வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
வரும் 10-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 11-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் புதுச்சேரியில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் மற்றும் நத்தத்தில் தலா 21 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக புதுச்சேரி, பூண்டி, அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.
07.01.2021 04 : 45 P.M