இணையவழிக் கல்வியும் மனநலனும்

நலம் வாழ: தொடர் – 1

கொரோனா உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகச் சாதாரண வர்ணிப்பாக இருக்கும். இந்த பாதிப்பு தொடாத துறையே இல்லை எனக் கூறலாம்.

வர்த்தகம், சமூகம், மதம், வேலை வாய்ப்பு, அரசியல், வாழ்க்கை முறை சிந்திக்கும் விதம், தொடர்புகொள்ளும் விதம், இயற்கையின் மாறுதல்கள், இயற்கையின் மீட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மனிதனின் ஆதித் தேவைகளான உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் போக்கை, அணுகுமுறையை, நம்பிக்கைகளை, கொரோனா நிரந்தர மாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவற்றோடு சேர்ந்து கல்வி கற்பிக்கும், கற்கும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு மாணவர் அவரது பெற்றோருடன் மன அழுத்தம் என்று சொல்லிக்கொண்டு வந்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

“என்னன்னு தெரியல, மேலோட்டமா பார்த்தால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, நெறைய நேரம் இருக்கு, விரும்பியதை செய்ய முடிகிறது, படிப்பும் பரவாயில்லை” என்றவர், ஆனாலும் ஏதோ அமைதியில்லாத நிலையை மனதில் உணர்வதாகக் கூறினார்.

எப்போதெல்லாம் அப்படி உணர்வதாகக் கேட்டபோது, பல நிமிடத் தூண்டலுக்குப் பின், “ஆன்லைன் வகுப்பு முடிந்த சமயங்களில் இப்படி உணர ஆரம்பித்தேன். அது சில நிமிடங்கள் இருக்கும், அப்புறம் மறைந்து போகும் அல்லது மறந்து போகும். ஆனால் தினமும் இப்படிப்பட்ட அமைதியற்ற நிலை இருப்பதை இவ்வாறு யாராவது கேட்கும்போதுதான் அடையாளம் காண முடிகிறது” எனக் கூறினார்.

இணைய வழிக் கற்றல் அல்லது பயன்பாடு, இக்காலத்திய பதின் பருவத்தினருக்குப் புதியதே அல்ல. அதுவும் 90% பெற்றோர் குறைபட்டுக் கொள்ளும் அளவிலும், பயப்படும் அளவிலும்தான் இதன் பயன்பாடு இருக்கிறது.

இதனால் பிரச்சனை வராத வீடே இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். யார் சொன்னாலும் கேட்காமல், செல்பேசி, மடிக்கணிணி மூலம் இணையதளப் பயன்பாட்டில் மூழ்கியிருக்கும் இளம் வயதினருக்கு, அதன் மூலமாகவே வகுப்புகள் என்றால் ஆனந்தமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அப்படி இல்லை என்பதை ஏறக்குறைய அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

இதில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியப் பெருமக்களும், இன்னும் சொல்லப் போனால் அதில் சாதாரணமாகத் தொடர்புக்கு வராத பெற்றோர்களுமே ஒப்புக்கொள்வார்கள்.

தனக்கு மன அழுத்தம் என்று சொல்லிக்கொண்டு வந்த இளைஞன் பொய் சொல்லவில்லை. மன அழுத்தம் என்ற வார்த்தை, மிக சாதாரணப் பயன்பட்டுக்கு வந்துவிட்ட, மிகப் பெரும் ஆபத்தான மன நலப் பிரச்சினை என்பது வேறு விஷயம்.

வந்திருந்த பையனின் பிரச்சனை என்ன? அதிருப்தி, முழுமையாகக் கற்க முடியவில்லையோ என்கிற மனக் கிலேசம், அதனால் எழும் மௌனமான ஆத்திரம், அதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்ற கையறு நிலை, இனி இப்படித்தானா என்ற எரிச்சலும் பயமும்.

நிறைய நேரம் நமக்காக கிடைக்கிறது, அடித்துப் பிடித்து கல்லூரிக்குப் போக வேண்டாம், ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டாம், பிடிக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட சூழலுக்குள் போக வேண்டாம், எல்லாமே என் கையில், நான் இருக்கும் இடத்தில் என்றாகிவிட்ட நிலை நமக்கு சந்தோஷம் தரும்.

‘அப்பாடா’ என்ற நிம்மதியைத் தரும் என்று பார்த்தால். இப்படி எதிர்பாராத டென்ஷனைத் தருகிறதே என்ற எரிச்சல் எல்லாவற்றுக்கும் சேர்த்து உடையணிந்தாற் போல இருக்கிறதே என்ற மனநிலையில்தான் மாணவர் சமுதாயமும் ஆசிரிய சமுதாயமும் இருக்கின்றன.

இதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். என்னிடம் வந்திருந்த இளைஞரின் பிரச்சினைகளுக்கு மட்டும் அவர் ஏற்றுக்கொள்கிற அளவுக்குத் தீர்வுகளைக் கூறினேன்.
இவ்வளவுதானா?

முதலில் அந்த மாணவரைப் பற்றி…

நன்றாகப் படிக்க வேண்டும், குறிப்பிட்ட நிலையை அடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் படிப்பை அணுகுபவர். முதல் வருடத்தில் நல்ல மதிப்பெண்கள். இரண்டாம் வருடத்தில் பாடங்கள் இணைய வழி என்றதும் அதற்கான உபகரணஙளுடன் தயாரானார்.

ஆனால், அவர் விரும்பியபடி ஆசிரியரின் உரை அல்லது கற்பித்தல் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் சில விஷயங்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறார். சந்தேகம் கேட்பதற்கு நேரம் ஒதுக்குகிறார், ஆனாலும் நினைத்த அல்லது எதிர்பார்த்த புரிதல் ஏற்படவில்லை.

இதற்கான காரணமாக அவர் தனது ஆசிரியரையும் சொல்லவில்லை. இவ்வளவுதானா என்று பாதி சாப்பாட்டில் எழுந்த உணர்வு இருக்கிறது. அந்த சாப்பாடும், நன்றாக வேகாத பாதார்த்தங்களுடன் பரிமாறப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வு இருக்கும்? அதுதான் இவரது உணர்வும்.

இதுபற்றி முதலில் பார்க்கலாம்.

ஜூம் மூலமாகப் பாடம் எடுப்பவருக்கு பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அது வகுப்பு என்ற உணர்வே வராது. எல்லாருடைய முகங்களையும் ஒரு முறைகூட ஒருசேரப் பார்க்க முடியாது. பாடம் நடத்துவது என்பது வேறு, சொல்வது என்பது வேறு.

ஜூம் வழியாக ஏறக்குறைய சொல்வதுதான் நடக்கிறது என்பதே அனைவரின் கருத்து. இந்த உணர்வு மாணவர்களுக்கும் பரவும். வகுப்பறைகளில், பாடம் நடத்தும்போதே மாணவர்களின் எதிர்வினைகளை இயல்பாக நோட்டமிட்டுக் கணித்து, அதன் அடிப்படையில் பாடம் நடத்த முடியும்.

ஆனால் ஜூமில் அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே. குறிப்பிட்ட நேரத்தில் பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும். அதுவும் புரியும்படி எடுக்க வேண்டும். என்பது பெரிய சவால்தான்.

இதுதான் யதார்த்தம். இதற்கு என்ன செய்யலாம்? முதலில் ஆசிரியர் “ஜூம் வகுப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் மறைந்து, பழையபடி வகுப்பறை சூழ்நிலை வந்துவிடும், அது வரையில் சமாளிக்க வேண்டியதுதான்” என்ற எண்ணத்தை ஒழிக்க வேண்டும்.

“இன்றைய காலகட்ட நிதர்சன நடைமுறை இதுதான். இதில் நான் எப்படி சிறப்பாக செயல்படுவது? இது நடைமுறையில் இருக்கும் வரை இதுதான் நான் பணி செய்யும் முறை” என்பதை மனதளவில் முழுமையாக ஏற்க வேண்டும். இது மிக முக்கியமான முதல் படி.

அடுத்து, ஒவ்வொரு வகுப்பிற்கு முன்பும், உங்களிடமிருந்து விஷயத்தை வெளியில் எடுத்துக் கொள்வது, மாணவர்களின் திறமை சார்ந்த விஷயம் என்பதைச் சில வார்த்தைகளில் புரிய வைக்க வேண்டும்.

நீங்கள் நடத்த வேண்டியவற்றை எளிமையாக்குங்கள் பாடத்தைப் பேருரையாக நிகழ்த்தாமல், சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதி முடிந்ததும் கேள்விகளைக் கேளுங்கள். மாணவர்களின் பதில்களைப் பெற்ற பின் அதற்கான விளக்கத்தையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.

கூடவே அதைப் பற்றிய விளக்கம் எந்தப் புத்தகத்தில் அல்லது கட்டுரையில் கிடைக்கும் என்பதைத் தகவலாகச் சொல்லுங்கள். அதைக் குறித்துக் கொள்ளச் சொல்லுங்கள். குறித்துக்கொள்ள நேரம் கொடுங்கள். ஒவ்வொரு முறை பாடம் நடத்தும் முன்னரும், உங்களது தயாரிப்பு எப்படி இருந்தது என்பதை சொல்லுங்கள்.

இணைய வழிப் பாடம் கேட்பதில் மட்டுமின்றி நடத்துவதிலும் பிரச்சனை என்பதைச் சொல்லுங்கள். அதனாலேயே, மாணவர்கள் சந்தேகங்களை உடனடியாகக் கேட்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள். உங்களது வகுப்பு நேரம், வித்தியாசமானதாக, உங்களது வகுப்பறை பாணியை நினைவுபடுத்துகிறாற்போல இருப்பது அவசியம்.

வகுப்பறையில் நீங்கள் செய்ய வேண்டிய பலவற்றை இணைய வழி வகுப்பில் செய்யத் தேவையில்லை. வகுப்புக் கட்டுப்பாடு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பது, பரஸ்பர உரையாடல் போன்றவை ஏறக்குறைய இருக்காது.

ரவீந்திரன்

இந்த நேரங்கள் உங்களுக்குள் எரிச்சலை, அலுப்பை ஏற்படுத்தக் கூடியன என்பதை மறக்காதீர்கள். இணையவழியில் இதெல்லாம் மிச்சம், உடல் இதனால் ஆரோக்கியம் கூடும். இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மாற்றங்கள் தானாக உருவாகும். முயற்சி செய்து பாருங்கள்.

மாணவரின் அணுகுமுறை எப்படி இருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

(தொடர்ந்து அலசுவோம்)

******
கட்டுரையாசிரியர் டி.ஐ.ரவீந்திரன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் மனவள ஆலோசகராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு மின்னஞ்சல்: rawindran@gmail.com  செல்: 98404 14389

Comments (0)
Add Comment