீடு இருந்தது.

விடுமுறையில் அங்கு செல்வோம். மழை பெய்யும் நாளில் மழை விட்டவுடன் மரங்களின் அடியில் காளான் பூத்திருக்கும். நான் காளான் சாப்பிட மாட்டேன். ஆனால் மேடத்திற்காக மழை எப்போது விடும் என்று காத்திருந்து காளானைப் பறித்துக்கொண்டு ஓடுவேன்.

ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தாலும், எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவுடன் என் விருப்பத்தைச் சொன்னேன்.

தேவப்ரியம் மேடத்திற்கு என்னைப் பிரியவே மனமில்லை. என் தோழி ஒருவருடன் சேர்ந்து மேடத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதிப் பாடினேன். கண்களில் நீர் வழிய அவர் கேட்டுக் கொண்டிருந்தது 30 ஆண்டுகளுக்குப் பிறகும் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

மருத்துவப் படிப்பில் சேர்ந்த பிறகும் டீச்சரோடு தொடர்பில்தான் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் அவரைப் போய்ச் சந்திப்பேன். சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்ப மருத்துவத்தில் பயிற்சிபெற விரும்பியபோதும் இதே டீச்சர்தான் எனக்கு உதவியாக இருந்தார்.

எனக்கு எப்போதுமே செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லை. தற்செயலாக ஒருநாள் என் கணவரின் கன்சல்டேஷன் அறையில் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த ஒரு நாளிதழைப் புரட்டினேன். அதில் ஐரோப்பாவில் முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்திருந்த செய்தி வெளியாகி இருந்தது. அதைப் படித்தவுடன் முழுமையாக அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

அப்போது தேவப்ரியம் டீச்சர் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் இருந்தார். என் அக்கா டாக்டர் ரேவதி அமெரிக்காவிலும், இங்கிலாந்தில் என் தோழியும் இருந்தார்கள். இவர்கள் மூவருக்கும், “எனக்கு டெஸ்ட் டியூப் பேபி தொழில்நுட்ப மருத்துவத்தில் பயிற்சிபெற வேண்டும். இந்தத் துறையில் யாராவது தேர்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டு எழுதினேன்.

என் அக்கா பதிலே போடவில்லை. லண்டனில்தான் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது என்றாலும் தர்மவல்லி என்ற என் டாக்டர் தோழி “தெரியாது” என்று சொல்லிவிட்டாள். என் டீச்சர்தான் எனக்குக் கைகொடுத்தார். சோதனைக்குழாய் கற்றுக் கொடுக்கும் மருத்துவரின் விவரங்களோடு விண்ணப்பதையும் சேர்த்தே அனுப்பினார்.

ஆசிரியை கொடுத்த தகவலைத் தொடர்ந்து டாக்டர்.கார்ல் உட்டுக்கு இந்தியாவில் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளைப் பற்றி விரிவாக எழுதினேன். மெல்பேர்னில் மோனாஷ் பல்கலைக் கழகத்தில் சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கப் பயிற்சி வகுப்புகள்  1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அவர் பதில் எழுதினார்.

நவம்பர், டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் டீச்சர் இந்தியா வந்துவிட்டார். ஆனாலும் அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சாவியைக் கொடுத்து என்னை அங்கே தங்கிக் கொள்ளச் சொன்னார். தன் தோழிகளிடமும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் என்னை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தார்.

சோதனைக்குழாய் தொடர்பாக ஒரு வாரம் பயிற்சியும் ஒரு வாரம் சர்வதேசக் கருத்தரங்கிலும் நான் கலந்துகொண்டேன். எனக்கு எல்லா வகையிலும் ஆதர்சமாக இருந்த தேவப்ரியம் டீச்சர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்டார்.

ஓவியக் கண்காட்சி, கலைக்கூடத்தைப் பார்த்து ரசிக்க இன்றும் எனக்கு ஆர்வம் அதிகம். மாதா கோயில், இந்துக் கோயில் கர்ப்பக்கிரகம் எப்படி கட்டப்படுகின்றன என்பதைச் சொல்லி அதன் வளைவுகளை வரைய எனக்கு படிப்படியாகக் கற்றுக் கொடுத்தவர் அவர்.

தேவகி டீச்சர் பி.எஸ்.சி., பட்டம் பெற்றவர். மெடிஸ்கேனில் டாக்டர் சுரேஷின் தனிச் செயலாளராக வேலையில் சேர்ந்தார். எனக்கு ஸ்கேன் எடுக்க கற்றுக்கொடுக்க ஒரு நபரை அனுப்ப முடியுமா என்று டாக்டர் சுரேஷிடம் கேட்டபோது தேவகியை அனுப்பினார். ஒரு வருடம் முழுவதும் தினமும் காலையில் ஒரு மணி நேரம் வந்து என் கையைப் பிடித்து ஸ்கேன் எடுக்கக் கற்றுக்கொடுத்தார்.

தேவையின்றி எதுவும் பேசமாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். எப்போதும் ஆர்வமாகப் படித்துக் கொண்டே இருப்பார். டாக்டர் சுரேஷ் ஸ்கேன் எடுக்கும்போது அவர் சொல்லும் குறிப்புகளை தேவகி எழுதுவார்.

ஒருநாள் ஸ்கேன் எடுத்துக் கொண்டிருந்தபோது குறிப்புகளைச் சொல்ல, டாக்டர் சுரேஷ் மறந்துவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, “நான் சொல்றேன், எழுதிக்கோம்மா” என்று டாக்டர் சொல்ல, “நான் ஏற்கெனவே எழுதிட்டேன் சார்” என்று சொல்லியிருக்கிறார்.

“நான்தான் சொல்லவே இல்லையேம்மா, எப்படி எழுதினே?” என்று கேட்டபோது, “நான்தான் பார்த்துட்டு இருந்தேனே சார்” என்று பதில் வந்திருக்கிறது.  தேவகி எழுதியிருந்த குறிப்புகளைப் பார்த்த சுரேஷ் அசந்து விட்டார்.

அதன் பிறகு, “நீ சோனாலஜிஸ்ட் ஆகணும். செக்ரட்டரியா இல்லை” என்று சொல்லி, அவரும் அவர் மனைவியும் அவருக்கு பயிற்சி தந்து சிகாகோவிற்கு அனுப்பி சோனாலஜிஸ்ட் கோர்ஸ் படிக்க வைத்தார்கள். இன்று தேவகி திறமையான சோனாலஜிஸ்ட்டாக இருக்கிறார்.

எப்படி முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். நல்ல விஷயங்கள் யாரிடம் இருந்தாலும் கற்றுக்கொள்ள நான் தயங்குவதேயில்லை. அதனால்தான் 30 ஆண்டுகளுக்கு முன், நான் எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.

“யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை” என்று அப்பா சொல்வார். என் பெற்றோரும் பாட்டியும்கூட ஆசிரியர்கள்தான்.

வீட்டிற்கு யார் வந்தாலும் வெறுங்கையோடு அனுப்பக் கூடாது என்பதையும் பாட்டியிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். கொடுக்க எதுவுமே இல்லை என்றாலும் மரத்திலிருந்த ஒரு எலுமிச்சை பழத்தையாவது பறித்துக் கொடுத்து விடுவார்.

“நீ உனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று அப்பாவும், “நீ எதையும் எதிர்பார்த்து உழைக்காதே. உன் வழியில் உழைச்சிட்டே இரு. ஒருநாள் அதற்கான பலன் உன் வழியில் வரும்” என்று அம்மாவும் நம்பிக்கை தந்தார்கள்.

அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களால் தான் என் வாழ்க்கைப் பயணம் இனிதாக சென்று கொண்டிருக்கிறது”.

09.01.2021  02 : 22 P.M

Comments (0)
Add Comment