இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!

உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே புதிய வகை கொரோனா தொற்று 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கொரோனாவால் தமிழகத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 6 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் தற்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் இருக்கக்கூடிய சோதனை மையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் புனே, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வைரஸ் உறுதியான 58 நபர்களும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

05.01.2021 03 : 15 P.M
Comments (0)
Add Comment