ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978…

அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

“வாப்பா திலீப்… உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்சனை. என்னன்னு பாரேன்” என்றார் அர்ஜுனன் மாஸ்டர்.

சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாகப் பிரிக்கிறான். எதையோ சரி செய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக் கொள்கிறார்…

“கில்லாடிடா நீ!”

திலீப்பின் கண்கள் கலங்கி இருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.

“என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திருச்சா…? என்பவர் பெருமூச்சு விடுகிறார்.

“என்ன செய்றது… விதின்னு தான் சொல்லணும்… சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரி தான் தோணுது திலீப்” என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்கிறார். யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும், பிஸ்கேட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது.

‘சின்னப் பையன் மேலே குடும்பபாரம் விழுந்துவிட்டது. படிக்க வேண்டிய பையனை இப்படி ரெக்கார்டிங் தியேட்டருக்கு அனுப்புகிறோமே’ என்கிற வருத்தம். ஆனால் சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில் தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்து கிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும் தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் வந்து ஒன்று சேர்ப்பதும் தான் அவருடைய விருப்பமான ஒரே விளையாட்டு. மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள் எதுவுமில்லை.

திலீப் தன் அறைக்குச் சென்று ஆர்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவருடைய அப்பா இசையமைத்த “பெத்லஹேமில் ராவில்…” என்ற பிரபல மலையாளப்பட பாட்டின் மெட்டு. அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வாசித்ததைப்போல மெய் மறந்து போகிறார்.

அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்கு சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக் கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது.

“நீ வாசிக்கிறதைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்குப்பா… ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு”

“பயமா… ஏம்மா?”

“உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவர். இந்த உலகம் தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது. ஆனால், உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமாயிருக்கு” என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்சினைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது. இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது. அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப்பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டது.

நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான். தனராஜ் மாஸ்டரிடம் இசைக் கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப் போகிறான்.

ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி., இளையராஜா போன்ற மாபெரும் இசையமைப்பாளர்களுக்கு கீ-போர்டு பிளையேராகவும், சில சமயங்களில் இசைக் கோப்பாளராகவும் பணியாற்றப் போகிறான். அவனுடைய திறமையை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் உசேன் போன்றவர்களுடன் சேர்த்து வைக்கப் போகிறது.

அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான். அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசையமைப்பான். ‘பஞ்சதன்’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிக்கார்டிங் ஸ்டூடியோவைக் காட்டுவான்.

அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான். ‘ரோஜா’ என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும். அந்த இசையமைப்பு இந்தியத் திரையிசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.

முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான். சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவான். ரோஜாவில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்துசெல்லும்.

இத்தனையும் ஓர் அற்புதம்போல் கண்முன்னால் நடந்தன. ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்துக்கு அந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போதே, உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகழ்கிறது.

“என் மகன் சின்ன வயசுல இருந்தே ரொம்ப அடக்கம். எதுக்கும் உணர்ச்சி வசப்படாது. அப்பாவுடைய ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போயி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். வீட்டில் ஆர்மோனியத்தை அது (அப்படித்தான் மகனைச் செல்லமாக அழைக்கிறார்) பிரமாதமா வாசிக்கிறதை அப்பா எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒரு தடவை அதோட அப்பா சுதர்சனம் மாஸ்டர் கிட்ட கூட்டிட்டுப் போய் இருந்தாரு. அப்ப அதுக்கு நாலு வயசு.  “என்னடா என்னவோ ஆர்மோனியத்தில பிரமாதமா வாசிப்பியாமே… வாசிச்சுக்காமி”ன்னு சுதர்சனம் மாஸ்டர் கேட்டிருக்காரு.

அது கொஞ்சமும் அலட்டிக்காம, ரொம்ப அற்புதமா வாசிச்சிருக்கு. அவரு மிரண்டு போயிட்டாரு. நம்ப முடியாமல் ஆர்மோனியக் கட்டைகள் மேலே ஒரு வேட்டியைப் போட்டு மூடி “எங்கே இப்ப வாசிச்சுக்காட்டு”ன்னு சொல்லி இருக்காரு.

ஆர்மோனியக் கட்டைகள் ஏதும் தெரியாதபோதே, அப்பவும் அதே மாதிரி வாசிச்சிருக்கு. எல்லோரும் அசந்து போயிட்டாங்க. அதோட அப்பா ரொம்ப ஆச்சரியமா, அடிக்கடி எங்கிட்டே “இவன் பெரிய ஆளா வருவான் பாரு” என்று சொல்லிக்கிட்டே இருப்பார்.

அவர் அப்போ சொன்னது இப்பவும் என் மனசுல கேட்டுகிட்டே இருக்கு. இந்தப் புள்ள கிட்ட என்னவோ அற்புதமான திறமை இருக்குன்னு புரிஞ்சுகிட்டு, உடனே பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அப்போ ஆரம்பிச்சதுதான் எல்லாம். இப்ப ஆஸ்கர் அவார்டு வரை வந்திருச்சு அது!” அவர் குரலில் பெருமிதமும் பரவசமும் சேர்ந்து ஒலிக்கிறது.

இந்தியத் திரையுலகம் எத்தனையோ இசை மேதைகளைத் தந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. யாரும் யாருக்கும் குறையவில்லை. ஆனால் ரஹ்மானை ‘First among equals’ என்று பல காரணங்களுக்காகச் சொல்லலாம்.

ஆஸ்கர் விருது அவருடைய பயணத்தில் தங்க நேர்ந்த ஒரு ஸ்டேஷன். அவ்வளவுதான். அதையும் தாண்டி அவர் பயணித்துக் கொண்டே இருக்கும் இசை மைல் கற்கள் ஏராளம். தன் முதல் படமான ரோஜாவில் ‘ரகே’ என்னும் மேற்கத்தியத் துள்ளல் இசையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்.

அடுத்தடுத்து, மேற்கத்திய கிளாசிக்கல் இசை, இந்துஸ்தானி, அரபி சுஃபி, கவாலி, ஜாஸ், கர்நாடிக், கஸல், ஹிப் ஹாப், ராக், ஓபரா, ப்ளூஸ், ஆப்பிரிக்கா பீட்ஸ் என்று புத்தம் புதிதாகப் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்திபடியே இருக்கிறார்.

இவர் அளவுக்கு உலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய இந்திய இசையமைப்பாளர்கள் யாருமில்லை. மைக்கேல் ஜாக்சன், வனஸா மே, ஆண்ட்ரூ, வெப்பர் லாயிட், புஸ்ஸி கேட் டால்ஸ், நஸ்ரத் ஃபதே அலிகான், ஆட்னன் சாமி, டீப் ஃபாரஸ்ட், டமினிக் மில்லர், அகான் என்று இவர் கைகோர்த்தவர்கள் ஏராளம்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ, ரகுமானின் ‘சைய… சைய…’ பாடலை தன் படமான ‘இன்சைட் மேன்’-ல் பயன்படுத்தி இருக்கிறார். ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ ஆங்கிலப் படத்துக்கும், சீனப் படமான ‘வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்’ படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

15 வருடத் திரை இசை வாழ்க்கையில் இவர் பெற்றுள்ள தேசிய விருதுகள் மூன்று, பத்மஸ்ரீ விருது, 14 பிலிம்ஃபேர் விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா, க்ரிட்டிக்ஸ் விருது… எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் வைத்தாற்போல் ஆஸ்கர்!

நன்றி: ஆனந்த விகடன், 2005 – ஏப்ரல்  இதழில் கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய தொடரிலிருந்து…

06.01.2021 01 : 27 P.M

Comments (0)
Add Comment