பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது.
சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல் மரபணுக்களில் இருக்கும் விருப்பம் அது.
எத்தனை உயரிய வாகனங்கள் வைத்திருந்தாலும், தினமும் நடப்பதற்கென்றே நேரத்தைச் செலவிடும் செல்வந்தர்கள் எண்ணிக்கை மிக அதிகம். என்னதான் ட்ரெட்மில் வந்தாலும், பூங்காக்களிலும் சாலைகளிலும் மைதானங்களிலும் கடற்கரையோரங்களிலும் மக்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
நடையின் வேகத்தைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது.
மகாத்மா காந்தி பாதயாத்திரை புறப்பட்டால், அவருடன் வருபவர்கள் கிட்டத்தட்ட மெதுவாக ஓடுவார்கள் என்ற தகவலை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு, அவர் வேகமாக நடப்பாராம்.
இன்றும், காற்றை எதிர்த்து ‘லெப்ட் ரைட்’ போட்டுக்கொண்டு சிலர் வேகமாக நடந்து செல்வதைப் பார்க்கலாம். அவர்கள் நடப்பதைப் பார்க்கும்போது, உள்ளிருக்கும் ஆன்மா வெளியே தலைநீட்டி உற்சாகமாக கூத்தாடுவது போன்றிருக்கும்.
இதற்கு மாறாக, சிலரோ பூனை போன்று நடந்து செல்வார்கள். இரண்டுக்கும் நடுவே, சீரான வேகத்தில் நடந்து சென்று மற்றவர்களின் கவனத்தைக் குலைக்காதவர்களும் கூட நம்மிடையே உண்டு.
கால்களின் அளவு, உயரம், உடல் பருமன், உபாதைகள், மனச்சீர்மை பொறுத்தும் நடை மாறுபடும். இதில் ஏற்படும் மாறுபாடுகள் நடத்தல் கோணத்தை மாற்றும்.
எங்கும் நடை.. எதிலும் நடை..!
‘பிட்னெஸ்’ என்ற வார்த்தை இன்று எங்கும் நிறைந்திருக்கிறது.
இறுகிய தசைகளை வெளிக்காட்டும், உடலைக் கவ்வும் உடைகளுடன் திரிய ஆண்களும் பெண்களும் விருப்பப்படுகின்றனர். அதற்கேற்றவாறு உடல்வாகை அடைய, கையில் இருக்கும் காசுக்கு ஏற்றவாறு நிறைய ‘ஜிம்’கள் இயங்குகின்றன.
அரசு சார்பாகப் பூங்காக்களிலும் உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கின்றன. நிறைய நற்பணி மன்றங்களும் இயக்கங்களும் கட்சிகளும் கூட உடல் வலுவூட்டும் பயிற்சிக்கூடங்களை நடத்துகின்றன.
தேவைக்குத் தகுந்தவாறு வீட்டிலேயே உடற்பயிற்சி கருவிகளை வைத்திருப்பவர்களும் கணிசம். கருவிகளின்றி உடலை வலுவூட்டும் பயிற்சிகளும் கூட அதிகம்.
இவை யாவற்றையும் கணக்கில் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்போரும் இங்குண்டு. உண்பதும் உடுப்பதும் பணி செய்து திரும்பி படுத்துறங்குபவர்களாக மட்டுமே இருப்போரும் உண்டு.
அவர்கள் தங்கள் உடலைப் பராமரிக்க எளிய வழியுண்டு. நடப்பதைப் போல சிறப்பான உடற்பயிற்சி வேறில்லை.
இன்று, வீட்டைவிட்டு கீழிறங்கி பாதம் பதித்தால் இருசக்கர வாகனம், கார் அல்லது பேருந்து, ரயில்களில் பயணிப்போரே அதிகம். வாகனம் எதுவுமில்லாதவரே நடக்க வேண்டிய தேவையுள்ளவர்கள் என்ற சிந்தனையும் பெருகிவிட்டது.
இந்த எண்ணத்துக்கு ஆப்பு வைத்திருக்கின்றனர் ஜப்பானிய மக்கள். மிகத்தேவையான பயணங்களில் மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்தும் இவர்கள், எங்கும் நடை எதிலும் நடை என்றே வாழ்வை வகைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
உடற்பயிற்சி செய்யாதது குற்றமல்ல!
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குறிப்பிட்ட சில நாட்களாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டிய கட்டாயத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 தாக்கியபிறகு ஏற்படும் மாரடைப்பு பலரையும் அத்திசை நோக்கித் திருப்பியுள்ளது.
இந்தச் சூழலிலும், ஜிம் போகாதது அல்லது கொஞ்சம்கூட உடற்பயிற்சி செய்யாமலிருப்பது குறித்த குற்றவுணர்வு ஜப்பானியர்களுக்கு இல்லவே இல்லை. இத்தனைக்கும் அங்கு ஆயுள் விகிதமும் பருமனின்மை விகிதமும் மிக அதிகம்.
பொருளாதார வளர்ச்சியும் கல்வியறிவும் மட்டுமல்ல, தனிமனித சம்பாத்தியமும் அங்கு அதிகம்தான். ஆனாலும், மனதில் தோன்றும்போது மட்டுமே அம்மக்கள் உடற்பயிற்சிகளை நாடுகின்றனர். மற்ற நேரங்களில் அவர்கள் நடக்கின்றனர். அது, அவர்களது வாழ்க்கைமுறையாகவும் இருக்கிறது.
வாகனத்தைப் பயன்படுத்தாத அளவுக்கு வேலைக்குச் செல்லும்போதும், பொழுதுபோக்கை நாடும்போதும், கடைகளுக்குச் செல்லும்போதும் நடக்கின்றனர்.
மிகச்சமீபத்தில் அந்நாட்டிலுள்ள ரக்குடேன் நகர மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது. 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இவ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இவ்வயதினர் தினமும் சராசரியாக 6,500 அடிகள் வைக்கின்றனர். இவ்விடத்தில் அடி என்பது காலடி ஆகும். குறிப்பாக, 20-50 வயதுள்ள ஆண்கள் தினமும் 8,000 அடிகளும், பெண்கள் 7,000 அடிகளும் எடுத்து வைக்கின்றனர்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஜப்பானியர்களில் பலர் சொந்தமாக கார் வைத்துக் கொள்வதில்லை. இதிலிருந்தே, நடத்தல் என்பது இவர்களது வாழ்வின் அடிப்படையாக இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தல், எடை தூக்குதல், சில கிலோமீட்டர் தூரம் வேகமாக ஓடுதல் போன்று எதுவுமில்லாமல், பெரிதாக உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாமல் இவர்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். வெறுமனே நடத்தல் மூலமாக மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றனர்.
மனதுக்கும் நல்லது!
ஜப்பான் மட்டுமல்ல, பழமையில் இருக்கும் நல்லவற்றைப் பின்பற்றும் எல்லா நாடுகளுமே மக்களை வளத்தோடும் நலத்தோடும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா அவற்றுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல.
நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் ஒருபக்கம் இருக்கட்டும்; அதனால், மனம் அடையும் புத்துணர்ச்சிக்கு அளவே கிடையாது. இதனை உணர்ந்தே, நம் முன்னோர்கள் பாதயாத்திரைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கின்றனர்.
இன்று, பல்வேறு மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்வதை வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்நம்பிக்கை இல்லாதவர்களும் கூட காடுகளிலும், மலைகளிலும் உலா வருகின்றனர்.
அவற்றைச் சாத்தியப்படுத்தும் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் தெருக்களிலும் சாலைகளிலும் நடக்கின்றனர். அதன் மூலமாக, மன அமைதியையும் பெறுகின்றனர்.
‘மனசு சரியில்லேன்னு காலாற நடந்து போயிட்டு வந்தேன்’ என்ற வார்த்தைகள் கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் அதிகம் புழங்கின. ஏன், வயிறு சரியில்லை என்று சொல்லி நடந்தவர்களும் உண்டு.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி, இன்று நடப்பதை தவிர்க்கிறோம். அதனால், பல்வேறு துன்பங்களை உடலில் தாங்கித் தவிக்கிறோம்.
நடக்கும்போது அருகில் இருப்பவர்களோடு பேசலாம். மௌனமாக நடந்தால் மனதை ஒருமுகப்படுத்தலாம். உலகை அதன் இயல்போடு கண்டுணரலாம். தேவையற்ற பதற்றத்தையும் பணச்செலவையும் கூட குறைக்கலாம்.
‘நடடா ராஜா நடடா..’ என்று பாட்டு பாடியவாறே நடந்தால், இன்னும் கூட உற்சாகம் பெறலாம். இன்றைய சூழலில், நடத்தல் என்பது உடலைப் பேணுவதற்கான எளிய வழி மட்டுமல்ல, சிறந்ததும் கூட..!
– உதய் பாடகலிங்கம்
05.01.2021 01 : 25 P.M