புதிய கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கொரோனா அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து வேகமாகப் பரவி வருகிறது.

இந்தப் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த மனுவில், இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, உரிய வகையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றதா என்று கேள்வி எழுப்பியது.

மேலும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினர்.

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18-ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்து, வெளிநாட்டு பயணிகளைத் தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழுவின் ஆலோசனையைப் பெற மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என மத்திய அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06.01.2021 03 : 34 P.M

Comments (0)
Add Comment