புத்தாண்டில் வாழத்தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டின் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையான நகர்வுகளும் புதிய ஆண்டில் தொடங்கியுள்ளன. அதற்கான அடையாளமாக வந்திருக்கிறது கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களைப் பற்றி அறிவதற்கான இணையதளம்: https://covid-19-vaccine.live
ஆமாம். ஒரு நம்பிக்கையை இந்தத் தளம் மக்களுக்கு அளித்திருப்பது உண்மைதான். கொரோனாவுக்கான தடுப்பூசி போடுவது தொடங்கியுள்ள நிலையில், உலக நாடுகளில் தடுப்பூசித் திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாட்டிலும், எத்தனை பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை மக்கள் தொகைக்கு நிகரான விகிதத்தில் இந்த இணையதளம் அளிக்கிறது. மிக எளிதாகத் தெரிந்துகொள்ள வழிசெய்யும் வகையில் பட்டியலாகத் தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள நாடுகள் பட்டியலைப் பார்த்து அந்த நாடுகளில் தடுப்பூசி நிலவரத்தை அறியமுடியும். மேலும், உலக வரைபடம் மீதும், தடுப்பூசி தகவல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
கடந்த ஆண்டு முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அளிக்கும் கொரோனா வைரஸ் டிராக்கர் தளங்கள்தான் அதிகம் இருந்தன.
தற்போது கொரோனா தடுப்பூசி டிராக்கர் தளம் அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம்தான். ஜோனாதன் பிஷர் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மக்களுக்குப் பயனுள்ள தகவலை அளிக்கும் இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
– தான்யா
06.01.2021 12 : 31 P.M