தனித்துவமான தேனி பருத்திச் சந்தை!

தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ எனப்படும் கோவை மாநகர் ஜவுளி ஆலைகளுக்குப் புகழ் பெற்றது. ஆனால், அந்த மில்களுக்கு ஆதாரமான பருத்தியை வழங்குவது தேனியில் கூடும் பருத்தி சந்தைதான். கோவையில் உள்ள மில்கள் விரும்பி வாங்கும் உயர் ரகப் பருத்திக்குப் புகழ்பெற்றது தேனி பருத்திச் சந்தை. ஏறத்தாழ 50 வருட வரலாறுடையது இந்தச் சந்தை.

தேனி நகரின் சுற்று வட்டாரங்களில் 100 கிலோமீட்டர் பரப்புக்கு மேற்பட்ட பகுதிகளில் பருத்தி பயிரிடப்படுகிறது. இந்தப் பருத்தி எல்லாம் விற்பனைக்காக வந்து சேர்வது தேனிக்குத் தான். அதனால் தான் தேனியில் பருத்திச் சந்தை பிரமிக்கத்தக்க அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

தேனி நகரில், பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியகுளம் மெயின் ரோடுதான் சந்தை கூடும் இடம். வாரத்தில் இரு நாட்கள் (வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில்) இந்தச் சந்தை கூடுகிறது.

சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும் மூட்டை மூட்டையாக இங்கு வந்து இறங்குகிறது பருத்தி.

எங்கு திரும்பினாலும் விவசாயிகளும் வியாபாரிகளும் தான் நிறைந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு நடுவே இணைப்புப் பாலமாக இருப்பவர்கள் கமிஷன் ஏஜெண்டுகள். பெரியகுளம் மெயின் ரோட்டில் மட்டுமே வரிசையாக சுமார் 150 பருத்தி கமிஷன் கடைகள்.

இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் தேனிப் பருத்திச் சந்தையில் விலைகள் நிர்ணயிக்கப்படுவது என்னவோ துணி மூடி, விரல் தொட்டுத் தான். ஒவ்வொரு விரலையும் ஒவ்வொரு விதமாகத் தொட்டால் அது ஒரு எண்ணிக்கையைக் குறிக்கும்.

தொடு உணர்வில் பருத்தி விலையைத் துல்லியமாகக் கணக்கிட்டு விடுகிறார்கள். வண்டிகளிலும் லாரிகளிலும் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகள், அவற்றை இறக்கி வைப்பதோடு சரி.

துண்டுகளுக்கு அடியில் ரகசியமாகக் கைவிரல் பிடித்து கமிஷன் ஏஜெண்டுகளும் வியாபாரிகளும் பேரம் பேசி, இவர்களுடைய பருத்திக்கு விலை நிர்ணயிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் விவசாயிகள்.

கொஞ்ச நேரத்தில் பேரம் முடிந்து வியாபாரிகள் வசம் பருத்தி மூட்டைகள்.

விரிந்த அந்த மார்க்கெட்டில் ஒருபுறம் மாடு வியாபாரம். அங்கும் இதே முறையில்தான் பேரம் நடக்கிறது. கமிஷன் ஏஜெண்டுகள் தான் பருத்திச் சந்தையில் முக்கியமானவர்கள். இவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே, நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.

பருத்தியை விற்றுக் கொடுப்பதோடு முடிந்துவிடுவதில்லை இந்தப் பிணைப்பு. ஒவ்வொரு கமிஷன் கடைகளிலும் 30-லிருந்து 50 விவசாயிகள் வரை தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அந்தக் கடைகளுக்கு வாடிக்கையாகப் பருத்தியைக் கொண்டு வருகிறார்கள். அந்த விவசாயிகளுக்கு கமிஷன் ஏஜெண்டுகள் வெவ்வேறு வகைகளில் கடன் கொடுக்கிறார்கள். உரங்களை விநியோகிக்கிறார்கள். விவசாயிகள் கொண்டு வரும் பருத்திக்கான பணத்தை பேரம் முடிந்ததும், வழங்கிய உரம், கடனுக்கான தொகையைக் கழித்துக் கொண்டு அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

“எங்களுக்குக் கமிஷன் நூற்றுக்கு மூன்று சதவிகிதம். முன்பெல்லாம் பருத்தி அதிகம் வரும். இப்போது பருத்தி வரத்து குறைந்து விட்டது. அதனால் எங்களுக்கு வருமானம் குறைந்து விட்டது. பருத்திக்குத் திட்டவட்டமான விலை கிடையாது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விலை” என்கிறார் கமிஷன் ஏஜெண்ட்களில் ஒருவரான கே.நடராஜன்.

“1936-லிருந்து தேனியில் இந்தப் பருத்தி மார்க்கெட் நடக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் கேந்திரம் இது. பருத்தியில் சிறந்த ரகமான எம்.சி.யூ.5 ரகம் தேனி மார்க்கெட்டிற்கு அதிகம் வரும். இதற்கு கிராக்கியும் அதிகம். ஆனால் தற்போது விளைவிக்கப்படும் பருத்தி ரகங்களின் தரம் முன்பிருந்தது மாதிரி இல்லை. டி.ஸி.ஹெச், எல்.ஆர்.ஏ என்கிற வீரிய விதைகளை வாங்கி விதைக்கிறார்கள்.

அதோடு ஒரே பயிரைத் தொடர்ந்து நடுவதாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு விடுகிறது. தமிழ்நாட்டில் பருத்தி தேவை ஆண்டுக்கு 12-லிருந்து 15 லட்சம் பேல் (1 பேல் என்பது 170 கிலோ). ஆனால் தமிழ்நாட்டில் விளைவதோ 6 லட்சம் பேல்கள் தான். இதனால் மற்ற மாநிலங்களிலிருந்து பருத்தியை வரவழைக்க வேண்டிய நிலைமை.

முன்பு தேனி நகரச் சந்தைக்கு 60 ஆயிரம் மூட்டைகள் வரை வந்து கொண்டிருந்தன. ஏறத்தாழ வாரத்திற்கு 5 கோடி ரூபாய் பணப்புழக்கம் இந்தச் சந்தையில் மட்டுமே இருந்தது. தற்போது பருத்தி வரத்து குறைந்துவிட்டதால் பணப்புழக்கமும் வாரத்திற்கு ஒன்றே கால் கோடி ரூபாயாகக் குறைந்து விட்டது.

“44 வருஷங்களாக நான் இந்தத் தொழிலில் இருக்கிறேன். கடந்த நான்கைந்து வருடங்களாக லாபம் மிகவும் குறைவு” என்று தங்கள் தரப்புப் பிரச்சனைகளைச் சொல்கிறார் தேனி பருத்தி வியாபாரிகள் சங்கச் செயலாளர் எஸ்.கே.நடேசன்.

மார்க்கெட்டில் பேரம் முடிந்து வாங்கப்படும் பருத்தி நேரடியாக ஜின்னிங் பேக்டரிகளுக்கு போய்விடுகிறது. அங்கு விதையுடன்கூடிய பருத்தியிலிருந்து பஞ்சு தனியாகவும் விதைகள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன. தேனியிலேயே 25-க்கும் மேற்பட்ட ஜின்னிங் பேக்டரிகள் இருக்கின்றன. அதோடு 8 ஸ்பின்னிங் மில்களும் உள்ளன. இவற்றிற்கெல்லாம் பருத்திதான் ஆதாரமான விஷயம்.

கே.வி.ஆர். ஜின்னிங் பேக்டரி பங்குதாரர்களில் ஒருவரான ஆர்.ரெங்கராஜன் சொன்னார், “கோவையில் உள்ள பல மில்கள் நேரடியாக இங்கு பருத்தியைக் கொள்முதல் செய்யக் காரணம், இந்தப் பகுதியில் விளையும் எம்.சி.யூ.5 ரகம்தான்.

தமிழ்நாட்டில் இரண்டாவது அதிக எண்ணிக்கையில் ஜின்னிங் பேக்டரிகள் இங்கு இருக்கின்றன. இருந்தும், நான்கைந்து வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. தொழில் நசிந்து கொண்டிருக்கிறது. கமிஷன் கடைகள் குறைந்து கொண்டிருக்கின்றன. காரணம், பருத்திப் பயிரில் விவசாயிகள் நம்பிக்கை இழந்திருப்பதுதான்.

வாரத்துக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் புழங்கிக் கொண்டிருந்த இந்தச் சந்தைக்கு எப்படி இந்தச் சரிவு ஏற்பட்டது? தேனியைச் சுற்றி பரவலாகப் பருத்தி சாகுபடிதான். அங்கு விளைந்துதான் தேனி மார்க்கெட்டுக்கு பருத்தி வந்தாக வேண்டும். விவசாயிகள் தரப்பில் என்ன சிக்கல்கள்? விவசாயிகளிடையே கேட்டோம்.

“தேனியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மண் கரிசல் மண் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் உகந்த மண். நன்றாகப் பருத்தி விளைந்து கொண்டிருந்தது உண்மைதான். கடந்த பத்து வருடங்களில்தான் இதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஒரு குழியில் பருத்தி சாகுபடி செய்தால் ஏறக்குறைய ஏழு குவிண்டாலிலிருந்து 15 குவிண்டால் வரை கிடைக்கும். இது ஆறேழு வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலைமை. ஒரு குவிண்டால் பருத்திக்கு 1500 ரூபாயிலிருந்து 1800 ரூபாய் வரை விலை அப்பொழுது கிடைக்கும் அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது உற்பத்திச் செலவு கூடிவிட்டன. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலையும் கூடிவிட்டன. பூச்சித் தொல்லைகளினால் சமயங்களில் விளைச்சல் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவதும் உண்டு. அதோடு பருத்திக்குக் கிடைக்கும் விலையும் குறைந்து போய்விட்டது. இப்போது குவிண்டால் 1300 ரூபாய்க்குத்தான் போகிறது. விவசாயிக்கு நஷ்டம்தான் வருகிறது. நஷ்டம் இல்லையென்றாலும் கூட கிடைப்பது மிகக்குறைந்த லாபம்தான்.

இதனால் பருத்தி விவசாயமே சீர்குலைந்துவிட்டது. அதன் எதிரொலியாக தேனி மார்க்கெட்டிற்குப் பருத்தி வருவதும் குறைந்து விட்டது என்கிறார் தேனியை அடுத்த ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன்.

“வருடத்திற்கு இரண்டு முறை பருத்தி சீசன். முன்பு பருத்தியில் வரலட்சுமி செடி மாதிரி அபூர்வமாக இருந்த பருத்தி ரகங்கள் எல்லாம் இப்போது இல்லை. எம்.சி.யூ., எல்.ஆர்.ஏ. ஆகிய ரகங்கள் தான் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்த ரகங்களை விளைவித்தாலும் இப்போது சரிவர வருமானம் கிடைப்பதில்லை.

அதனால் பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு கரும்பு உற்பத்திக்கு வந்து விட்டார்கள். வேறு வழி?” என்கிறார் தேனியைச் சேர்ந்த புஷ்பராஜ்.

வருஷ நாட்டிலிருந்து மார்க்கெட்டிற்கு 12 மூட்டைப் பருத்திக் கொண்டு வந்த விவசாயி ஒருவரைச் சந்தித்தோம். அவரும் வருமானம் குறைந்துபோய் விட்டது என்றார் கவலை தோய்ந்த முகத்துடன். பருத்திச் சந்தைக்கு ஆதாரமான விவசாயிகளின் நிலைமை இப்படி!

பருத்தியில் தனித் தரத்துடன் விளங்கிக் கொண்டிருந்தது தேனி பருத்தி மார்க்கெட். இந்தச் சரிவில் இருந்து மீள முடியாதா? முடியும். அதற்கு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு தரமான பருத்தி விதைகளை அரசே வழங்குகிறது. நல்ல விளைச்சலுக்கு அதுதான் ஆதாரம். தமிழ்நாட்டில் அப்படி இல்லை இங்கு தரமான விதைகளுக்காக விவசாயிகள், தனியாரை எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழ்நிலை.

விதைகளின் தரத்தையும் சரி பார்க்க வழியில்லை. பூச்சிகளால் பாதிக்கப்படும் நிலையில் அதனால் ஏற்படும் நஷ்டம் முழுவதும் விழுவது விவசாயிகளின் மீதுதான்.

தமிழக அரசு நிறுவனமான பருத்தி ஆய்வு மையத்தில் உருவாக்கப்படும் சோதிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு அரசே வழங்கி, விளைவுகளையும் அவ்வப்போது பருத்தி விளைச்சல் இங்கு திரும்பவும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்பது விவசாயிகள் தரப்பு வாதம்.

தமிழகப் பருத்தித் தேவைகளுக்கு பிற மாநிலங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை விட, நம் மாநிலத்திலேயே பருத்தி விளைச்சலைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்குமானால் தேனி நகரப் பருத்திச் சந்தை தனி முக்கியத்துவம் பெறும்.

– மணாவின் ‘தமிழக தொழில் முகங்கள்’ நூலிலிருந்து…

08.01.2021    02 : 22 P.M

Comments (0)
Add Comment