ரஜினி தன்னுடைய உடல்நிலை பற்றி விளக்கித் தெளிவாகத் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை.
வரும் 10 ஆம் தேதி ரஜினி தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர்.
சிலர் ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டுக்கு முன் அமர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்திக் கலைந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் தன்னியல்பாக இப்படிச் செய்திருக்கிறார்களா அல்லது யாருடைய நோக்கத்தை நிறைவேற்ற இப்படிச் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை.
ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்ததில் ரஜினிக்கு முதல் பங்கு இருந்தது என்றால், இரண்டாவது பங்கு இங்குள்ள ஊடகங்களுக்கும், சில அரசியல் இயக்கங்களுக்கும் இருந்தது.
ரொம்ப நாள் தொடர் ஓட்டத்தில் இறங்கப் போகிறார் என்று காத்திருந்து தேதியும் குறிக்கப்பட்டு, களத்தில் ஓட வேண்டியது தான் பாக்கி என்று இருந்த நிலையில், தன்னுடைய உடல்நிலையைக் காரணங்காட்டி விலகியிருப்பது ரஜினியின் தனிப்பட்ட முடிவு.
இதில் அவருடைய அரசியல் வருகையை நம்பியிருந்த கணிசமான ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கலாம். ஆனால் சினிமாவில் வெளிப்பட்ட ரஜினியை வைத்து அவருடைய ரசிகர்களாக ஆனவர்கள், அவருடைய உடல்நலத்தில் அக்கறை காட்டுவார்கள். அவருடைய விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
பொதுவாகப் பிரபலங்கள் தங்களுடைய தோற்றத்திலும், எந்த நோய் வந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாதபடி தங்களுடைய பிம்பத்தைக் காத்துக் கொள்வதிலும் அக்கறை கொண்டவர்களாகவே இங்கு இருந்திருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாக முன் வைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் முதலில் குண்டு பாய்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், எண்பதுகளுக்குப் பிறகு அவர் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுச் சிகிச்சை மேற்கொண்டபோதும், சிகிச்சை விபரங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. ‘டயாலிசிஸ்’ என்கிற சிறுநீரகச் சுத்திகரிப்பு முறையே பலருக்கு அப்போது தான் பரவலாகத் தெரிய வந்தது.
கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாகவே இருந்தன. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதில் விதிவிலக்கு.
அவரது சிகிச்சை தொடர்பான விபரங்கள் பொதுவெளிக்கு வருவதை அப்பல்லோவில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் சில சிகிச்சைகளை மேற்கொண்டபோதும், அவை வெளியாவதை அவர் விரும்பியதில்லை. நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாரையும் பார்க்க அனுமதித்ததில்லை.
விபத்து ஒன்றில் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டபோது ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வந்து பார்த்த புகைப்படம் மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி வெளிவந்திருக்கிறது.
இதெல்லாம் ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு மித மிஞ்சிய கட்டுப்பாடுகளை சிகிச்சை விஷயத்தில் அவர் விதித்த நிலையில், அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவமனையும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது.
அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு, அவருடைய மரணம் மர்மமாக ஆக்கப்பட்டதெல்லாம் நடந்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, தொலைக்காட்சி விவாதப் பொருளாக இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
பிரபலமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் நோய்கள் தாக்கலாம். முதுமை சில இயலாமைகளை உருவாக்கலாம். அவர்களுடைய உடலே அவர்களுக்குப் பிரச்சினையாக மாறலாம்.
ஆனால் இப்போதுள்ள சில அரசியல் கட்சித்தலைவர்களும் சில நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அது குறித்த தகவல்கள் அரைகுறையாக வெளிவந்தாலும், அவர்களுடைய உடல்நிலை குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்கு முன் வைக்கப்படுவதில்லை. திரைப் பிரபலங்களுக்கும் இது பொருந்தும்.
இந்த நிலையில் ரஜினி பொதுவான இந்த இயல்புக்கு மாறான மனிதராக இருந்திருக்கிறார். திரையில் ‘விக்’ வைத்துக் கொள்கிற அவர் நடைமுறையில் தன்னுடைய அசலான தோற்றத்தை மறைத்துக் கொள்ளவில்லை. அதைப் போலத்தான் தன்னுடைய உடல்நிலை விஷயத்திலும் இருந்தார்.
தனக்குச் சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதையும், மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததையும் அவர் மறைக்கவில்லை. வெளிப்படையாக மக்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியானபோது, அவை “உண்மை தான்’’ என்றார். ரசிகர்களைச் சந்தித்தபோதும், அவருடைய உடல்நலத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இல்லை.
அதையே தன்னுடைய அரசியல் முடிவு பற்றிய அறிவிப்பின் போதும், வெளிப்படையாக உடல் நிலையை விளக்கியிருந்தார். யார் மீதும் எந்த விமர்சனங்களும் இல்லாமல், தன்னுடைய நிலையை மிக எளிமையாக விளக்கியிருந்தார்.
இதையடுத்து அரசியலிலிருந்து விலகப் போவதாக, அவரால் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினியுடன் தொடர்ந்து பயணப்பட இருப்பதாக அர்ஜூன மூர்த்தி சொல்லியிருந்தார்.
இதற்குப் பிறகும் ரஜினியின் விளக்கத்தை அவருடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதற்கு யார் பொறுப்பேற்க முடியும்? மீண்டும் அவரை அரசியலுக்கு வர வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதால், ஊடகங்களுக்கு இரையாவதைத் தவிர, அதனால் என்ன பலன் இருக்கும்?
“உங்கள் உடல்நிலை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் அரசியலுக்கு வரத்தான் வேண்டும்’’ என்று வலியுறுத்தி, ஒருவரை அரசியலுக்குள் வரவழைக்க முடியுமா?
ரஜினியின் மீதும், அவருடைய உடல் நலத்திலும் உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள், தங்களுடைய எதிர்பார்ப்புகளில் சரிந்திருப்பதாக ஒருவேளை உணர்ந்தாலும், அவர் உடல்நலம் பெற்று திரை வாழ்க்கையில் தொடர வேண்டும் என்றே விரும்புவார்கள்.
ரஜினி அவருடைய உடலுக்கு மதிப்புக் கொடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார். அசலான ரஜினி ரசிகர்கள் அவருடைய உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து இந்த முடிவை அங்கீகரிக்க வேண்டும்.
-இளைய பெருமாள்
06.01.2021 01 : 45 P.M