மீண்டும் களத்திற்கு வரும் மு.க.அழகிரி: தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

ரஜினி அரசியல் வருகை குறித்த சர்ச்சையெல்லாம் சற்றே அடங்கிய நிலையில், அடுத்த அஸ்திரமாக தி.மு.க.வுக்குள் இன்னொரு சலசலப்பு. மதுரையில் மு.க.அழகிரி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து அவருடைய வழக்கமான பாணியில் சகோதரரான ஸ்டாலினைப் பற்றி அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

1980-ல் மதுரைக்கு முரசொலி நிறுவனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மதுரைக்கு வந்ததாகத் தன்னுடைய பேச்சிற்கிடையே சொல்லியிருக்கிறார்.

அது மதுரையிலுள்ள தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் அரசியலில் பெரிய அளவில் தலையீடு இல்லாமல் “ராயல் வீடியோஸ்” என்ற வீடியோக் கடையை மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடத்தி வந்தார் அழகிரி.

தி.மு.க.வினரின் இல்ல விசேஷங்களுக்குச் சென்று வந்த அழகிரியைச் சுற்றி ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தனிக்கூட்டம் உருவானது. அவரை தென் மாவட்ட தி.மு.க.வுக்குத் தளபதியாக்கியது. அவருக்கு “அஞ்சா நெஞ்சன்” என்ற அடைமொழிகள் கொடுக்கப்பட்டதும், அதைப் பொது மேடைகளில் வழிமொழிந்தார் கலைஞர்.

தென் மாவட்டத்தில் அதுவரை முக்கியப் பொறுப்பில் இருந்த பல தி.மு.க தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். கட்சி நியமனங்கள் தென் தமிழகத்தில் அவரைக் கேட்டே நடந்தன.

திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது, அழகிரியின் ஆட்கள் பரபரப்பாகச் சுழன்றார்கள். நிறையக் கவனிப்புகள் நடந்து, தி.மு.க வெற்றி பெற்றபோது, அழகிரியால் கிடைத்த வெற்றி என்று உச்சி முகர்ந்தார் தந்தை கலைஞர்.

தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக ஆக்கப்பட்டார் அழகிரி. தனது மகன்களான அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்படுவதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்தார் கலைஞர்.

இருந்தும் அவருக்கும் அழகிரிக்கும் இடையில் உருவான பூசல்களால் தி.மு.க.வை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் அழகிரி. அந்தச் சந்தர்ப்பங்களில் தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்க அவர் தயங்கவில்லை.

“தி.மு.க.வில் யாருக்குச் செல்வாக்கு அதிகம்?” என்கிற கருத்துக்கணிப்பு தினகரன் நாளிதழில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனே மதுரையில் இருந்த அந்த நாளிதழ் அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. ஊழியர்கள் சிலர் உயிரிழக்கும் நிலை உருவானது. அதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

தென்மாவட்டத்தில் செல்வாக்கான தி.மு.க..பிரமுகராகத் திகழ்ந்த தா.கிருட்டிணன் மதுரையில் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குப் போனபோது, தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து போனார். அதுவும் பெரும் சர்ச்சையை உருவாக்கி அழகிரி கைது செய்யப்படும் அளவுக்குப் போனது.

அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள் தென் மாவட்டங்களில் பொது மக்களிடம் செய்த கெடுபிடிகளின் விளைவுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியிருந்தது.

திரும்பவும் தி.மு.க தலைமையிடம் சமாதானமானார் அழகிரி. பிறகு எம்.பி.யாகி மத்திய அமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில் தி.மு.க.வில் அவர் சற்று அமைதி காத்த காலகட்டமாக இருந்தது.

பிறகு மறுபடியும் பிரச்சினை ஆரம்பித்து அழகிரி ஒதுங்கியிருந்தார். அவருடைய ஆதரவாளராக கருதப்படும் கே.பி.ராமலிங்கம் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். ரஜினியுடன் பேச இருப்பதாக அழகிரி சொல்லி வந்த நிலையில், அழகிரியின் மகனான தயாநிதி அழகிரியை வழக்கு ஒன்றில் ஆஜராகச் சொல்லியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

முன்பு அ.தி.மு.க பொதுச்செயலாளரான ஜெயலலிதா தென் தமிழகத்திற்குச் சென்றபொதெல்லாம் அதிகமாக அவரால் விமர்சிக்கப்பட்ட அழகிரி, தற்போது ரஜினி அரசியல் வருகையை மறுத்த நிலையில் மறுபடியும் அரசியல் களத்தில் அதிலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

“ஸ்டாலின் முதல்வர் கனவு காண்பது நடக்கவே நடக்காது. அவர் முதல்வராக வரவே முடியாது. என் ஆதரவாளர்கள் அவரை வரவிட மாட்டார்கள்” என்று அண்மையில் சொல்லியிருக்கிற அழகிரி தன்னுடைய முடிவை ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்.

சரி, தி.மு.க.வுக்குள் எந்த அளவுக்கு அழகிரியின் மறுவருகையும், பேச்சுக்களும் சலசலப்பை ஏற்படுத்தும்?

தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலருக்கும் ஸ்டாலினைப் பற்றி நன்கு தெரியும். இளம்வயதிலேயே ‘இளைஞர் தி.மு.க’ என்கிற அமைப்பைத் துவக்கிய ஸ்டாலின் நெருக்கடி காலகட்டத்தில் கைதானபோது சிறையில் அவர் பட்ட சித்திரவதைகளும், சிட்டிபாபு போன்றவர்களுக்கு நேர்ந்த கதியெல்லாம்  தெரியும். மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின் 1977 ஜனவரியில் தான் விடுதலை ஆனார்.

இளைஞர் அணித் தலைவர், துணைப்பொதுச் செயலாளர், பொருளாளர், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிற மு.க.ஸ்டாலின் கலைஞரின் மறைவுக்குப் பிறகே தி.மு.க.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அவருடைய ஏற்றத்தையும், நெருக்கடிகளையும் பார்த்து வந்திருக்கிற தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலினையும் தெரியும். அழகிரியையும் தெரியும்.

தென் மாவட்டத்தில் அழகிரிக்கு இருந்த அவருடைய ஆதரவாளர்களும் நீண்ட காலமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதால், அவர்களும் ஒதுங்கி விட்டிருக்கிறார்கள் அல்லது ஸ்டாலினுடன் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

அதனால் தற்போது கலைஞர் புகழ் பாடி “அவரை உயிர்” என்று சொல்லும் அழகிரி அதே கலைஞர் வாழ்ந்தபோது, கொடுத்த நெருக்கடிகளை தி.மு.க தொண்டர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

அதனால் ஒருவேளை ஒரு கட்சியை ஆரம்பித்தாலோ அல்லது யாருக்காக வாய்ஸ் கொடுத்தாலும், அதற்கு தி.மு.க. தொண்டர்களிடம் பெரிய சலனத்தை ஏற்படுத்திவிடாது. தி.மு.க.வுக்கான வாக்குவங்கியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதே இப்போதுள்ள யதார்த்தம்.

– அகில் அரவிந்தன்

04.01.2021 02 : 44 P.M

Comments (0)
Add Comment