ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் வசித்து வரும் ஒய்.ஷியாம் சுந்தர் என்பவர் காவல் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராகப் பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், காவல்துறை சார்பில் காவல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜெஸி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். பல்வேறு தரப்பு அதிகாரிகளை வரவேற்கும் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், தனது மகள் பிரசாந்தி சீருடையில் வந்துள்ளதைப் பார்த்து சல்யூட் அடித்து வரவேற்றார்.
தனது டி.எஸ்.பி மகளுக்கு, காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் தந்தை ஷியாம் சுந்தர் கண்ணீர் மல்க, பெருமையுடன் சல்யூட் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டிஸ்பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
தந்தையும் மகளும் புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவத்தை ஆந்திரக் காவல்துறை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பெருமைப்பட்டுள்ளது.
நெகிழ்வான தருணம் குறித்து பேசிய டிஎஸ்பி பிரசாந்தி, “நான் அரசுப் பணியில் சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஏஎஸ் அதிகாரியாக அமர வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. அதற்கு ஏற்றாற்போல் நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.
ஆனால், என்னால் சரியாக எழுத முடியவில்லை. இதையடுத்து, ஆந்திராவில் குரூப்-1 தேர்வு எழுதி அதில் தேர்வாகினேன். சிறுவயதாக இருக்கும்போதிருந்தே நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று என் பெற்றோர் என்னிடம் கூறுவர். என் சகோதரி ஆந்திராவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று நெகிழ்கிறார் தந்தை ஷியாம் சுந்தர். “பிரசாந்தி டிஎஸ்பியாக இருக்கிறார். என்னைவிட உயர்ந்த அதிகாரி. அவர் வரும்போது அவருக்கு சல்யூட் செய்வதுதான் முறை. எனக்கு இது பெருமையான விஷயம்.
வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம். பணியின்போது மகள் எனது உயரதிகாரி. என் மகளை வரவேற்று அவருக்கு சல்யூட் செய்தபோது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” எனத் தெரிவித்தார்.
04.01.2021 03 : 41 P.M