மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல்.
காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும்.
“காலங்களில் அவள் வசந்தம்’’
“கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே’’
“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’’ – இப்படி அந்தக்குரலில் நனைந்து மனம் ஈரமான எத்தனை பாடல்கள்?
சென்னையின் மையப்பகுதியில் அன்றைய டிரைவ்இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அடிக்கடி அவரைப் பார்க்க முடியும். அவருடைய இன்னொரு வீட்டைப் போன்ற சொந்தத்துடன் இருந்தது அந்த ஹோட்டல்.
அழுத்தமான வண்ணத்தில் சற்றுத் தொளதொளத்த சட்டை. அதில் நிறையப் பேனாக்கள். தலையில் புல்குல்லா. தடித்த ஃபிரேம் போட்ட கண்ணாடி.
இந்தத் தோற்றத்தில் இருந்தவரிடம் நெருங்கிப் பத்திரிகைக்காகப் பேச வேண்டும் என்று சொன்னபோது சிறு குழந்தையின் ஆர்வத்துடன் விசாரித்தவர் ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் வரச்சொன்னார்.
காபியின் நறுமணம் கலந்திருந்தது அவருடைய பேச்சில்.
இளம் பிராயத்திலிருந்தே வாழ்வில் சந்தித்த சவால்களை அவர் சொல்லிக் கொண்டுபோனபோது மனம் இளகியதைப் போலிருந்தது.
ஆந்திரா பூர்வீகம். எளிய குடும்பம். இரண்டு சகோதரிகள். ஒரு தம்பி. பாடுவதில் பித்துப்பிடித்ததைப் போலிருந்த ஸ்ரீனிவாஸூக்கு எப்படியும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஒரே வேகம்.
அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த அவருடைய அப்பா பனீந்திரசுவாமி ஒரு ஜோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார். ஜாதகத்தை அலசிய ஜோதிடர் முடிவாகச் சொன்னார்.
“பையன் சினிமாவிலே பாடுறதுக்கு வாய்ப்பே இல்லை’’
மிகவும் கூச்ச சுபாவத்துடன் இருந்த ஸ்ரீனிவாஸ் கீச்சுக்குரலில் சொல்லியிருக்கிறார்.
“என்னோட திறமை மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு.. கடுமையாக உழைக்க முடியும். பாடகனா கண்டிப்பா வருவேன்’’
அந்தக் கனவுக்கு அவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. காத்திருக்க வேண்டியிருந்தது. அவமானப்பட வேண்டியிருந்தது. பல மொழிகளைச் சளைக்காமல் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. வீட்டில் வலியுறுத்தியதற்காக பி.காம் பட்டப்படிப்பை முடிக்க வேண்டியிருந்தது.
சென்னைக்கு வந்து பல இடங்களில் அலைந்து வாய்ப்புத் தேடி அலுத்தபோது ஜெமினி அதிபர் வாசனின் காதில் இவருடைய குரல் விழுந்த தருணம் வாழ்வின் பாதையைத் திருப்பிவிட்டது.
கல்கண்டும் ஸ்ரீனிவாஸின் குரலில் உருகிவிடும் என்று வாசன் சொன்னபிறகு ஹிந்தியில் துவங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பாடத்துவங்கியபோது அவருடன் வாய்ப்புக்காகச் சேர்ந்து போனவர் டி.எம்.சௌந்திரராஜன்.
‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்திற்குப் பிறகு வெளியே தெரிய ஆரம்பித்து. ‘பாவமன்னிப்பு’ படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் தேடி வந்தன. ஹிந்தியில் பிருதிவிராஜ், கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் சத்யன், பிரேம்நசீர், தமிழில் ஜெமினி என்று அவருடைய மழைச்சாரல் குரல் பல மொழிகளில் பட்டுத் தெறித்தது. உருது கஜல்கள் மூலமும் அவருடைய குரல் வளைய வந்தது.
தமிழில் ஜெமினி, பி.பி.எஸ், கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டணியில் பல பாடல்கள் ஹிட் அடித்தன. எட்டு மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருந்த ஸ்ரீனிவாஸின் பெயர் நாடு முழுக்கப் பரிச்சயமானது.
“இதே சென்னையில் நான் வந்திறங்கியபோது இவ்வளவுதூரம் நான் பாப்புலர் ஆவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் என் மனசுக்குள் நம்பிக்கை இருந்தது. உற்சாகம் இருந்தது. எப்படியும் நாம் கவனிக்கப் பட வேண்டும் என்கிற வேகம் இருந்தது.
சொந்த ஊரில் நான் சினிமாவில் முன்னேற முடியாது என்று ஜோதிடர் சொன்னது பலித்துவிடக்கூடாது என்று எத்தனை அவமானங்கள் வந்தாலும் மீறி நின்றதற்கு பல ரசனையுள்ள மனங்கள் தான் காரணம்..’’ என்று ஹோட்டலுக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவருடைய முகத்தில் பல பாவங்கள் மாறி மிதந்தன.
“கண்ணதாசன் எழுதிய “மயக்கமா? கலக்கமா?’’ பாடலில் “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’’ என்கிற வரிகளை எல்லாம் எனது குரலில் பாட வாய்ப்புக் கிடைத்தது பாக்கியம்.
அந்தப் பாடல் பலருடைய மனங்களைச் சாந்தப்படுத்தியிருக்கிறது. வாழத் தூண்டியிருக்கிறது.
கவிஞர் வாலி ஒருமுறை என்னிடம் “நீங்க பாடிய இந்தப் பாடல் தான் சென்னையில் வாய்ப்புத் தேடி ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் சொந்த ஊருக்குப் போய்விடலாம் என்று நினைத்த எனக்கு நம்பிக்கை ஊட்டி இங்கேயே இருக்க வைத்தது’’ என்று சொன்னதை மறக்க முடியாது. இந்த மாதிரி பலர் நம்பிக்கை கொள்கிற பாடல்களை பல மொழிகளில் பாடியிருக்கிறேன்.”
அவருடன் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை அதே ஹோட்டலில் சந்தித்த பிறகு பத்திரிகையில் அந்தக் கட்டுரை வெளியானதும் அவரிடம் நேரில் சென்று கொடுத்தேன். வாசித்துப் பார்த்தவர் உணர்வுபொங்கிய சொற்களில் வாழ்த்தினார்.
“தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகள்’’ என்கிற தலைப்பில் நான் ஆவணப்படம் இயக்கியபோது அது தொடர்பாக தொலைபேசியில் அழைத்து அவரைச் சந்திக்க வேண்டும் என்றதும் உடனே வரச் சொன்னார்.
ஹோட்டலுக்கு அருகில் இருந்த மரத்திற்கடியில் காமிராவுக்கு முன்னால் தமிழக ரசிகர்கள் மீது மிகுந்த கரிசனத்துடன் பேசினார். எந்த மொழி பேசுகிறவர்களாக இருந்தாலும், அவர்களுடைய திறமையை ஒதுக்காமல் ஏற்றுக் கொள்கிற மனநிலை தமிழகத்தில் இருப்பதைப்பற்றி இதமான குரலில் நன்றி சொன்னார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கான பாராட்டுவிழா சென்னையில் நடந்தபோது சென்றிருந்தேன். அவருடைய பிரபலமான பாடல்களை இளம் தலைமுறை பாடகர்கள் பாடியபோது தன்னுடைய குழந்தையை மற்றவர்கள் கையில் எடுத்துக் கொஞ்சுவதைப் பார்க்கிற தகப்பனைப் போன்ற பரிவான பார்வையுடன் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
திரும்பவும் ஒருமுறை பார்த்தபோது அவருக்கு மிகவும் பிடித்தமான ஹோட்டலான டிரைவ்இன் உட்லண்ட்ஸ் மாற்றப்பட்டுவிட்டதைப் பற்றிய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டவர், “பேசும்போதும், பாடும்போதும் கூடுதல் கமகம் வந்து விடுகிறது.. பாருங்க’’ என்றபடி சிரித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்திறமையைச் சிலாகித்தவர் அவருடைய தந்தை சேகர் இசையமைத்த படத்தில் பாடியதை நினைவுபடுத்தினார்.
‘யாத்திரைக் காரா’ என்கிற படத்தில் சேகரோட இசையில் நான் பாடிய பாடல் பாடியது அவ்வளவு நல்ல அனுபவம்.. தெரியுமா? ரொம்பவும் நம்பிக்கை கொடுக்கிற பாடல் அது.
“ஒரு வழி அடைக்கப்படும்போது ஒன்பது வழி திறக்கும்’’ என்று துவங்குகிற பாடலும், அதன் அர்த்தமும் பாடிய எனக்கே பரவசத்தைக் கொடுத்திருக்கிறது.
யாருக்கும் எந்த ஒரு வழியும் அடைபட்டாலும், கண்ணைத் திறந்து பார்த்தால் சுற்றிலும் ஒன்பது விதமான வழிகள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்தியிருக்கிற பாடல் எவ்வளவு பேரைச் சோர்ந்து போகச் செய்யாமல் ஆற்றுப்படுத்தும் தெரியுமா?’’
– என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னவர் தனது தழுதழுத்த குரலில் அந்தப் பாடலின் இரண்டு வரிகளைப் பாடிக் காண்பித்தபோது காற்றில் ஈசலைப் போல பறந்தன அந்தச் சிலிர்ப்பும், நம்பிக்கையும் ஊட்டிய வரிகள்.
“ஒரு வழி அடையும் போது ஒன்பது வழி திறக்கும்’’
– ‘அந்திமழை’ ஜனவரி 2019 இதழில் வெளிவந்த கட்டுரை.
04.01.2021 12 : 44 P.M