சென்னை தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லம், அவர் சினிமாவில் பிஸியாக இருந்தபோது, அதை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின், அந்தக் கட்டடத்தை 1990 ஆம் ஆண்டு, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆர். நினைவில்லமாக மாற்றி அதைப் பராமரித்து வருகிறார்.
இந்த இல்லத்திற்கு வரும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் பொதுமக்களும் எம்.ஜி.ஆரின் வாசத்தை உணர்வதாகக் கூறுகின்றனர்.
சினிமாவில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் ‘ராஜா’ என்ற சிங்கத்தை வளர்த்தார். அந்த சிங்கம் இறந்ததும், அதைப் பதப்படுத்தி பாதுகாத்து வந்தார். பதப்படுத்தப்பட்ட அந்த சிங்கம் இப்போதும் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
நடிகராக இருந்த போதும், பின்னர் அரசியலில் நுழைந்து முதல்வர் பதவியை அலங்கரித்த போதும் ஏராளமான பரிசுப் பொருட்கள் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் வாங்கிய அத்தனை பரிசுப் பொருட்களும் புத்தம் புதிது போல இந்த நினைவில்லத்தில் வைத்திருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் தியானம் செய்யும்போது எடுத்தது உள்ளிட்ட பல அபூர்வமான புகைப்படங்கள் இந்த இல்லத்தை அலங்கரிக்கின்றன. அவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களை பளிச்சென்று ஈர்க்கின்றன.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தொப்பி, கண்ணாடி, வேட்டி-சட்டை உள்ளிட்ட பல நினைவுப் பொருட்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஹாலின் நடுவே கம்பீரமாக நிற்கும் கார் தான் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் இது. இந்தியாவில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பார்வையாளர்களும் இந்த காரின் முன் நின்று படம் எடுத்துக் கொள்வதை பெருமையாகக் கருதுகின்றனர்.
இதற்காகவே இந்த இல்லத்தில் ஒரு புகைப்படக் கலைஞர் இருக்கிறார். பார்வையாளர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை நிற்க வைத்து படம் எடுத்துக் கொடுக்கிறார்.
‘நாடோடி மன்னன்’ படம் வெற்றி பெற்றதும் படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் ஒரு பெரிய வாழ்க்கை கிடைத்தது. அதற்கு நன்றியாக லைட் பாய் முதல் நடிகர்கள் வரை சேர்ந்து கொடுத்த பிரம்மாண்ட வெள்ளிக் கோப்பை இந்த இல்லத்தில் இன்னும் நினைவுகளைத் தாங்கி நிற்கிறது.
இப்படி ஒவ்வொரு பரிசுப் பொருட்களுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதை அந்த நினைவில்லத்தின் பொறுப்பாளர் சுவாமிநாதன் இன்னும் சுவைபட எடுத்துச் சொல்கிறார்.
இந்த நினைவில்லம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. பார்வையாளர்கள் இலவசமாக வந்து பார்த்துச் செல்லும் எம்.ஜி.ஆர் நினைவில்லத்திற்கு செவ்வாய் கிழமை மட்டும் விடுமுறை.
நன்றி: தினமலர் 02.01.2021