கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?

கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது.

இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக் கொண்டிருக்கிறது. சில நாடுகள் மறுபடியும் ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. இதன் தாக்கத்தால் பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கு வருவதையே தவிர்த்திருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் இங்கு கொரோனாவின் அடுத்த அலை பரவ வாய்ப்பில்லை என்றிருக்கிறார். எதை வைத்து இவ்வளவு உறுதியாக அவர் சொல்கிறார்? மருத்துவ நிபுணர்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்களா?

தெரியவில்லை.

சரி, தமிழகத்திற்கு வருவோம்.

அண்டை மாநிலம் ஒப்பீட்டளவில் தமிழகத்தை விடச் சிறிய மாநிலம் தான். சென்ற டிசம்பரில் இங்கிருந்தே முதல் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

தற்போது அங்கு தினமும் சில ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு பறவைக் காய்ச்சலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகச் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து எச்சரித்திருக்கிறார்.

ஆனால் தமிழக அளவில் என்ன நடக்கிறது?

முன்பு சென்னை மாநகரம் உட்பட தமிழகத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் பகிரங்கமாக நடந்தன. அதற்கேற்ப இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சென்னையிலேயே நிறைய இடங்களில் முன்பு நடந்ததைப் போல கொரோனா தொற்றைக் கண்டறியும் சோதனை முகாம்களைப் பார்க்க முடியவில்லை. அதற்கேற்றபடி கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதான முழக்கமும் தற்போது முன்வைக்கப்படுகிறது.

சென்னையில் திறக்கப்பட்ட உயர்கல்விக் கூடங்களில் கொரோனா பரவியிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகள் கூட இதிலிருந்து தப்பவில்லை. ஹைஜீனிக்காக இருப்பதாகச் சொல்லப்படும், ஸ்டார் ஹோட்டல்களிலேயே பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, தமிழக அமைச்சர் காமராஜூக்கு கொரோனா பாதித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அதே சமயம் அரசியல் பொதுக்கூட்டங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்கிறார்கள். கோவில்களுக்குச் செல்கிறார்கள். தற்போது திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகளில் பார்வையாளர்கள் அமருவதற்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இன்னும் பொங்கலை அடுத்த பண்டிகைகள், வேகம் பெறும் தேர்தல் பிரச்சாரங்களால் கொரோனா இன்னும் தீவிரமாகப் பரவ வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அரசுக்கு முன்னால் இருப்பது அடுத்து நடக்க இருக்கிற தேர்தல் மட்டுமே.

அதையொட்டியே தற்போது பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

எல்லாவற்றையும் விட ஆட்சியாளர்கள் உணர வேண்டிய முக்கியமான விஷயம், வாக்காளர்கள் மற்றும் தமிழக மக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்.

விரைவில் நடக்க இருக்கிற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு என்ன வாக்குறுதிகள் வேண்டுமானாலும் பல கட்சிகள் கொடுக்கப்படலாம்.

அதற்கு முன் வாக்காளர்கள் தகுந்த ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அதற்கேற்ற கவனமான, ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எளிய விருப்பம்.

-யூகி

06.01.2021  01 : 59 P.M

Comments (0)
Add Comment