குழந்தைகளைக் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடி…!

ஜல்லிக்கட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?

வாடிவாசலில் இருந்து துள்ளியபடி காளைகள் சீறியபடி நுழைவதும், அதன் திமிலைப் பிடிக்க ஆக்ரோஷமாக இளைஞர்கள் பாய்வதுமாக அந்த நேரத்திய கூச்சலைக் கேட்டிருக்கிறீர்களா?

நிறைய விமர்சனங்கள், கண்டனங்கள், எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் இருந்தாலும், சிலிர்ப்பான தருணங்கள் அவை.

ஜல்லிக்கட்டுக்கு அடையாளத்தைப்போல ஆகிப்போன ஊர் அலங்கா நல்லூர். இப்போதும் தடைகளைக் கடந்து இடையிடையே ஜல்லிக்கட்டு நடக்கிற ஊரில் அதற்குக் காரணமாக இருக்கிறவர்கள் யார் தெரியுமா?

இங்கிருக்கிற சாமியான முனியாண்டி.

அலங்காநல்லூருக்குள் நுழைந்ததும் இடதுபக்கத்தில் நீண்டு கிளைத்த மரத்தடியில் உக்கிரமான விழிகளுடன் காவல் காத்தபடி இருக்கிறார் முனியாண்டி.

இவருக்குப் பின்னால் வாய்மொழி மரபாக ஒரு கதை.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய சேர நாட்டிலிருந்து ஆற்றில் அடித்தபடி வந்து  ஒருவழியாக வந்தடைந்திருக்கிற முனியாண்டி கோவில் இருக்கிற அலங்காநல்லூரில் எங்கு பார்த்தாலும் காலரா.

கொத்துக் கொத்தாகப் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்த போது ஊர்மக்கள் முனியாண்டி கோவிலுக்கு வந்து மன்றாடியிருக்கிறார்கள்.

அப்போது அருள் வந்தாடியிருக்கிற கோவில் பூசாரி சொன்ன அருள் வாக்குப்படி உருவானது தான் ஜல்லிக்கட்டு என்கிற மஞ்சுவிரட்டு.

காலராவைத் தடுக்கணும்னா இங்கே சல்லிக்கட்டு நடத்துங்க.

அதைப் பார்க்க வர்றவங்களை நான் பலியெடுத்துக்கிடுவேன்”.

இப்படி சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்திருக்கிறது ஜல்லிக்கட்டு. இப்போதும் முனியாண்டி கோவிலில் பூஜைகள் நடந்தபிறகே துவங்குகிறது ஜல்லிக்கட்டு.

அன்றைய அருள்வாக்குப்படி இப்போதும் பல்வேறு உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரி தென் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடக்கும் ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருப்பது வீரம்மட்டுமல்ல; பல கிராமங்களில் வீற்றிருக்கிற காவல் தெய்வங்கள்.

இன்றைக்கும் கிராமங்களை ஒன்று சேர்க்கிற அம்சமாக கிராமத்துக் கோவில்கள் இருக்கின்றன. பெரும்பாலும் ஊருக்கு வெளியேயும், சில ஊர்களில் ஊருக்கு நடுவிலும் இருக்கிற கோவில்களில் இருக்கிற சாமிகள் பெரும்பாலும் மண்ணினால் செய்யப்பட்டவை.

சில கல்லினாலும், அபூர்வமாகச் சில சாமி சிலைகள் செம்பொன்னாலும் உருவாகியிருக்கின்றன. பல கோவில்களில் பீடம் மட்டுமே. சில கோவில்களில் சந்தனம் தெளித்த மரப்பெட்டி வடிவத்தில் இருக்க, இன்னும் சில இடங்களில் மரங்களே சாமிகளாக வழிபாட்டுக்குள்ளாகி இருக்கின்றன.

திருவிழாக் காலங்களில் பெரும்பாலான ஊர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தை அனுபவித்தாலும், இன்னும் சாதியக் கூறுகள் அந்த வழிபாட்டிலும் பிரதிபலிப்பதை உணரமுடிகிறது.

பெருந்தெய்வக் கோவில்களுக்குள் பிற்படுத்தபட்ட சமூகத்தினரும், தாழ்த்தபட்ட சமூகத்தினரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டநிலையில் தான் அநேக இடங்களில் தங்களுக்கென சில சாமிகளைஉருவாக்கி வழிபட்டிருக்கிறார்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்தினர்.

அந்தத் தெய்வங்களை சிறு தெய்வங்கள்என்கிற அடைமொழிக்குள் அடைத்துவிடுகிற பிரயோகமும் நம்மிடம் இருக்கிறது.

இன்னும் தென்மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் குறிப்பிட்ட சாதியனரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கோச்சடையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வெளியே மதில் சுவரில் ஒரு சதுரவடிவில் ஓட்டை. அதன் வழியாக வெளியில் நின்று தான் குறிப்பிட்ட சமூகத்தினரால் சாமியை வழிபட முடியும். பெண்களோ பல கோவில்களை அணுக முடியாத நிலையும் நீடிக்கிறது.

சில கோவில்களில் பெண்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு வெளியே நின்று வழிபடுவதற்கான எல்லைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.

இதன் இன்னொரு முகமாக கிராமங்களில் இருந்து வேலை வாய்ப்புத் தேடி நகரங்களுக்குள் நுழைந்த மக்களால் அங்கிருந்த கோவில்களுக்குள் வழிபடச் செல்லமுடியவில்லை.

இந்த நிலையில் தாங்கள் வசித்த இடங்களிலும், சாலையோரங்களிலும் தங்களுடைய சாமிகளுக்கென்று எளிமையான கோவில்களை உருவாக்கிக் கொண்டார்கள். திருவிழாக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்தச் சமூகச் சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் தெருக்களில் ஏன் இவ்வளவு கோவில்கள் பெருகிப் பரந்திருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.

தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட நகரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டபோது, இம்மாதிரி சாலையோரம் கட்டப்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டு, அங்கிருந்த சிலைகள் ஆற்றில் கொண்டுபோய்ப் போடப்பட்டன.

அப்போது அவற்றை வழிபட்ட பெண்கள் அந்தச் சிலைகளைக் கட்டிப்பிடித்தபடி ஆற்றில் அழுத அழுகை பார்க்கிறவர்களை நெகிழ வைத்தது. எளிய அந்தச் சாமிகளுடன் அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தது அவர்களுடைய உறவு.

ஏதோ கிராமங்களில் சிறு வடிவத்தில் இருக்கிற சாமிகளுக்கும், அந்தப் பகுதியில் இருக்கிற மக்களுக்கும் எப்படி இப்படியொரு நெருக்கம் சாத்தியம் என்கிற கேள்விகளோடு ஆச்சர்யப்படுகிறவர்கள் இந்தப் பகுதிகளுக்கு திருவிழாக் காலங்களில் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்.

தங்கள் மனதில் குடியேற்றியிருக்கும் சாமிகளுக்காக எத்தனை வலிகளையும் தாங்குவதற்குத் தயாரான மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறவர்கள் வலியோடு உணர முடிகிறது.

புதுவைக்கு அருகில் சாமி ஊரில் வலம் வருவதற்கு முன்னால் அலகு குத்துகிற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.

வாயின் ஒரு ஓரத்தில் ஒரு கன்னத்தில் நீண்ட இரும்புக் கம்பியை அநாயாசமாகக் குத்தி மறுபுறக்கன்னத்தில் அந்தக் கம்பியை வெளியே இழுத்ததைப் பார்த்தபோது புதிதாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் தலை கிறுகிறுத்தது.

அலகு குத்திய பெண்கள் சர்வ சாதாரணமாக எழுந்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள நடந்து போனார்கள்.

அதிலும் ஆண்கள் முதுகில் சிறுசிறு இரும்புக் கொக்கிகளை சர்வசாதாரணமாகக் குத்தி அதில் சிறு தேரை இழுத்துக் கொண்டு போனபோது நமக்குத் தான் வலித்தது.

ஏன் இத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்கிற கேள்வியை அந்தச் சூழலில் பலராலும் எழுப்ப முடியவில்லை.

ஈரோடு பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கோவில். அங்கு திருவிழாக் கொண்டாட்டம். அதன் ஒரு பகுதியாகச் சிறு கத்திகளைக் கொக்கியில் மாட்டி முதுகில் அடித்தபடி நூற்றுக் கணக்கானவர்கள் ஊர்வலமாகப் போனபோது, அதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரத்தத் துளிகள் தெறிப்பதைப் பார்க்க முடிந்தது.

கரூருக்கு அருகில் பெண்கள் தலையில் ஈரத்துடன் குனிந்தபடி இருக்க பூசாரி மடேரென்று அவர்கள் தலையில் தேங்காயை அடுத்தடுத்து உடைத்துக் கொண்டே போனார். தலையை மெதுவாகத் தொட்ட மாதிரி பாவனையுடன் எழுந்து போனார்கள் நேர்த்திக்கடனாக அதைச் செய்த பெண்கள்.

இன்னொரு கோவிலில் பெண்கள் கீழே மண்ணில் படுத்திருக்க, பூசாரி ஆவேசத்துடன் அவர்கள் மேல் கால் பதித்தபடி நடந்து போவதைச் சற்றுத் திகிலுடன் பார்க்க முடிந்தது.

மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகே ஒரு கோவில். இங்கு வினோதமாக கோவிலுக்கு முன்னால் பெரிய குழிகளை வரிசையாகத் தோண்டி வைத்திருந்தார்கள்.

பூசாரியின் குரல் கிடைத்ததும், தங்கள் கையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த சிறு குழந்தைகளை அந்தக்குழிகளுக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடினார்கள். மூடிய கொஞ்ச நேரத்தில் மண்ணிலிருந்து அந்தக் குழந்தைகளை வெளியே எடுத்தார்கள்.

திருவிழாக் காலத்தில் அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த இந்தவிதமான அபாயகரமானநேர்த்திக்கடன்கள் அரசு தலையிட்ட பிறகு தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றன. நேரடியாக இப்படிக் குழந்தைகள் புதைக்கப்பட்டதைப் பார்த்தபோது பதைபதைப்பு அடங்க எனக்கு வெகுநேரமானது.

கும்பகோணத்திற்கு அருகில் உடல் நலத்திற்காக வேண்டிக் கொண்டவர்களைப் பாடையில் படுக்க வைத்துத் தூக்கிக் கொண்டு போவது திருவிழாவின் ஒரு பகுதியாகத் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதைப் போலவே திருவிழாவின் போது குழந்தைகளுடன் தீக்குழி இறங்குவதும் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. கையில்  சூட்டுடன் அக்னிச்சட்டியை ஏந்துவது நடக்கிறது. உடம்பு முழுவதும் வைக்கோல் பிரியைச் சுற்றிக் கொண்டு வலம் வருவது நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு உண்டபடி தன்னை வருத்திக் கொள்வதில் துவங்குகிற வலிகள் மேலே சொன்ன பல்வேறு விதத்தில் நீடிக்கின்றன. பக்தர்கள் என்கிற அளவில் தங்களுக்கு நெருக்கமான சாமிகளுடன் கிராமப்பகுதி மக்கள் கொண்டிருக்கிற உறவை உளவியில் ரீதியாக விளக்குவது சற்றுச் சிரமம் தான்.

இந்த அளவுக்குத் தங்களை வருத்தி ஏன் சாமிகளைக் கொண்டாடுகிறார்கள் என்கிற கேள்விகளை கிராமத்து வெளியில் யாரும் எழுப்புவதில்லை.

இதை விவரிக்கிறபோது வாசிப்பவர்களுக்கு இதை இவ்வளவு நுட்பமாக ஒருவித அதிர்ச்சி மதிப்போடு சொல்ல வேண்டுமா என்கிற கேள்வி எழலாம்.

தங்கள் நம்பிக்கை உருத்திரண்ட மாதிரி இருக்கிற சாமிகளுடன் எப்படிப்பட்ட உறவு நடைமுறையில் இருக்கிறது என்பதற்காகவே இதைச் சொல்ல நேரிடுகிறது.

இதைவிட அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன இதே கிராமத்துக் கோவில்களில் பூசாரிகள் திருவிழாக் காலங்களில் நடத்துகிற பூஜைகளும், உச்சாடனச் சடங்குகளும். அதிலும் மயானபூஜையின்போது நள்ளிரவில் ஆடு, கோழி, பன்றிகளைப் பலியிடுகிறபோது நிகழ்கிற சடங்குகள் பார்ப்பவர்களுக்குப் பீதியை ஏற்படுத்தக் கூடியவை.

திருச்சி மாவட்டத்தில் எருமைகளை மொத்தமாகக் கோவில் திருவிழாவின் போது பலியிடும் வழக்கம் அரசு தலையிட்ட பிறகு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருந்தாலும், கிராமத்தில் பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கைகளில் ஊறிய பெண்களும், ஆண்களும் தங்கள் பகுதிகளில் இருக்கிற கிராமத்துச் சாமிகள் மீது கொண்டிருக்கிற நெருக்கம் மூதாதையர்களுடன் கொண்டிருக்கிற உணர்வைப் போன்ற நெகிழ்வுத் தன்மை கொண்டது.

கிராமத்து வாழ்க்கையில் எதிர்கொள்கிற சிரமங்கள், நிராசைகளை, எதிர்பார்ப்பின் சரிவுகளை-இந்த விதமான நம்பிக்கைகளின் மூலம் கடக்கிறார்கள் என்றும் சொல்லமுடியும்.

தமிழகத்தில் உள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான கிராமத்துக் கோவில்களைச் சுற்றிலும் எவ்வளவோ மரத்தொட்டில்களும், மஞ்சள் துணிகளும் குழந்தைகளுக்கான ஏக்கங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே எத்தனையோ நம்பிக்கைகள் அதைச் சுற்றி அடர்ந்திருக்கின்றன.

இந்த நம்பிக்கைகளை விலகி நின்று விமர்சிப்பது மிகச் சுலபம். பெருந்தெய்வ வழிபாட்டில் ஆண்டாளைப் போன்ற பக்தைகள் பெருந்தெய்வத்துடன் கொள்ளும் நெருக்கம் இந்தவிதமான விமர்சனத்திற்கு ஆட்படுவதில்லை. ஆனால் கிராமத்து நிலப்பரப்பில் விமர்சனங்கள் எழுகின்றன.

அதே சமயம் எளிமையான சாமிகளுடன் இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான மாற்று என்னஇதை விமர்சிக்கிறவர்கள் எதை இந்த மக்களுக்கு முன்னால் இன்னொரு மாற்றாக முன்வைக்கப்போகிறார்கள் என்பது தான் பிரச்சினை.

கிராமத்து வயற்புறத்தில் முளைத்த பசுஞ்செடியைப் போல எழுந்திருக்கும் சாமிகளையும், அவற்றின் மீது சுற்றியுள்ள மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் களைய முற்படும் பட்சத்தில் அந்த வெற்றிடத்தை எந்த மனநல மருத்தவர்களாலும் நிரப்பமுடியாது என்பது மட்டும் உண்மை.

  • மணா

07.01.2021 02 : 50 P.M

Comments (0)
Add Comment