தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளது.
அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்களும் படைப்பாளிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பரவலாக டெல்லி அரசின் நடவடிக்கையை வரவேற்று பலரும் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அகாதெமி அமைத்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், “தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி துணை முதல்வரும், கலை, பண்பாடு மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிஷோடியா தமிழ் அகாதெமி தொடங்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின்பெயரில், தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக டெல்லி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாதெமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.
தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றிவருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாடு, மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகாதெமி மூலம் தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் பண்பாட்டைப் போற்றும்வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நன்றிக்குப் பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழிலேயே ட்வீட் செய்திருக்கிறார், “பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!” என்று பதிலளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ட்விட்டர் வழியாக தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாதெமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ்சிசோடியா இருவர்க்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
டெல்லியில் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. மேலும், 80 ஆண்டு பழமையான டெல்லி தமிழ் கல்விச் சங்கத்தின்கீழ் 8 பள்ளிகள் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
– தான்யா
05.01.2021 12 : 34 P.M