ஒருவர் தன்னைத் தானே கிண்டல் செய்வதுதான் உச்சபட்ச நகைச்சுவையாகக் கருதப்படுகிறது. சாப்ளினுக்கு முன்னிருந்து திரையில் தொடரும் இந்தப் பாரம்பரியத்துடன் கொஞ்சமாய் அவலச்சுவை சேர்த்து தருகிறது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஏகே வெர்சஸ் ஏகே’.
இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் என்று தென்னிந்திய மொழிகளிலும் இது டப் செய்யப்பட்டுள்ளது.
சினிமாவுக்குள் சினிமா!
நிகழ்ச்சி ஒன்றின்போது, பார்வையாளர்கள் முன்னிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் நடிகர் அனில் கபூரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர். அவதூறுகள் வார்த்தைகளாகி கைகலப்பு வரை செல்கிறது.
இதற்குப் பழிவாங்க, அனில் மகள் சோனம் கபூரை கடத்துகிறார் அனுராக். 12 மணி நேரத்துக்குள் அவரைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும், அதனை தான் படம்பிடிக்கப் போவதாகவும் சொல்கிறார்.
முதலில் இதனைக் கிண்டல் என்று நினைக்கும் அனில், உண்மையாகவே சோனம் கடத்தப்பட்டது அறிந்து துடிக்கிறார். அதன்பின் அனில் கபூர் வீடு, அனுராக் வீடு, சோனம் கபூரைக் கடத்திய கார் டிரைவரின் வீடு என்று அங்குமிங்கும் குதித்தோடுகிறது கேமிரா.
என்ன புதுமை?!
‘இதில் என்ன புதுமை’ என்பவர்கள், இப்படத்தில் நிரம்பியிருக்கும் பரீட்சார்த்த முயற்சியை அறிந்துகொள்ள பாலிவுட் பற்றிய புரிதல் கொஞ்சமாக வேண்டும். காரணம், இரண்டு ஏகேயில் ஒருவர் அனில்கபூர், இன்னொருவர் அனுராக் காஷ்யப்.
ஷங்கரின் ‘முதல்வன்’ இந்தியில் ‘நாயக்’ ஆனபோது, அதில் நாயகனாக நடித்தவர் அனில். மணிரத்னத்தின் முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’யின் நாயகன்.
80-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருந்தவர், ‘அந்த ஏழு நாட்கள்’ ரீமேக் உட்பட சில இந்திப் படங்களின் அபார வெற்றியில் பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவரானார். இவரது சகோதரர் போனி கபூர்தான், சமூகவலைதளங்களில் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும் ‘வலிமை’ படத் தயாரிப்பாளர்.
‘பிளாக் பிரைடே’, ‘தேவ் டி’, ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ உட்பட இந்தி திரையுலகின் முக்கியமான இயக்குனராக அறியப்படுபவர் அனுராக் காஷ்யப். இவர் தயாரித்த திரைப்படங்களில் சில, இந்தி திரையுலகில் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொள்வதுதான் ‘ஏகே வெர்சஸ் ஏகே’. என்ன நம்ப முடியவில்லையா? இந்தப் படத்தில், அனில் மற்றும் அனுராக் இருவரும் அவர்களாகவே நடித்திருக்கின்றனர்.
சினிமா கிசுகிசுக்களில், பாலிவுட் பார்ட்டிகளில், படப்பிடிப்புத் தளங்களில், பொதுமக்கள் மனதில் இருவரையும் குறித்து இருக்கும் தகவல்கள் இதில் வசனங்களாகப் பேசப்படுகின்றன.
‘வயசானபிறகும் ஹீரோவா நடிக்கணும்னு நினைச்சா எப்படி’, ‘அனுராக் ஏன் இவ்ளோ ரிகர்சல் பண்ற, உன்னோட ஒரு படமும் ஹிட் ஆகலையே’ என்பது போன்ற வசனங்கள் அனில் கபூரையும் அனுராக் காஷ்யப்பையும் பங்கப்படுத்துகின்றன.
அனில் கபூரின் மனைவி தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள் இதில் நடித்திருக்கின்றனர். அனுராக்கின் பெற்றோரும் கூட இதில் வருகின்றனர்.
அனுராக் விவாகரத்து பெற்றது முதல் அவருக்கு ஒரே ஒரு மகள் இருப்பது வரை பல விஷயங்கள் படத்தில் பேசப்படுகின்றன. அனுராக்கின் படுக்கையறை வரை கூட இது நீள்வது, நம்மை கொஞ்சம் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது.
அதேபோல சோனம், ஹர்ஷவர்த்தன் என்று அனிலின் பிள்ளைகள் இதில் நிஜமாகவே வந்து போகின்றனர். ஏன், போனி கபூரும் கூட ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.
அதிகமான ரீமேக் படங்களை தயாரித்தவர் அவர் என்பதை போகிற போக்கில் கிண்டலடித்திருக்கின்றனர். அவர் பேசும் வசனம் மூலமாகவே அதைச் செய்திருக்கின்றனர் என்பதுதான் படக்குழுவைப் பார்த்து ‘அடங்கொன்னியா’ என்று சொல்ல வைக்கிறது.
அதாகப்பட்டது, அனில் கபூர் மற்றும் அனுராக் காஷ்யப் என்ற இரண்டு திரையுலகப் படைப்பாளிகளின் வாழ்க்கையை கதைக் களமாக்கி, அதன் மீது ஒரு திரைக்கதையை வடிவமைத்திருக்கின்றனர்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல, இருவருமே தங்களைக் குறித்த பொது பிம்பத்தை, ரசிகர்களின் அபிமானத்தை இப்படத்துக்காக பணயம் வைத்திருக்கின்றனர். அதனால் கண்ணால் பார்ப்பது உண்மைதானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இப்படத்தின் புரோமோஷனுக்காக, சில நாட்கள் அனுராக்கும் அனிலும் உண்மையாகவே ட்விட்டரில் சண்டையிடுவது போல ‘ட்வீட்’ செய்தனர். அந்த வகையில், ரசிகர்களைக் கவரப் பயன்படுத்தும் திரையுலக யுத்திகளையும் கூட கிண்டலடித்திருக்கிறது படக்குழு.
எது நடிப்பு?
மெதேட் ஆக்டிங் பற்றிய பேச்சின்போது, ‘நோய் வந்த மாதிரி நடிக்கணும்; நிஜமாவே நோய்ல விழுந்துடக் கூடாது’ என்று சில நடிப்புலக ஜாம்பவான்கள் குறிப்பிட்டதுண்டு. அந்த வகையில், யதார்த்தமாகப் படம்பிடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் சில இயக்குனர்களைப் பகிரங்கமாகக் கிண்டலடிக்கிறது ‘ஏகே வெர்சஸ் ஏகே’ திரைக்கதை.
அதோடு, திரையில் உருவாக வேண்டிய மாயாஜாலத்துக்காக ஒரு நடிகன் எந்த அளவுக்கு மெனக்கெட வேண்டுமென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இப்படத்தில் கேமிராவும் கூட நடித்திருக்கிறது. காரணம், அதை இயக்குபவர்களும் படத்தில் ஒரு பாத்திரமாக வருகின்றனர்.
அனிலும் அனுராக்கும் ஓடும்போது, பின்னணியில் அதனை இயக்கும் இளம்பெண் மூச்சுவாங்கும் ஒலி கேட்கும். திரைக்கதை எழுதிய அவினாஷ் சம்பத்துக்கும் இயக்குனர் விக்ரமாதித்யாவுக்கும் ‘சபாஷ்’ சொல்ல வேண்டிய இடம் அது.
கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் வரை தோள்பட்டை மீதிருக்கும் வீடியோ கேமிரா பார்வையிலேயே காட்சிகள் சொல்லப்படுகின்றன.
இந்த ‘ஹேண்டி மூவ்மெண்ட்ஸ்’ வழக்கமாக பேய்ப்படங்களிலும், கதாபாத்திரங்களின் ஒழுங்கற்ற நகர்வையும் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தில் அது ‘த்ரில்’ கூட்ட உதவுகிறது.
அதனால், ‘நாட் ஓகே’ என்று சொல்லப்படத்தக்க ஷாட்கள் இதில் ஒரு நுட்பமாக நிரம்பியிருக்கின்றன. மருத்துவமனையில் அனுராக்கை அனில் சந்திக்கும் காட்சியின்போது மட்டுமே, கேமிரா சீராக நகரும். அதுவே, திரைக்கதை தடம் மாறுவதை நமக்கு உணர்த்திவிடும்.
ஒளிப்பதிவு செய்த ஸ்வப்னில் சோனாவானே, படத்தொகுப்பை மேற்கொண்ட பண்டி பன்சாலி, பின்னணி இசையமைத்த அலோக் நந்தா தாஸ்குப்தா உட்பட இதில் தொடர்புடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
மிக முக்கியமாக, இக்கதையை எழுதிய அவினாஷ் சம்பத்தும் இயக்குனர் விக்ரமாதித்யாவும் பாராட்டுக்குரியவர்கள்.
யாருக்கு பிடிக்கும்?
அளவுக்கு அதிகமாக அனிலையும் அனுராக்கையும் ஆராதிப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபிறகு அதிருப்தியை உணரக் கூடும்.
ஏனென்றால், ஒரு நடிகர் திருநங்கையாக நடிப்பதையே ‘ஏன் இந்த வேண்டாத வேலை’ என்று சொல்லும் ரசிக சமூகம், குறிப்பிட்ட நடிகரும் இயக்குனரும் தங்களது பிரபல்யத்தையே ஒரு படத்துக்காக கேலிக்குள்ளாக்குவதை எப்படி தாங்கிக் கொள்ளும்?
அதே நேரத்தில், ஒரு சினிமாவை சில மணி நேர பொழுதுபோக்காக, புத்துலகைக் காட்டும் படைப்பாக எண்ணுபவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
படையப்பாவில் ரஜினி செந்திலை பார்த்து ‘மாப்ள இவர்தான், ஆனா இவர் போட்டிருக்குற சட்டை என்னுது’ என்று சொல்வார். அதேபோல, இக்கதையில் அனுராக்கும் அனிலும் உண்மையாகவே வந்துபோனாலும் இப்படம் முழுக்க முழுக்க புனைவு மட்டுமே. இதனைப் புரிந்தவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
மிக முக்கியமான விஷயம், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எந்த மொழிகளிலும் ரீமேக் செய்ய முடியாது. அந்த காரணத்துக்காகவும் கூட இப்படத்தைப் பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்
04.01.2021 01 : 33 P.M