தி.மு.க.வுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ள ஒவைசி!

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. இந்த முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றதால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த வெற்றி தொடரும் என எதிர்பார்க்கிறது தி.மு.க.

ஆனால் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் தி.மு.க.வின் கனவைத் தகர்க்கும் வகையில் தடைகள் வருகின்றன. முதலில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தவர் ரஜினிகாந்த்.

கமல்ஹாசனைப் போன்று ரஜினிகாந்தை அத்தனை சுலபமாக ‘பத்தோடு பதினொன்று’ என தி.மு.க.வால் அலட்சியப்படுத்த முடியவில்லை.

பல்வேறு ரூபங்களில் ரஜினிகாந்த் தி.மு.க.வுக்கு சேதாரங்களை உருவாக்குவார் என அண்ணா அறிவாலயம் பதற்றத்தில் இருந்தது நிஜம்.

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நேரிட்டால் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் ரஜினிகாந்த் பக்கம் சாயும் சூழல் இருந்தது.

ரஜினிகாந்த் மூன்றாவது அணியை உருவாக்கினால், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும் நிலையும் தி.மு.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆனால் ரஜினியை தடுத்து நிறுத்தி விட்டார்கள். உடல்நிலை தடுத்ததா? அல்லது உடன்பிறப்புகளுக்கு நெருக்கமானவர்கள் தடுத்தார்களா? என்பது ரஜினிகாந்துக்கு மட்டுமே வெளிச்சம்.

நிம்மதியாக சுவாசிக்க ஆரம்பித்தால், கலைஞரின் மூத்த மகன் மு.க.அழகிரி ஒரு பக்கம் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறார்.

அழகிரியும், ஒவைசியும், தமிழகத்தில் வெற்றியை ருசிக்க முடியா விட்டாலும், தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியும். 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதை செய்து காட்டியுனார் மு.க.அழகிரி.

அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. சில இடங்களில் (கலைஞர் உயிருடன் இருந்தபோதே) அந்தக் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. காரணம் அழகிரி.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்திருக்கும்.

ஆனால் சில சின்னக் கட்சிகளுடன் பீகாரில் களம் இறங்கிய ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தது.

அந்தக் கட்சி ஐந்து தொகுதிகளில் வென்றது. நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக மறைமுகமாக துணை போனது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஒவைசி கட்சி அறிவித்துள்ளது.

ஐதராபாத் மக்களவை உறுப்பினரான ஒவைசி, தெலுங்கானாவைத் தாண்டி பல மாநிலங்களில் தனது பரப்பை விரிவுபடுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் நகரப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரை தி.மு.க. கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் விருப்பம்.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் இப்போது இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், மனிதநேய மக்கள் கட்சியும் இதனை விரும்பவில்லை.

ஒவைசி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால், தங்களுக்கான இடங்களைத் தி.மு.க. குறைத்துவிடும் என்ற பயம் பிரதானக் காரணம்.

ஒவைசியை வளரவிட்டால், தங்கள் செல்வாக்கு மங்கிப்போகும் என்பது இரண்டாவது காரணம்.

தி.மு.க.வின் சிறுபான்மைப் பிரிவு சென்னையில் தாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு ஐதராபாத்துக்கு நேரில் சென்று ஒவைசியை அழைத்தது.

கூட்டணியில் உள்ள இரு முஸ்லிம் கட்சிகளின் எதிர்ப்பால், பிறகு பின் வாங்கிக் கொண்டது.

ஒவைசி கட்சியைக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஏற்கனவே, ஸ்டாலினை முதல்வராக வரவிட மாட்டேன் என அண்ணன் அழகிரி சபதம் எடுத்து வாள் சுழற்ற ஆரம்பித்துள்ள நிலையில், ஒவைசி பெறும் ஒவ்வொரு ஓட்டும் தி.மு.க.வுக்கு விழவேண்டிய ஓட்டுகள் என்பதை ஸ்டாலின் உணராமல் இல்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசி கட்சி வாணியம்பாடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதிகளில் நின்றது.

வாணியம்பாடியில் 10 ஆயிரத்து 117 வாக்குகள் பெற்று, காலம் காலமாக இங்குள்ள முஸ்லிம் கட்சிகளை மலைக்கச் செய்தது.

வன்னியர் பெல்ட் என வர்ணிக்கப்படும் வாணியம்பாடியில் பா.ம.க. வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வாங்கி, ஒவைசி கட்சிக்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்தது.

“தி.மு.க. கூட்டணியில் சீட் ஒதுக்காவிட்டால், இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவோம்’’ என ஒவைசி கட்சியின் தமிழக தலைவர்கள் பிரகடனம் செய்துள்ள நிலையில் தி.மு.க. விழி பிதுங்கி நிற்பது உண்மை.

– எம்.மாடக்கண்ணு.

08.01.2021 02 : 45 P.M

Comments (0)
Add Comment