என்ஜினீயரிங் சைக்காலஜி பற்றி தெரிந்து கொள்வோம்!

என்ஜினீயரிங் சைக்காலஜி என்று அழைக்கப்படும் பொறியியல் உளவியல் என்பது உளவியல் துறையில் ஒரு தனிப்பெரும் பிரிவாக வளர்ந்துவருகிறது.

இது மனிதர்களுக்கு எந்திரங்களுக்குமான உறவை விவரிக்கும் புதிய படிப்பு. இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாள் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் எப்படித் தொடர்புகொள்வது, எப்படி உணர்வது, அதன் தாக்கம் போன்றவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

என்ஜினீயரிங் உளவியலாளர்கள், மக்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை எளிதாகப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

என்ஜினீயரிங் சைக்காலஜியின் வரலாறு 1940-களில் இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் தொடங்குகிறது. அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அக்காலத்தின் மேம்பட்டதாக இருந்தன.

ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதில் சில தவறுகள் நடந்தன. ஆனால் அவை மிகப்பெரிய தோல்வியைத் தரும் நிலைக்கு இழுத்துச்சென்றன.

அப்போது புழக்கத்திலிருந்த எந்திரங்களும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தும் மனிதர்களின் தேவைகளுக்கும் திறமைக்கும் ஏற்றவையாக உருவாக்கப்படவில்லை. அவற்றைப் பயன்படுத்துவதில் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள்.

கருவிகளைப் பயன்படுத்துவதில் மனிதர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்ட உளவியல் நிபுணர்கள் பொறியியலாளர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.

பயன்பாட்டுக்கு எளிதான கருவிகளைத் தயாரிக்கும் பணியில் உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கினார்கள். இங்கேதான் என்ஜினீயரிங் சைக்காலஜி என்ற புதிய துறை பிறக்கிறது.

அதாவது, பயன்பாட்டுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான தொழில் நுட்பக் கருவிகளும் புதிய மென்பொருள்களும் நுகர்வோர்கள் மற்றும் தொழில்களின் நவீனகாலத் தேவையாக மாறியிருக்கின்றன.

என்ஜினீயரிங் சைக்கலாஜிஸ்ட்டுகள் ஏன் தேவைப்படுகிறார்கள்? ஏனெனில் தயாரிப்புகளை மேலும் மனிதர்களுக்கு இணக்கமுள்ளதாக, மேலும் தரமிக்கதாக, மேலும் பயன்படுத்துவதற்கு எளிதானதாக எந்திரங்களைத் தயாரிப்பதில் அவர்கள் முக்கிய பங்குவகிக்கிறார்கள்.

பொறியியல் உளவியல் பட்டதாரிகள் பொறியியல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்கள்.

பொறியியல் உளவியலாளர்களின் முக்கியமான பணிகளில் பிரதானமானது, நுகர்வோர்களின் விருப்பம், தேவையை உணர்ந்து தயாரிப்புகளை உருவாக்குவதாக உள்ளது.

தயாரிப்புகளை மக்கள் எப்படி அணுகுகிறார்கள், சாத்தியமான பிரச்சினைகளை அடையாளம் காண்பது, பாதுகாப்புப் பிரச்சினைகள் அல்லது அதன் அம்சங்களைப் பயன்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகள் தொடர்பான பணிகளில் என்ஜினீயரிங் சைக்காலஜிஸ்ட்டுகள் ஈடுபடுகிறார்கள்.

தொடர்ந்த கவனிப்புகள், ஆய்வுகள் மற்றும் இடையீடுகள் வழியாக நடத்தைகள் சார்ந்த பாதுகாப்பு நடைமுறைகள், விபத்துகள் மற்றும் காயங்களிலிருந்து நிறுவனங்களைக் காக்கமுடியும்.

பாதுகாப்பான நடத்தைகள், ஆபத்தான நடத்தைகளைக் குறைப்பது மற்றும் சாலை மற்றும் பணியிடங்களில் விபத்துக் காயங்களிலிருந்து பாதுகாப்பது போன்றவற்றில் நடத்தை ஆய்வுகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இங்கேதான் என்ஜினீயரிங் சைக்காலஜிஸ்ட்டுகள் பணியாற்றுகிறார்கள்.

சில தயாரிப்புகள் மட்டும் மற்றவற்றைவிடச் சிறப்பாக இருக்கின்றன. ஏன் எப்படி என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழுந்திருக்கின்றன. எப்போதும் சிறந்த தயாரிப்புகள் மக்களின் எதார்த்த வாழ்க்கைச் சூழல்களுடன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டவையாக இருக்கும்.

மனிதர்களால் அதிகம் நேசிக்கப்படும் தயாரிப்புகள் தோற்றம், தரம், பயன்பாடு ஆகியவற்றில் மனிதக் காரணிகள் மற்றும் பொறியியல் உளவியலாளர்களின் நிபுணத்துவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கப்படங்களும் பயனாளர்களின் திறன்களும் பொறியியல் உளவியல் முக்கிய பகுதியாக உள்ளன. உதாரணமாக, அதன் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட தயாரிப்புகளை எந்த வகை மனிதர்கள் விரும்புகிறார்கள் என்ற ஆய்வு பொறியியல் உளவியலாளர்களுக்குத் தேவையாக உள்ளது.

மேலும், நுகர்வோரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தத் தயாரிப்பை அவர்களது பயன்பாட்டிற்கு எளிதாகவும், மேலும் கவரக்கூடிய விதத்தில் மாற்றவேண்டிய பணியிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பெரும்பாலான என்ஜினியரிங் சைக்காலஜிஸ்ட்டுகள், தங்களுடைய பயணத்தை நான்கு ஆண்டு பொது உளவியல் இளங்கலைப் படிப்பில் இருந்து தொடங்குகிறார்கள். உளவியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களே என்ஜினீயரிங் சைக்காலஜி துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

நீங்கள் சுற்றுச்சூழல் உளவியல் படிப்பில் சேர்பவராக இருந்தால், அந்தப் படிப்பு ஹியூமன் பேக்டர்ஸ் அண்ட் எர்கனோமிக் சொசைட்டியால் அங்கீகரிக்கப்பட்டதாக என்று அறிந்துகொள்வது நல்லது.

என்ஜினீயரிங் சைக்காலஜி படிப்பவராக இருந்தால், அதில் பொது உளவியல், ஹியூமன் பேக்டர்ஸ் சைக்காலஜி, தொழில்துறை நிறுவன உளவியல், பணிச்சூழலில், பயோமெக்கானிக்ஸ், ஹியமன் – கம்ப்யூட்டர் இன்ட்ராக்சன் மற்றும் புள்ளியியல் பாடங்கள் அடங்கியிருக்கும்.

நீங்கள் என்ஜினீயரிங் சைக்காலஜிஸ்ட்டாக விரும்பினால், அதுதொடர்பான படிப்புகளையே தேர்தெடுத்துப் படிப்பது சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

என்ஜினீயரிங் சைக்காலஜிஸ்ட் வேலை எங்கே தேவைப்படும்? காலமாற்றத்தில் பல்வேறு நவீன துறைகளில் அவர்களுடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. மென்பொருள் உருவாக்கம், கணிப்பொறி அறிவியல், பொறியியல் மற்றும் விமானத்துறை போன்றவற்றில் பொறியியல் உளவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

அதேபோல, மருத்துவத் துறையில் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மருத்துவக் கருவிகளின் பயன்பாடுகள்தான் தீர்மானிக்கின்றன. அங்கேயும் பொறியியல் உளவியலாளர்களின் பணி முக்கியமானது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் என்ஜினீயரிங் சைக்காலஜி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதுபோன்ற நவீன கால மாற்றங்களுக்கான புதுமையான படிப்புகளை சில கல்வி நிலையங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனால் பொறியியல் உளவியல் பற்றிய பிரத்யேகமான பட்டப்படிப்புகள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கு சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுகளில் சென்று என்ஜினீயரிங் சைக்காலஜியில் முதுநிலைப் படிப்பைத் தொடரலாம்.

இளநிலைப் படிப்பில் என்ஜினீயரிங் சைக்காலஜி படிக்க விரும்புகிறவர்கள் இணையம் வழியாக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் படிக்கலாம்.

ஒரு பொருளை யார் பயன்படுத்துவார்களோ, அவர்களுடைய தன்மையை அறிந்து அதனைத் தயாரிக்கும் பணிகளில் என்ஜினீயரிங் சைக்காலஜிஸ்ட்டுகள் தேவைப்படுகிறார்கள். ஒரு விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடும் குழந்தையின் இயல்புகளைப் புரிந்துகொண்டு அதைத் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

“இந்தியாவில் என்ஜினீயரிங் சைக்காலஜி இப்போதுதான் மெல்ல அறிமுகமாகத் தொடங்கியுள்ளது. அதற்கென தனி பட்டப்படிப்புகள் வரவில்லை” என்கிறார் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி நிறுவனத்தின் தென்னிந்தியப் பிராந்தியத் தலைவர் ராகவன்.

– தான்யா

08.01.2021 12 : 45 P.M

Comments (0)
Add Comment